
சென்னை, ஆக.2- நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார துண்டிப்புக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காரணம் அல்ல என்றும், புதிய மின்திட்டங்களுக்கு காலதாமதமின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் கடந்த 2 நாள்கள் ஏற்பட்ட மின்சார துண்டிப்புக்கு மின்தொகுப்புகளில் நேரிட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என்றும், மின்சார உற்பத்தியில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மின்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல்துறையின் ஒப்புதல் கிடைக்காததே காரணம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில், மின்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஒரு சில விளக்கங்களை அளிக்க வேண்டியுள்ளது அவசியமாகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் உத்தரவின் முதன்மை நோக்கம் நாட்டில் வனங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.
இந்தியாவில் உள்ள காடுகளையும் அங்குள்ள பல்லுயிர்பெருக்கத்தையும் பாதுகாத்து நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில்தான் மறைந்த முன்னாம் பிரதமர் ராஜீவ்காந்தி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்ற புதிய துறையை கொண்டு வந்தார்.
இதே நோக்கத்தில்தான் வனப்பாதுகாப்பு சட்டமும், வன உயிரின பாதுகாப்பு சட்டமும் கொண்டு வரப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ அதேபோன்று நாட்டின் இயற்கை வளங்களையும், பல்லுயிர்பெருக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமானது ஆகும்.
மின்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பொருத்தவரையில், கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யத்தின் ஆய்வறிக்கையின் ஒரு சில புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
11 ஆவது அய்ந்தாண்டு திட்ட காலத்தில் கூடுதலாக 50 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 12 ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் ஒரு லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தி என்று இலக்கு நிர்ணயித்தனர்.
எனவே, 12 ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கான மொத்த மின்உற்பத்தி திட்டம் ஒரு லட்சம் மெகாவாட் ஆகும். 2011- வரை கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்திக்கு அதாவது கூடுதலாக 60 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டுக்கும் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டதை விட அதிகம் ஆகும்.
பெரும்பாலான நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் அதிகமாவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் வழங்கி வந்திருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித இடைறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்து மின்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வந்துள்ளது.
காலதாமதம் ஏற்படுவதை தடுப்பதற்காக மின்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் ஒப்புதல், வனத்துறை ஒப்புதல் இரண்டையும் ஒரே நேரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், வனத்துறை மற்றும் வனஉயிரின இறுதி ஒப்புதலுக்குப் பின்னரே சுற்றுச்சூழல்துறை ஒப்புதல் வழங்கப்படுகிறது. வனத்துறை ஒப்புதலை பொருத்தமட்டில், 40 எக்டேர் வனப்பரப்பு வரையில், பிராந்திய அளவிலேயே ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதற்கு மேலான நிலப்பரப்பு என்றால்தான் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் வழங்குகிறது.
ஏற்கெனவே இயங்கி வரும் மண்டல அலுவலகங்களுடன் தற்போது கூடுதலாக 4 புதிய மண்டல அலுவலகங்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவாக ஒப்புதல் வழங்கும் வகையில் தகவல்களை உடனடியாக பெறுவதற்காக ஜி.அய்.எஸ். சாட்டிலைட் தகவல் தொகுப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால் குறிப்பிட்ட சில மின்திட்டங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி முற்றிலும் தவறானது ஆகும். கருநாடகா மாநிலம் பிஜப்பூரில் தேசிய அனல்மின்கழக (என்.டி.பி.சி.) மின்திட்டத்திற்கு 25.1.2012 அன்றும், மத்திய பிரதேசம் எஸ்ஸார் மின்திட்டத்திற்கு 20.4.2007 அன்றும், சித்ராஞ்சி ரிலையன்ஸ் பவர் திட்டத்திற்கு 28.5.2010 அன்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தீபங் பள்ளத்தாக்கு என்.எச்.பி.சி. திட்டத்திற்கு உள்ளூர் மக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக, பொதுமக்கம் கருத்து தெரிவிக்கும் கூட்டம் 5 முறை தள்ளி வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட அந்த மின்திட்டத்திற்கான முதல்கட்ட அனுமதி 17.8.2009 அன்று வழங்கப்பட்டது. மத்திய சுபான்ஸ்ரீ என்.எச்.பி.சி. திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி இன்னும் விண்ணப்பமே வரவில்லை.
இதேபோல், குஜராத் மித்விர்தி என்.பி.சி.அய்.எல். மின்திட்டத்திற்கும் ஒப்புதல் விண்ணப்பம் வரவில்லை. மேலும், சவுராஷ்ட்ரா நிலக்கரி மின்திட்டத்திற்கும் வனத்துறை ஒப்புதல் கோரி விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை. கேரளா மாநில தொழில் கழகத்தின் மின்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த மின்திட்டத்திற்கு இயற்கை எரிவாயுவை எந்த வகையில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து அந்த திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
மேற்கண்டவற்றை ஆராய்ந்தால், நாடு முழுவதும் ஏற்பட்ட 2 நாம் மின்துண்டிப்புக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பது தெளிவாக தெரியும். சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் உகந்த மேம்பாடுதான், நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியாக இருக்க முடியும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி, ராஜீவ்காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் வரை அனைவரும் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பல்லுயிர் பெருக்கம் மற்றும் வனப்பாதுகாப்பிலும் உறுதி பூண்டவர்கள்.
மின்சார துண்டிப்புக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை குற்றம் சாட்டுவது அடிப்படையிலேயே தவறானது ஆகும். காரணம் வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் எதிர் எதிர் சக்திகள் அல்ல. அவை ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்தவை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது உத்தரவுகளை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சி பாதைக்கு ஒரு போதும் இடைறாக இருக்காது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.