எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் 9.7.2018 அன்று தன் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு ரூ.5,10,000 கோடி அள்ளிக் கொடுத்ததாக, உண்மைக்கு மாறான தகவலை சொல்லி சென்றிருக்கிறார்.

13 ஆவது அய்ந்தாண்டு திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்திற்கு போதுமானதல்ல என்பது உண்மை. ஆனால், அடுத்த அய்ந்தாண்டு காலத்திற்கு வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாகக் கொடுத்து விட்டு, அது ஒரு இமாலய சாதனை என்பது போல பேசியிருக்கிறார்.

15 ஆவது திட்டக் குழுவிற்கான வரையறையில்  இப்போது வரி வருவாயில் மாநிலங்களுக்கு இருக்கும் பங்கை 42 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதே போன்று தென்மாநிலங்களையும், வளர்ச்சியடைந்த மாநிலங்களையும் பாதிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படைக்கு பதிலாக, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி பங்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதனால் எல்லாம் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

இதேபோன்று பொது விநியோக முறையில் 18 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே தற்போது மானிய விலை சர்க்கரையும், மண்ணெண்ணெய்யும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான +2-விற்கு பிந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1,900 கோடி ரூபாய் பாக்கியிருக்கிறது.

தமிழக அரசு மிகக் கடுமையான கடன் சுமையில் சிக்கியிருக்கும் நிலையில் உரிய உதவிகளைச் செய்வதற்கு பதிலாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் பாஜகவின் தலைவர் அமித்ஷா தமிழக மக்களை வஞ்சித்தது அல்லாமல் வாரி வழங்கியது போன்று பேசியிருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதோடு, படாடோபமாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்காமல், எப்போது முடியும் என்றும் தெரிவிக்காமல் மத்திய அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல தேர்தலுக்காக அள்ளி விடும் வெற்று அலங்காரப் பேச்சு என்பதையும் தாண்டி அமித்ஷாவின் பேச்சு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner