Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.11- சென்னையில் நாளை நடக்கவிருந்த டெசோ மாநாட்டுக்கு காவல்துறை யினர் திடீரென தடை விதித்துள்ளனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால் வசந்த்குமார் வழக்கை விசாரிக்க மறுப்பதாகத் தெரிவித்தார்.

சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு, திமுக தலைவர் கலைஞர் தலைமையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த திட்ட மிடப்பட்டிருந்தது. இதற்காக, ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு விழா ஏற்பாட்டு பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிந்திருந்தன.

இந்நிலையில், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி அதிமுக வக்கீல் பாலசுப்பிரமணியம், 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விவாதம் நடந்தது.

இறுதியில் நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது குறித்து காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். மாநாட்டுக்கு 2 முறை காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனால், மனு மீது காவல்துறையில் உரிய முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். நீதிபதிகளின் உத்தரவை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு வரை அதிகாரிகளுடன் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். பின்னர், மாநாட்டுக்கு தடை விதிக்கும்வகையில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகனுக்கு காவல்துறை தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீசில், மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளது. பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த, ஒய்எம்சிஏ திடல், ஏற்ற இடம் இல்லை. அதன் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. அதனால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுவார்கள். மெட்ரோ ரயில் பணி வேறு நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால், மாநாட்டுக்கு தடை விதிக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

டெசோ மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, திமுக சட்ட பிரிவு நிர்வாகிகள்  இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினர்.

டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப் பட்டதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை நீதிபதி முருகேசன் வீட்டில், திமுக வக்கீல்கள் சண்முகசுந்தரம், வில்சன், குமரேசன், தண்டபாணி, முனியப்பராஜ், பால் நோபல் தேவகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி, மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரினர். வழக்கை நடத்த நீதிபதி முருகேசன் அனுமதி கொடுத்தார். அதன்படி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பால்வசந்தகுமார் இந்த மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால்வசந்த்குமார் இம்மனுவை விசாரிக்க மறுப்பதாகத் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh