எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வட நாட்டு அரசியல் தளத்தைப் புரட்டிப் போட்ட

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் ஜூன் 25

தான், தேநீர் விற்று வாழ்ந்தவன் என்றும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்றும் கூறும் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி சார்ந்துள்ள பாஜக எனும் கட்சி பார்ப்பனர்களின் மேல் தன்மையை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் ஒரு பிற்படுத்தப்பட்டவரை முன் னிறுத்த வேண்டிய நிலைமை இன்று ஏன் ஏற்பட்டது? பீகார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதற்கு முன்னர், பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று ஒடுக்கப்பட்டவரின் கோட்டையாக மாறியது எப்படி? ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற விளிம்புநிலைச் சமுதாயத்தினர் இன்று அரசியல் கட்சிகளை உருவாக்கி, ஆட்சி பீடத்தில் பங்கு பெறுவதும், உதித்ராஜ் போன்ற இந்திய வருவாய் துறையின் முன்னாள் அதிகாரி, பாஜக நாடாளுமன்ற வேட்பாளராகவே புதுடில்லியில் போட்டியிடுவதும், இதற்கு முன்பு நினைத்துப் பார்த்திட முடிந்ததா?

இந்த அரசியல் மாற்றமெல்லாம் எப்போது நடந்தது? காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பைத் தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பைத் துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-ஆம் ஆண்டில் பிரதமர் ஆனதற்கு பின்புதானே. தேர்தல்நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதி களில் முதன்மையானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற்றுவேன் என கூறிய வாறு, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறி வித்தார். எதிர்பார்த்தவாறே, பார்ப்பனர்கள் கடுமையான எதிர்ப்பை சாலைகளிலும், ஊடகங்களிலும்தெரிவித் தனர்.

கட்சியில், தன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காக, வி.பி.சிங் நாட்டை பிளவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினர். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள், 16.6.1989-இல் புது டில்லியில் வி.பி.சிங் பேசிய போதும் சரி, பின்னர், 18.9.1989-இல் சென்னையில் பேசிய போதும், மண்டல் அறிக்கையை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று வி.பி.சிங் சொன்னதை, வசதியாக மறந்து அல்லது மறைத்து தங்களது எதிர்ப்பை பெருங் கொந்தளிப்புடன் காட்டினர். ஆக, நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திர மக்களின் உரிமைச் சாசனமாம் மண்டல் குழுப் பரிந்துரைகளை 1980ஆம் ஆண்டு முதல் முடக்கி வைத்ததை வெளியில் கொண்டு வந்தவர் வி.பி.சிங். இதற்காக தனிப் பெருமை எதையும் வி.பி.சிங் கொண்டாடவில்லை. மாறாக, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை தனது அரசு நனவாக்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல; பின்னர் 1996-ஆம் ஆண்டில் அய்க்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட பிரதமர் வாய்ப்பை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரதமராகும் வரை, புதுடில்லியில் நுழை யாமல் தவிர்த்தவர்; மீண்டும் 1997-ல் தேவகவுடாவிற்குப் பிறகு, அய்.கே.குஜ்ரால் பிரதமராக வழி வகுத்தவரும் வி.பி.சிங் தான். தனது இறுதிநாள் வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்டமக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டங்களுக்கு அடிகோலியவர் களான அருணாராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போராடியதோடு முடிந்துவிட வில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்தச் சட்டங்கள் நிறைவேற வழி வகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையொட்டி நடைபெற்ற தேர்தலில் மிக அதிகமான இடங்களைப் பெற்று ராஜீவ்காந்தி தலைமையில் பதவியேற்ற காங்கிரசு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து, அம்பானி, அமிதாப்பச்சன் போன்ற பெரிய திமிங்கலங்களின் வரி ஏய்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்று அங்கே நடக்கும் ஊழல்களையும், (போபர்ஸ் உட்பட) அம்பலப்படுத்தி, நேர்மையானவராக அக்கட்சியிலிருந்து விலகி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதிவரைப் போராடிய ஒரு மாமனிதரை, இந்தப் பார்ப்பன, பனியாக் கும்பல்களும் அதன் அடி வருடிகளாகத் திகழும் ஊடகங்களும் என்றைக்காவது பாராட்டியதுண்டா? மாறாக இன்றளவும் புழுதிவாரித் தூற்றித்தான் வருகின்றன. இது தானே அவர்களின் யோக்கியதை.

இதைவிட மிகக் கொடுமை; வி.பி.சிங் அவர்களாலே அடையாளம் காணப்பட்டு இன்றளவும் அரசியல் செய்யும் லாலு பிரசாத், நிதீஷ்குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர், வி.பி.சிங் பற்றி எந்த மூச்சும் விடாமல் இருப்பதுதான். இல்லை யென்றால், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப் படும் என அறிவித்தவுடன், அவரை விட மக்களின் உரிமைக்கு அதிகம் பாடுபட்ட வி.பி.சிங் அவர்களுக்குத் தான் பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என குரல் கொடுத்திருப்பார்களே.  ஆனால், வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர்பதவியையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரைப் போராடினாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாடவேண்டும். இது நமது  கடமை. இந்தக் கடமையை பெரியார் பிறந்த மண்ணில், சமூகநீதிக் காவலருக்கு அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடுவதும், அவருடைய புகழைப் பாடுவதும் இயல்பே.

வாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி.

-குடந்தை கருணா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner