எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 14 -விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி தற்போதுஏற்பட்டுள்ளது. மழை முற்றிலும் பொய்த்துப் போனது. காவிரித் தண்ணீரும் வரவில்லை. குடிநீருக்குக்கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பருவ மழையை நம்பி, லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் கருகிப் போய் விட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமன்றி கந்துவட்டிக்கும் கடன் வாங்கித்தான் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். ஆனால், வறட்சியால் பயிர்கள் கருகி விட்ட நிலையில், இதனால், வாழ் வாதாரத்தை இழந்தும் வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் நெருக்கடிக்கு உள்ளான விவசாயிகள், மாரடைப்பாலும், பூச்சி மருந்து குடித்தும், தூக்குமாட்டிக் கொண்டும் தங்களின் உயிரை மாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், அவர்களில் 17 பேரின் குடும்பத்திற்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் என்ற அடிப்படையில் தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே இந்த நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. எனினும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அந்த விவசாயிகளின் குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன. டில்லியில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைரத்து செய்யவேண்டும் என்று 30 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களை மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்வரும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறியவில்லை.இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவா ரணம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு பொதுநல வழக்காடு மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வியாழனன்று இந்த வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்தனர்.

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில், உரிய அக்கறை காட்டவில்லை என்று தமிழக அரசைக் கண்டித்த நீதிபதிகள், விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசாங்கம், தொடர்ந்து அமைதியாக இருப்பது சரியான அணுகுமுறையல்ல என்றும், இதனை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இவ்விவகாரத்தில் 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்த விசார ணையை மே 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner