எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், செப்.7- தெலங்கானா மாநில சட்ட மன்றம் கலைக்கப்பட்டது. காபந்துமுதல்வராக சந்திர சேகர ராவ்நீடிக்க ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப் பட்ட தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாக 2014-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இக்கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில அமைச்சரவையை கலைப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ்  வழங்கினார். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு நேற்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.