எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாமர மக்களின் நலன்களைப் பாதுகாக்கும், அவர்களது கருத்துகளை பிரதிபலிக்கும் தன்மை அற்ற மோடி அரசுக்கான   ஆதரவு குறைந்து வருகிறது

2019 - பொதுத் தேர்தலில் அதிக அளவு வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்கு,  எவராலும்  இடையூறு செய்ய இயலாத,  தொடர்ந்து நடைமுறைப்படுத்த  இயன்ற பொது மக்கள் நலன்களுக்கான  சில கொள்கை நடவடிக்கைகளை,  செயல்திட்டங்களை வரும் மாதங்களில் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்.

பிரதீப் ஜிப்பர், ஹர்ஷ் ஷா, ராகுல் வெர்மா

மக்கள் நலன் நாடும் வலதுசாரி தலைவர்கள் உலகின் பல பகுதிகளிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்களில் மிகுந்த புகழ் பெற்றவர்கள் ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆவர்.  என்றாலும் செல்வாக்கு பெற்ற ,  பொதுமக்கள் நலன் நாடும் மற்றும் பல தலைவர்களின் ஆட்சியின் கீழும் பல நாடுகள் உள்ளன. அவர்களில்  இஸ்ரேல் நாட்டில் 2009ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருக்கும் பெஞ்சமின்  நேடயாஹூ என்பவரும்,  2003ஆம் ஆண்டு முதல் முதலில் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் துருக்கி நாட்டில் இருக்கும் ரெசிப் தாயிப்  எர்டோகனும், 2010ஆம் ஆண்டு முதல் அங்கேரி நாட்டின் பிரதமராக இருக்கும் விக்டர் ஆர்பனும், 2016 இல் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோடிகோ டுடர்டியும்,  2016 இல் அய்ந்தாவது முறையாக உகாண்டா  அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோவேரி முசோனியும் அடங்குவர். இந்தியாவில் பா.ஜ.கட்சிக்காக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து, வலதுசாரி தலைவர் நரேந்திர மோடி பெரு வெற்றி பெற்றார். மற்ற வலதுசாரி தலைவர்களைப் போல இல்லாமல், பாமர மக்களின் நலன் நாடும் தலைவர் என்ற மோடியின் புகழும் கவர்ச்சியும், 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரும் நிலையில்,  குறைந்துகொண்டு  வருவதாகவே தோன்றுகிறது. மத்தியில் மோடியின்தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக பல குழுக்கள் ஆயுதங்கள் ஏந்தி போராடி வருகின்றன. பல்வேறுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் போராடி வருகின்றனர்; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதை எதிர்த்து தலித்துகள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேச பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவராலும், மற்றொருவராலும் வயதுக்கு வராத இரு சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் மாநில அரசு காட்டிய தாமதம் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அளவிலான கடுங்கோபம் பரவலாக நிலவுகிறது.

மோடி வெற்றி பெற பின்பற்றிய மூன்று உத்திகள்

மோடியைப் போன்ற பாமர மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் பதவிக்கு வருவதற்கு மூன்று உத்திகளைக் கடைபிடித்து வருகின்றனர். ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போராடும் ஓர் அன்னிய சக்தியாக அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். பொதுமக்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையே  புதிய இளைஞர் வாக்காளர்களைக் கவர்ந்து வாக்குச் சாவடிக்கு இழுப்பதற்கு அவர்கள்  பயன்படுத்திக் கொள் கின்றனர். ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராகவோ அல்லது நாடு உன்னதமான ஒரு நிலையை எட்டுவதற்குக் குறுக்கே நிற்பதாகக் கருதும் கற்பனையிலான ஒரு பகைவருக்கு எதிராகவோ அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். மோடி தன்னை ஓர் அன்னியராகவே காட்டிக் கொண்டார். குறிப்பாக, டில்லியில் உள்ள ஆழ வேரூன்றியுள்ள அரசியல் வாரிசுகளுக்கு சவால் விடுபவராக அவர் காட்டிக் கொண்டார். தனது எளிய சமூகப் பின்னணியைப் பயன்படுத்தி,  தன்னைப் போன்ற ஓர் தேநீர் விற்ற சாதாரண மனிதர் ஒருவருக்கும்,  இளவரசர் போன்று வளர்க்கப்பட்ட ராகுல் காந்திக்கும் இடையேயான போட்டிதான் இந்தத் தேர்தல் என்று மோமடி அறிவித்துக் கொண்டார். உயர் வர்க்கத்தைச் சேர்ந்த காங்கிரசுகாரர்கள் பாமர மக்களின் பிரச்சினை களுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்ல என்று காங்கிரசுகாரர்களைக் கடுமையாக சாடினார். மக்களுக்கு நன்மை தரும் மாற்றங்களைத் தான் கொண்டு வருவதாக அவர் மக்களுக்கு வாக்களித்தார்.

மக்கள் நலன் நாடுபவர் என்ற ஒரு நற்தோற்றத்தின் கவர்ச்சி புதிய வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்தது. 2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை விட 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8 விழுக்காடு வாக்குகள் அதிகமாகப் பதிவாயின.  முன்னேறி வரும் சமூகங்கள் பற்றிய ஆய்வு அமைப்பான லோக்நிதி அமைப்பினால் தொகுக்கப்பட்ட, 2009 மற்றும் 2014 ஆண்டுகளின் பொதுத் தேர்தல்கள் பற்றிய தேசிய தேர்தல் ஆய்வு மய்ய புள்ளி விவரங்கள், 2014ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகளுக்கும், அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களித்ததற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது வெளிப்பட்டது. தொகுதி வாரியாக அதிக அளவில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை, வெற்றி பெற்றவர்கள் பெற்ற அதிகப்படியான வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்தெந்தத் தொகுதிகளில் எல்லாம் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்திருந்தனரோ, அந்தந்தத் தொகுதிகளில் எல்லாம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று தெரிய வருகிறது. வாக்களித்த வாக்காளர் எண்ணிக்கை 15 விழுக்காட்டுக்கும் மேல் இருந்த 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் தே.ஜ.கூ. வெற்றி பெற்றது.  10-15 விழுக்காட்டுக்கும்  அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்த 145 தொகுதிகளில் தே.ஜ.கூ. 125 தொகுதிகளில் 86 சதவிகித அளவில் வெற்றி பெற்றது. 10  விழுக்காட்டுக்கும்  குறைவாக கூடுதல் வாக்காளர்கள் வாக்களித்த 267 தொகுதிகளில் தே.ஜ.கூ. 123 தொகுதிகளில் 46 சதவிகித அளவில் வெற்றி பெற்றது.  2009 இல் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 2014 இல் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த 61 தொகுதிகளில் 21 தொகுதிகளில் தே.ஜ.கூ. வெற்றி பெற்றது. இது வெறும் 34 சதவிகித வெற்றிதான்.

மேலும், கடந்த காலங்களில், 18-25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தேசிய அளவு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்த வகுப்புப் பிரிவில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 52 சதவிகிதத்தினரும், 2009  ஆம் ஆண்டுதேர்தலில் 54 சதவிகிதத்தினரும் வாக்களித்து உள்ளனர். என்றாலும் 2014 இல் வாக்களித்த இத்தகைய புதிய வாக்காளர்கள் 68 சதவிகிதமாக இருந்தபோது,  தேசிய சராசரி 66 சதவிகிதமாக இருந்தது. இது போலவே, 2009  ஆண்டு உடன் ஒப்பிடும்போது, 2014 இல் தேசிய அளவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் நடுத்தரப் பிரிவு மக்களும், ஏழைகளுமே அதிக அளவில் இருந்தனர். இவ்வாறு இளைஞர்களும், நடுத்தரப் பிரிவு மக்களுமே மோடியின் சமூக ஆதரவு அடித்தளமாக விளங்கினர். பொதுமக்கள் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட மோடி பின்பற்றிய உத்தியுடன், ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பின் அமைப்பு ரீதியிலான பலமும் சேர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகள் கொண்டிருந்த இந்தப் பிரிவு மக்களை அதிக எண்ணிக்கையில் பா.ஜ.கட்சிக்கு வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. ஆட்சி அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்தான் மோடி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மோடியின் புகழ் நியாயமான அளவில் நிலையாக இருக்கும் போதும்,  மக்கள் நலன்களில் அக்கறை கொண்டவர் என்ற அவரது நற்தோற்றம் பற்றிய கவர்ச்சி குறைந்து போனது. இனியும், டில்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக படையெடுத்து வந்திருக்கும் ஒரு சாதாரணமாக சமூகப் பின்னணி கொண்ட சில்லறை அரசியல்வாதியாக இருப்பவர் அல்ல அவர். அதற்கு மாறாக ஒரு முழு அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசிற்குத் தலைமை தாங்கும் பிரதமராக இப்போது இருப்பவர் அவர். அவர் தாக்குதல் நடத்திய, சாடிய அதே உயர்வர்க்கத்தின் ஒரு பகுதியாக இன்று விளங்குபவர் அவர். அவரது நடத்தையும், உடைகளும் இதைக் காட்டுகின்றன. துடிப்பு மிகுந்த, நம்பிக்கை நிறைந்த, மக்கள் நலன் நாடும் ஒரு தலைவரது பேச்சு போல அவரது இன்றைய பேச்சு ஒலிக்கவில்லை. அதற்கு மாறாக, மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று மக்களுக்குக் கூறும் சோர்வடைந்து போன வயதான தலைவருடைய பேச்சைப் போலவே இருக்கிறது. இப்போதெல்லாம் மோடியின் பேச்சு, தொடர்ந்து கோபமாகப் பேசும் ஒரு முதியவரின் பேச்சைப் போலவே இருக்கிறது என்று பா.ஜ.க. ஆதரவு இளைஞர்கள் இருவர் நம்மிடம் கூறினர். அரசாட்சியின் மீதுகவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக மக்களின் நலன் நாடுபவர் என்ற  மோடியின் நற்தோற்றமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அவரே அரசாங்கத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டார் என்னும் போது,  தனது செயல் திட்டங்களை நடை முறைப்படுத்தப் படுவதைத் தடுக்கும் எதிரிகள் என்று எந்த அரசு அமைப்பையும் இனி அவரால்  சுட்டிக் காட்டி, குறை கூறி பேசமுடியாது. மோடியால் இன்னமும் தன்னை ஒரு வெளி ஆளாகக் காட்டிக் கொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது இந்தியா மறுபடியும் உன்னதமான நிலைக்கு வருவதைத் தடுக்கும் மறைவான எதிரியை அவரால் சுட்டிக்காட்ட முடியவில்லை என்றாலோ, வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வர இயன்ற அவரது ஆற்றல் பாதிக்கப்படும்.

2019 க்கு முன்னர் மோடியால் மேற்கொள்ள இயன்றவை

அப்படியானால், மோடியால் இப்போது  செய்யக் கூடியது தான் என்ன? அடுத்த மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு ஆண்டு காலமே இன்னமும் இருக்கும் நிலையில்,  தனது அரசின் சாதனைகளைப் பற்றிய கண்ணோட்டத்தைக் குறிப்பிட்ட அளவில் உயர்த்திக் கொள்வது என்பது மோடி அரசைப் பொருத்த வரை இயலாததே ஆகும். மோடியைப் பதவிக்குக் கொண்டு வந்த பொது மக்களின் நலன் நாடும் தலைவர் என்ற அதே உத்தியைப் பயன்படுத்தி மறுபடியும் ஒரு முறை வெற்றி பெறுவது என்பது மோடியால் முடியாது. இப்போது அவர் ஒரு வெளி ஆளுமல்ல; அரசுக்கு எதிரானவரும் அல்ல. அரசு நடைமுறையின் ஒரு பகுதியாகத் தான் இருந்த போதிலும், சவால் விடும் ஒருவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு புதிய மாதிரியிலான மோடி ஒருவரை உருவாக்கிக் காட்டுவதுதான் அவருக்கு எஞ்சி இருக்கும் ஒரே வழியாகும். எர்டோகன், ஆர்பன்போன்ற வலது சாரி தலைவர்கள் சிலரால் இந்த உத்தி வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பதவிக்கு வந்த நாள் முதல் அவர்கள் தங்களை வெளியாட்கள் என்றே  பிரச்சாரம் செய்து கொண்டு வந்துள்ளனர். ஆனால், இந்த உத்தியைப் பயன்படுத்தும் வாய்ப்பும் மோடிக்கு இல்லை. ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே அவர் அதிகாரக் கட்டமைப்புடன் தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டார்.

பொதுமக்களின்  நலன்களுக்காகப் போராடும் கோபம் கொண்ட வெளி ஆள் என்ற தோற்றத்தை இனியும் அவரால் மறுபடியும் கைப்பற்றி பயன்படுத்த முடியாது. அப்படியானால் அவர் என்னதான் செய்வது? 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக அளவு வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்கு, வரும் மாதங்களில் வாக்காளர்களுக்கு ஊக்கம் அளிக்கு வகையில்,  எவராலும் இடையூறு செய்ய இயலாத,  தொடர்ந்து நடைமுறைப்படுத்த  இயன்ற , பொதுமக்கள் நலன்களுக்கான  சில கொள்கை நடவடிக்கைகளை, செயல்திட்டங்களை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். அதிக அளவிலான வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வருவதற்கு மோடியால் முடியாமல் போனால்,  2019 இல் மத்திய ஆட்சி அதிகாரத்துக்கு  மீண்டும் வருவதற்கான பாதை எதிர் பார்ப்பதை விட மிகவும் கடினமானதாக இருக்கும்.

நன்றி: 'தி இந்து' 24-04-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner