எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மு.க.ஸ்டாலின்-திமுகவினர் கைது

சென்னை, ஜூன் 23 மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் புரோகித் தொடர்ந்து ஈடுபடுகிறார்'' என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (22.6.2018) நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கம்போல ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தரப்பு கறுப்புக்கொடி காட்டியது. அந்தநேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆளுநரின் கார்மீது கறுப்புக்கொடி வீசியதாகத் தி.மு.க-வினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் தி.மு.க-வினர் 192 பேர்  கூண்டோடு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. இந்த விவகாரம் நேற்று பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தி.மு.கவினர் கைதைக் கண்டித்து சென்னை கிண்டியில் இன்று (23.6.2018) ஆளுநர் மாளிகையை நோக்கி மு.க.ஸ்டாலின் கையில் கறுப்புக்கொடி ஏந்தி திடீரெனப் பேரணியாகச் சென்றார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட தி.மு.க-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  பேரணியில், `ஆளுநர் பதவி விலக வேண்டும்' என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் புரோகித் தொடர்ந்து ஈடுபடுகிறார். இனியும் மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி எனப் பலருக்கு கறுப்புக்கொடி காட்டிய வரலாறு உண்டு. ஆனால் அப்போது யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார். பின்னர் பேரணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner