எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 9- தமிழக முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கலைஞரின் பெயரில் புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப் படும் என்றும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப் படும் என்றும் அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத் தில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் புதன் கிழமை கூறியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் கலை ஞரின் மறைவையொட்டி, புதுச்சேரியில் ஏற்கெனவே ஒரு நாள் அரசு விடுமுறை மற்றும் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 7 -ஆம் தேதியிலிருந்து 13 -ஆம் தேதி வரை துக்கம் கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இத்தீர்மா னம் கடைபிடிக்கப்படும். இந்த 7 நாள் களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத் தப்படாது.

கலைஞர் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரைப் போற்றி மதிக்கும் வகையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை (அமர்வு) ஏற்படுத்தப்படும். இந்த இருக்கை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படும் வகை யில் இருக்கும். இதற்குத் தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்கித் தரும்.

காரைக்காலில் புதிதாகத் தொடங் கப்பட்டுள்ள பட்டமேற்படிப்பு மய் யத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். காரைக்காலில் கோட்டுச்சேரியில் இருந்து திருநள்ளாறு வரை செல்லும் புறவழிச் சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். புதுச்சேரியில் ஒரு தெரு வுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படும்.

அரசு சார்பில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவவும் அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இதற்காக ஒரு குழுவை அமைத்து, இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை நிறுவப்படும்.

கலைஞரின் மறைவு தமிழகம், புது வைக்கு பேரிழப்பு. புதுவை அரசுக்கு அவர் பெரிய பங்காற்றியுள்ளார். புதுவை மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவியுள்ளார். தமிழகத்தில் முதல்வராக அவர் இருந்தபோது, புதுவை காங்கிரஸ் ஆட்சி கேட்ட திட்டங்களைக் கொடுத் தவர். கலைஞரது உடலை அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நாராயண சாமி.