எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 10 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவான் கேரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் சதி செயலில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஆர்டிஅய் மனுவுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், பல்வேறு வட்டாரங்களில் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ, அதிகாரப்பூர்வமில்லாத தகவலின் அடிப்படையில் பிரதமர் மோடி இந்த கருத்துகளை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் அடிப்படையில் எப்படி அந்த கருத்தை பிரதமர் வெளியிட்டார் என்பது தெரிய வேண்டும். பிரதமர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் ஆவார். அரசமைப்பு சட்டத்தின்கீழ் அவர் உறுதி எடுத்துள்ளார். அப்படிப்பட்ட பிரதமர் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவரோ அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை பெறுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு, தலைவர்கள் குறித்து அவர் எப்படி கேள்வியெழுப்பலாம்.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து அதிகாரப்பூர்வமில்லாத வகையிலேயே மோடி பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு மாறாக, அவரை மிகவும் தெளிவாக பேசக்கூடிய நபர் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும், உலக நாடுகளால் கவனிக்கப் படுகின்றன. அப்படியிருக்கையில் உலகத்தின் முன்னணியில் இந்தியா குறித்து எத்த கைய தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் விரும்புகிறார்.

மன்மோகன் சிங் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டு, சுத்த பொய்யாகும். தனது குற்றச்சாட்டுக்காக பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையெனில், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

தேர்தலில் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் குறித்தும், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புத் தலைவர் ஹபீஸ் சயீது குறித்தும் பேசும் பழக்கத்தை பிரதமர் வளர்த்து வைத்துள்ளார். ஆனால், விவசாயப் பிரச்சினை, சிறு வணிகர்கள், வேலையில்லா திண்டாட் டம் குறித்து அவர் பேசுவதேயில்லை என்றார் பவான் கேரா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner