எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், மே 8 சிதம்பரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு என்பது தமிழகத்தில் சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் ஒரு அநீதியாகும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழங்கிய மசோதாவை மத்திய அரசு குப்பையில் போட்டு விட்டது. அதற்கு எந்தவித போராட்டத்தை நடத்தினார்கள்? எந்த விதத்தில் அழுத்தம் கொடுத்தார்கள்?.

வேறு மாநிலத்தில் நீட் தேர்வு என்றவுடனே கொதித்தெழுந்து அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் இல்லாத பள்ளிகளா ராஜஸ்தானிலும், கேரளாவிலும் இருக்கிறது.

தமிழர்கள் என்ன சர்வதேச அகதிகளா? தங்க இடம் இல்லாமில்லாமல் உணவில்லாமல் ஒருவிதமான மன அழுத்தத்திலே தேர்வு எழுதி உள்ளார்கள் மாணவர்கள் அதில் எப்படி வெற்றி பெற முடியும்?.

மாணவனின் தந்தை இறந்த செய்தி முதலில் கேள்விபட்டதும் நான் கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் அந்த மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். 3 லட்சம் பணம் தருகிறோம் வேலை தருகிறோம் என்றால் இறந்த உயிர் வந்து விடுமா?

தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கும், ஒட்டு மொத்த நலன்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது. மத்திய அரசு காவிரி நீர் மற்றும் நீட் தேர்வு விவகாரங்களில் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராட வேண்டிய சூழல் உள்ளது.

மதவாத சக்திகளின் பிரவேசத்தையும் தடுக்க வேண்டும், திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத் துடன் தி.மு.க.வோடு கரம் கோர்த்தி ருக்கிறோம்.

இரு தரப்பிலும் நல்ல புரிதல் உள்ளது. நேச உணர்வோடு இது தொடர்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.