எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.25  நாடெங்கிலும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களிலும், அறக் கட்டளை நிறுவனங்களிலும் அவற்றின் சொத்து மதிப்பு, நிர்வாகக் குறைபாடு ஆகியவை குறித்து ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், நிர்வாகக் குறைபாடுகள், தூய்மை பராமரிப்பு நடவடிக்கை, காணிக்கைகளின் முறையான பயன்பாடு, சொத்துகள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க ஏதுவாக, ஆய்வு அறிக்கையை அந்த நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு கூறியுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தின் மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு நிர்ணயித்து நீதி மன்றம் உத்தரவிட்டது.

புரி ஜகன்னாதர் கோயிலில் பக்தர்கள், அங்குள்ள கோயில் சேவகர்களால் துன்புறுத்தப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும் கூறி மிருணாளினி பதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கோயிலின் சுற்றுச்சூழல் தூய்மையற்றதாக இருப்பதாகவும், கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதுடன், மதச் சடங்குகள் வணிக மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

அந்த மனுவின் தன்மையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதன் விசாரணை வரையறையை பரவலாக்கியது.

நாடெங்கிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளிடம் தெரிவிக்க வழிவகை செய்தது.

இந்தியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான பெரிய கோயில்கள், 3 லட்சம் மசூதிகள், ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டுமே 7,000 பழங்காலக் கோயில்கள் உள்ளன என்று இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner