எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 16  இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தற்போதைய நிலையிலேயே தேசம் இருந்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும்.

அந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். 2020ஆம் ஆண்டில் டில்லி, பெங்களூரு, அய்தராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது. தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளது.

நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாநில அரசுகளுக்கும், மத்திய அமைச்சகங்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner