எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.21  புளூ வேல் என்ற இணையதள விளை யாட்டு குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலா ளர்களுக்கும் அறிவுறுத்தல் தாக்கீது அனுப்பப்படவுள்ளது. புளூ வேல் விளையாட்டால் மாணவர்களும், இளைஞர்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்ததை அடுத்து, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சினேகா காலிதா என்பவர் கடந்த மாதம் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புளூ வேல் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 நிமிடம் ஓடக்கூடிய கல்வி குறும்படத்தைத் தயாரிக்குமாறு தூர்தர்ஷன் தொலைக் காட்சிக்கு உத்தரவிட்டது.

இந்தப் படத்தை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டுமின்றி தனியார் தொலைக் காட்சிகளும் முக்கிய நேரத்தில் ஒளிபரப்ப வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “புளூ வேல் போன்ற ஆபத்து நிறைந்த ஆன்லைன் விளையாட்டுகளை நமது நாட்டில் இணையத்தில் தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். இதுபோன்ற மோசமான ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து இளைய தலைமுறையினரைக் காக்க பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner