எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பில்லை உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 10  உ.பி.,யில் உள்ள, வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் கட்டடத்தை பாதுகாத்து, பராமரிக்க, இந்திய தொல்லியல் துறை தவறிவிட்டதாக, உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது.

முகலாயப் பேரரசர், ஷாஜகான், தன் மனைவி மும்தாஜின் நினைவாக, 1631இல் எழுப்பிய கட்டடம், தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண, ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.

தாஜ்மஹால் கட்டடமும், அதன் சுற்றுச்சூழலும் சரியான முறையில், பராமரித்து, பாதுகாக்கப்படவில்லை என, சுற்றுச்சூழல் ஆர்வலர், எம்.சி. மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள், எம்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹால் கட்டடம், பூச்சிகளால் அரிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. இதை தடுக்க, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.இந்திய தொல்லியல் துறையினர், தங்கள் பணியை சரியாக செய்துஇருந்தால், இப்படியொரு நிலைமை வந்திருக்காது. கடமை தவறிய தொல்லியல் துறையின் பணி, தேவையா... இல்லையா என்பதை, மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.

இந்த புராதன நினைவுச் சின்னத்தில் இருந்து வருமானம் ஈட்டுவதைத் தவிர, மத்திய, மாநில அரசுகள், வேறு எதுவும் செய்வதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது, உச்ச நீதிமன்ற பரிந்துரைப்படி, தாஜ்மஹாலில் ஏற்பட்டு உள்ள சேதங்களை பார்வையிட்டு, அதை சரிசெய்ய, வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது என, அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner