எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை, மே 26 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும் என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதற்கு உறு துணையாக இருந்த தமிழக அரசை கண்டித்தும் நெல்லையில் நேற்று மதிமுக  சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் பலியானவர்களின் குடும்பத்தை பார்க்க ஒவ்வொரு வீடாகச் சென்றேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் அந்த ஆலையை தொடர்ந்து நடத்துவோம் என அதன் உரிமையாளர் பேசுகிறார். அந்த ஆலையின் நச்சுக்காற்றால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாகின்றன.

இன்றைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச் சியை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தவில்லை. மக்களே தன் னெழுச்சியாக இந்த போராட்டத்திற்கு திரண்டு வருகின்றனர். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு காவல்துறை கண் காணிப்பாளர் ஆட்சியர் ஆகியோரை ஏன் இந்த அரசு இடமாற்றம் செய்துள்ளது? அவர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றாமல் நான் சாகமாட்டேன்.

குஜராத், கோவா, கர்நாடகம் என பல மாநிலங்கள் உள்ளே விட மறுத்த தொழிற்சாலையை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். ஜெயலலிதா 15 நாளில் அந்த ஆலைக்கு லைசென்ஸ் அளித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும். சென்னையில் இருந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் எடப்பாடி தூத்துக்குடி பக்கம் கொஞ்சம் வந்து பார்க்கட்டும், என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, மே 26 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே  பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென  முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி யுள்ளார். புதுவையில் முழு அடைப்பு  போராட்டத்தின்போது, புதிய பேருந்து நிலையம் அருகே மறியல் செய்து கைதான திமுக  எம்எல்ஏ சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை  சேர்ந்தவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை புதுவை  முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.  புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். முதல்வராக அல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டன் என்ற முறையில்  கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினேன். தூத்துக்குடி துப்பாக்கி  சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்  அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு பதில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதி  தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்றார்.

144 தடை உத்தரவை விலக்க வேண்டும் : திருமாவளவன்

தூத்துக்குடி, மே 26  தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கூறியுள்ளார்.