எழுத்துரு அளவு Larger Font Smaller Font

400 மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறை சென்றனர்

புதுடில்லி, ஆக. 10 நாடு முழுவதும் விவசாயத்தையும், தொழில்களையும் சீர்குலைத்து ஒட்டுமொத்த மக்களின் வாழ் வாதாரங்களை அழித்துவரும் மோடி அரசே, ஆட்சியை விட்டு வெளியேறு என முழக்கமிட்டு, ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போர் நாடு முழுவதும் பேரெழுச்சியுடன் வியாழனன்று நடைபெற்றது. தமிழகம் தவிர, நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் லட்சக் கணக்கானோர் இப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றனர். தமிழகத்தில் திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி இப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய தொழிற்சங்க மய்யம் (சிஅய்டியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய பேரியக்கங்களின் அழைப்பை ஏற்று, மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்துடன் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9, 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய மக்களின் பேரெழுச்சி துவங்கிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள், விவசாயிகள் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. கொல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கானோர் அணி திரண் டனர். திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் பங்கேற்று உரையாற்றினார். திரிபுராவில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது மாநில பாஜக அரசு தடியடி தாக்குதல் நடத்தியது. இதற்கு சிஅய்டியு மற்றும் சிபிஎம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் சிகார் நகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று கைதாகினர். விவசாயிகள் இனி தற்கொலை செய்ய மாட்டோம், உரிமைகளுக்காக போராடுவோம் என அவர்கள் முழக்கமிட்டனர். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பேரெழுச்சியுடன் போராட்டம் நடைபெற்றது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடை பெற்ற போராட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை பங்கேற்று பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner