எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாவாணரைப் பார்ப்பனர்கள் மறக்க மாட்டார்கள். காரணம், பார்ப் பனீய சமஸ்கிருத அடிவேருக்கு எரி மலைக் குழம்பினைப் புகுத்தியவர்.

‘‘பாவாணர் நினைவலைகள்’’ எனும் நூலினை அவரின் மகன் தே.மணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘‘தமிழை வட மொழியினின்றும், தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அதற்கென்றே மொழியாராய்ச்சியைக் கற்றாய்ந்தேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகமறியச் செய்ய வேண்டும்‘’ என்று பாவாணரின் கருத் தைப் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.

திருநெல்வேலி மாவட்டம் சங்க ரன் கோவில் திரு.ஞானமுத்தனார்- பரிபூரணம் அம்மையார் ஆகிய வாழ்விணையருக்குப் பத்தாவதாகிய கடைக்குட்டி மகனாகப் பிறந்தவர் தான் தேவநேயனார் (7.2.1902).

வாழ்நாள் எல்லாம் வறுமைச் செந்தேளால் கொட்டப்பட்டவர் என்றாலும், ஆரியத்தின் மூர்க்கக் கொம்பை தன் எழுத்தாணியால் முறித்துப் போட்ட மூண்ட பெரு நெருப்பாகக் கடைசிவரை கனன்றவர் அவர்!

1940 ஆம் ஆண்டில் மொழி ஆராய்ச்சி நூலான ‘‘ஒப்பியன் மொழி நூல்’’ ஒப்பானதும் மிக்கானதும் இல்லாத மேருமலைச் சிகரமாகும்.

அந்தோ, தமிழனின் நிலையை என்ன சொல்ல! அந்நூல் விற்பனைத் தளத்தில் வீழ்ந்துபட்டது. மிகுந்த பண நெருக்கடி, தந்தை பெரியார் வாயிலாக அரை விலைக்கு விற்க நேர்ந்தது என்று இந்நூலாசிரியரும், பாவாணரின் மகனுமான தே.மணி குறிப்பிட்டுள்ளார் (நூல் பக்கம் 37).

பாவாணரின் நெஞ்சில் வேர்ப் பிடித்து நின்ற அந்த வேழத்தின் வேகப் பாய்ச்சல் எத்தகையது?

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திருவரங்கனாருக்குப் பாவாணர் எழுதிய கடிதம் அதற்கான ஆவணப் பெட்டகம்.

அது இதோ:

‘‘அன்பார்ந்த அய்யா,

நலம்; நலமாக.

கடந்த 5000 ஆண்டாகத் தமிழையே பேசித் தமிழாலேயே வயிறு வளர்த்துவரும் பார்ப்பனக் கயவர் சங்க காலத்திலிருந்து இதுவரை ஏராளமான தென்சொற்களையும், தென்னூல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை கொண்டு, நமக்கும், நமது முன்னோர்க்கும் முட் டாட் பட்டங்கட்டி அகமகிழ்ந்து, தூற்றியது போதாதென்று தமிழ் மொழியையும், வடமொழி போல வழக்கொழிந்து சிதையும்படி வழிய மைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலக் குடியரசிற்கும் இந்திக்கும் இயைபு கற்பித்து, அதைச் சட்டசபைத் தேர்தல் நிகழ்ந்து பதவி பற்றும்வரை எழுதாக் கிளவியாக மட்டுமின்றி ஓதாக் கிளவியுமாக மறைத்துக் காத்துத் தீதுநலமறியாத கோடிக்கணக்கான பேதை மக்களின் நம்பிக்கையைப் பல்வகை விரகு நெறியிற் கவர்ந்து இன்று நட்டாற்றிற் கழுத்தறுப்பது போலத் திடுமென இந்தி கட்டாயக் கல்வியைத் தமிழரின் விருப்பத்தைக் கேளாதுஆங்கிலேயரினும்பன் மடங்கு ஆணவத்தோடும், அகங் காரத்தோடும் எடுத்தும் உரப்பியும் கனைத்துக் கூறி வருகின்றனர்’’ என்று அக்கடிதத்தில் அனல் கக்கியுள்ளார்.

சமஸ்கிருதம், இந்தி என்ற இரு பார்ப்பனக் கூறுகள் கொம்பைத் தீட்டிப் பாயும் இக்காலத்தில் பாவா ணரை உரிய முறையில் நினைவு கூரவேண்டாமா? நாட்டு மக்களும் கூர்மை பெறவேண்டாமா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner