எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடு:

தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது

 

காந்திநகர், நவ.8 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, குறைபாடுகளைக் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப் பட்டிருப்பதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் மாநில காங்கிரசு கமிட்டி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்தமனுவில்கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்து வதற்காக 70,182 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந் திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களை முதல் கட்டமாக சோதனை செய்ததில், அவற்றில் 10 சதவீத இயந்திரங்கள் குறைபாடுகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், வாக்குப் பதிவு இயந்திரங்களும் குறைபாடுகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த இயந்திரங்கள், எந்தவொரு வாக்குச்சாவடியிலும்பயன்படுத்தபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, உடனடியாக அவற்றுக்கு சீல் வைக்கப்பட வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையையே

பயன்படுத்தவேண்டும்

மேலும், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அல்லது நீதிமன்றமே ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். இதுதவிர, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்கு, வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அகில் குரேசி, ஏ.ஜே.கோக்ஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனுவுக்கு, தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் அதிகாரியும், மத்திய அரசும், வரும் 13- ஆம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம் முடிவு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 9, 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், முதல் முறையாக மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner