எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மு.க.ஸ்டாலின் சூளுரை

சேலம், பிப்.10 சேலம் மாவட்டம் மகு டஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு நேற்று (9.2.2019) மாலையில் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். மாநாட்டில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார். அவர் பேசியது: ஆதித்தமிழர் பேரவை மாநாட்டிற்கு நான் வந்திருப்பதை எண்ணி யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இங்கே வருவதை கடமையாக கருதி வந்திருக் கிறேன். அருந்ததியர் இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் எப்போதுமே நெருக்கமான தொடர்பு உண்டு. ஒருமுறை தந்தை பெரியாரிடம், அருந்ததியர் சமூகத் தைச் சேர்ந்த  ஒருவர், நாங்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்துவிடுவதால் எங்களுக்கு என்ன பயன்? என்று கேட்டார். மேலும் அவர், திராவிட நாடு கிடைத்துவிட்டால் அப்போது எங்களுக்கு என்ன பயன்? என்றும் கேட்டார்.

திராவிடர் ஆகிவிடுவீர்கள்!

அதற்குத் தந்தை பெரியார் சிரித்துக் கொண்டே, உங்களுக்கு இழப்புதான் என்று பதில் அளித்தார். அதைக்கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், உங்கள் சமூகத்தின் பெயரில் இருக்கும் ஆதிதிராவிடர் என்ற சொல்லில் இருந்து ஆதி நீங்கி, திராவிடர் ஆகிவிடுவீர்கள் என்று பெரியார் பதில் சொன்னார். இப் படிச் சொன்னதும் அந்த நபர் உடனடியாக திராவிடர் கழகத்தில் இணைந்து கொண்டார். நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வு வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர், நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல; சாமானியன் வீட்டுப்பிள்ளை என்று அடிக்கடி சொல்வார். அதனால் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கலைஞர் சாமானியர்கள் மீது அதிக அக்கறை செலுத்தினார்.

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு

கடந்த 2008இல் திமுக ஆட்சியின்போது, அருந்ததியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். இது குறித்து ஆய்வு செய்ய, நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் கலைஞர். அந்தக் குழுவின் அறிக்கை கைக்கு கிடைத்த அய்ந்தே நாள்களில் அமைச்சரவையைக் கூட்டி, உடனடியாக ஒப்புதல் பெற்றார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார்.

அவர் படுத்த படுக்கையாக இருந்தபோதும்கூட அருந்ததியர் சமூகத் தினருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றும் எந்த வகையிலும் தாமதம் ஆகிவிடக்கூடாது என்றும் கருதி, துணை முதல்வராக இருக்கும் நீ போய் அதற்கான பணிகளை செய்து முடி என்று என்னை அனுப்பி வைத்தார். அதன்பிறகு 2009ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அருந்ததியினர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிக் காட்டினேன். அந்த இறுமாப்புடனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனி சாமி அரசு பின்பற்றவில்லை. விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரும். அல்லது, பொதுதேர்தலேகூட வரலாம். அதில் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்படும்.

மோசடி அரசு

இன்றைக்கு மத்திய, மாநில அரசு களுக்கு அடித்தட்டு மக்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. இந்திய பட் ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் மோடி அரசு...அதை மோடி அரசு என்று சொல்ல மாட்டேன். மோசடி அரசு என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக் கிறார்கள். இதே உறுதிமொழியைத்தான் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சொன்னார்கள். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்திருக் கிறதா என்றால் இல்லை. உண்மையில் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு சரிந்திருக்கிறது. டில்லியில் விவசாயிகளை அரை நிர்வாண மாகப் போராட விட்டதுதான் மோடி அரசு செய்த ஒரே சாதனை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வரும் வகையில் திட்ட மிடுகிறார்கள். குட்டிக்கரணமே போட் டாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. காலே இல்லாதபோது எப்படி ஊன்ற முடியும்?

இவ்வாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்ஆர்.சிவ லிங்கம், வீரபாண்டி ராஜா, எஸ்ஆர்.பார்த்திபன், வி.பி.துரைசாமி மற்றும் எ.வ.வேலு, ஆ.ராசா, செந்தில்பாலாஜி,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கொங்குமக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner