எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருப்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்தக் கட்சியின் துண்டறிக்கையில் பிர சுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (16.2.2018) நடத்தப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பள்ளி, நல்லூர் சமுதாய நலக்கூடத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மய்யத்திலும் முருகன் மக்களைச் சந்தித்து மனுக்கள் பெற இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் காவி நிற துண்டறிக்கை அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள முருகன் அரசு சார்ந்த அலுவலாக இங்கு வருகிறார். அரசு சார்பிலான ஆணையத்தின் நிகழ்ச்சியை ஆதாயம் தேடும் விதமாக பாரதீய ஜனதா கட்சியின் சொந்த நிகழ்ச்சி போல் இந்த துண்டறிக்கையில் காட்டியுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் வி.சக்திவேல், தனி வட்டாட்சியர் அ. ரவிச்சந்திரன் ஆகிய அரசு அலுவலர்களின் பெயரும் பாஜக கட்சி நிர்வாகிகள் பெயருடன் சேர்த்து அச்சிடப்பட்டு, அதன் கீழே பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையும் அச்சிடப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இதுபோல் துண்டறிக்கைகள் அச் சிடப்பட்டால், அரசு அதிகாரிகள் பெயர் தவிர்க்கப்பட வேண்டும் என்பது விதி. அதேபோல் தனிப்பட்ட எந்தவொரு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் அரசு அதிகாரிகள் பங்கேற்கக் கூடாது என்பதும் அரசு அலுவலர் நடத்தை விதிமுறையில் உள்ளது.

எனவே, இந்தத் துண்டறிக்கையில் வெளிப் படையாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பெயர் போடப்பட்டிருப்பதுபற்றி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கேட்டபோது,

"பொதுவாக மத்திய அரசு, மாநில அரசு அமைச் சர்கள், அரசு உயரதிகாரிகள், நியமன அலுவலர்கள் வரும்போது மாவட்ட ஆட்சியர் உடன் சென்று நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. எனினும் அரசியல் கட்சியின் துண்டறிக்கைகளில் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயர் பிரசுரிக்கக் கூடாது. என்னிடம் யாரும் இதுபற்றி தொடர்பு கொண்டு அனுமதி கேட்கவும் இல்லை. அவ்வாறு துண்டறிக்கை அச்சிட்டிருப்பதும் தெரியாது. மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் இதுபற்றி விசாரிக்கிறேன்" என்றார்.

அரசமைப்புச் சட்டத்தையோ, அதன் மாண் பையோ மதிக்காத கட்சி பாரதீய ஜனதா. எனவே அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என்ற வேறுபாடு இல்லாமல், தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இழிவான முறையில் பித்தலாட்டத்தில் ஈடுபடுவது அக்கட்சிக்கு கைவந்த கலை.

அரசு சார்ந்த நிகழ்ச்சியை பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நடத்துவதுடன், அதில் மாவட்ட அரசு அதிகாரிகளையும் பங்கேற்கும் விதத்தில் ஏற்பாடு செய்திருப்பது அற்பத்தனமான இந்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறது.

திருப்பூர் மணிகண்டன்,

மாவட்டச் செய்தியாளர்,

‘‘விடுதலை''

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner