புதுடில்லி, ஜூலை 21 இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய வேலை வாய்ப்புக்கள் குறித்த உறுதி யான தகவல்கள் எதுவும் இல்லை என்று மத்தியஅரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தற்போதைய இந்தியப் பொருளாதார நிலை குறித்து, பைனான்சியல் கிரா னிக்கல் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அரவிந்த் சுப்பிரமணியன் அளித்துள்ளார். அதில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிய வேலைவாய்ப் புகள் உருவாக்கப்பட்டுள் ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அரவிந்த் சுப்பிரமணியன், இதுகுறித்து பேசுவதற்கு உறுதியான தரவுகள் ஏதும் இப்போது நம்மிடம் இல்லை; இறுதியாக 2011- -2012 ஆம் ஆண்டில்தான் வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பின்மை குறித்த ஆய்வு வெளியானது; அதுபோல ஒரு விரி வான ஆய்வறிக்கை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம்; அதை வைத்துவேண்டுமானால் முந்தைய காலத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்திய வேளாண்துறை மிகுந்த நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் கூறியிருக்கும் அரவிந்த் சுப்பிரமணியன், மோடி ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் வறட்சியால் பாதிப்பு இருந்தது; இதனால் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்; இப் போது பருவமழை நன்றாக உள்ளது. ஆனால் அவர்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை; இது விவசாயிகளுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் நிலையை உணர்ந்து, வருவாயை உயர்த்த மாற்று வழிகளைக் கையாள வேண்டியதேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.