எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதுவும் நன்மைக்கே. ஆம். பாஜகவின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான தருண் விஜய் சொன்னது நன்மைக்கே. நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்னிந்திய கருப்பர்களோடு சேர்ந்து வாழ்வோமா? என்று அவர் சொன்னதன் பிறகு, தென்னிந்தியாவில் பலருக்கும், பரந்த இந்த இந்திய தேசத்தில், தங்களுக்கான அடையாளம் என்னவென்று புரியத் தொடங்கி உள்ளது.

சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டின் எல்லை ஓர மாவட்டங்களில், மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து, இந்தியை எழுதி, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பை தமிழ் நாட்டில் மீண்டும் புதுப்பித்திடும் ஓர் வாய்ப்பை தந்தார்கள்.

இந்தி படித்தால்தான், இந்தியாவில் சிறப்பான கல்வியும், வேலையும் கிடைக்கும் என்ற பொய் தோற்றத்தை, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்லூரி தரப்பட்டியல் அம்பலப்படுத்தி விட்டது. முதல் நூறு தரவரிசைக் கல்லூரிகளில், முப்பத்தேழு கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை; அறுபத்து ஏழு கல்லூரிகள் தென்னகத்தைச் சேர்ந்தவை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்போது, தன் பங்குக்கு, தருண் விஜய், தென்னிந்தியர்களைக் கருப்பர்கள் என்ற உண்மையைக் கூறி உள்ளார். இராமாயணம் எனும் கதையே, ஆரியர் திராவிடர் போராட்டம்தான் என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக் கினார்கள். அதில் வரும் அரக்கர்கள், குரங்குகள் அனைவரும் திராவிடர்களைக் குறிப்பனவே என்றும் கூறினார்.

ஏதோ தென்னிந்தியாவின் கருப்பர்களை வட நாட்டில் வாழும் இவர்கள் சுமந்து செல்வதுபோல் தருண் விஜய் கருத்தினைக் கூறினார். இப்போது எதிர்த்தவுடன், பின்வாங்கி உள்ளார். எனினும், உண்மை நிலை என்ன?

கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகமும், தென்னிந்தியாவும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே எடுத்துக் காட்டுகின்றன.

எனப்படும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் எந்தெந்த விகிதத்தில்  தங்கள் பங்களிப்பைத் தருகின்றன என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், தென்னக மாநிலங்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திடு கிறது என்பது விளங்கும்.

இந்தியா முழுமைக்குமான முப்பத்திரெண்டு மாநிலங்களும் சேர்த்து 161 லட்சம் கோடி ரூபாய்; இதில் தென்னகத்தின் பங்கு 48.71 லட்சம் கோடி ரூபாய். அதாவது, மொத்த ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு தென்னக மாநிலங்கள் அளிக்கின்றன.

இத்தகைய பங்களிப்பை தென்னக மாநிலங்கள் தந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு இதே அளவில் மத்திய அரசால் திரும்பவும் தரப்படுகிறதா? என்பதை தென்னக மாநில அரசுகள் ஆராயும் காலம் வந்துள்ளது.

திராவிடர் இயக்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1917இல் இங்கே துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பு, பின்னாளில் நீதிக்கட்சியாக ஆட்சியைப் பிடித்து, அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக, பொருளாதார புரட்சிக்கு வித்திட்டது.

நூற்றாண்டு முடியும் இன்றைய நிலையில், இதன் நீட்சியாக தென்னக மாநிலங்களோடு, தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை புதுப்பித்து, தென் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, இதுவே நல்ல தருணம்.

- குடந்தை கருணா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner