எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வி.சீறிதர் -

(500, 1000 ரூபாய் மதிப்புள்ள  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன்மூலம்  நரேந்திர மோடி மேற்கொண்ட  அறுவைசிகிச்சை போன்ற தாக்குதல்  பெரும்பாலான ஏழை மக்களின் வாழ்வைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டதுடன், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, முன் எப்போதுமே இல்லாத அளவில்,  ஒரு மாபெரும் அளவிலான வருவாயையும், சொத்தையும் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மாற்றியளித்துள்ளது.)

தங்களது சொந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதியைத் திரும்பப் பெறுவதற்காக, நவம்பர் மாதம் முழுவதிலும், கோடிக்கணக்கான இந்திய மக்கள் வங்கிகளுக்கு வெளியேயும், ஏ.டி.எம்.களிலும் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருந்தனர். டிசம்பர் மாதமும் ஓடிவிட்டது; என்றாலும் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஒட்டு மொத்த நாட்டு மக் களும் மணிக்கணக்கில் இத்தகைய வரிசைகளில் நின்று கொண்டிருந்தது மட்டுமன்றி, ஏறக்குறைய 100 பேர் மாண்டனர் என்றும் நாட்டின் பல்வேறு பக்கங்களிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் உண்மையில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பெருங்கோபம் கொள்ளவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ செய்யாத மக்கள்,  தங்களின் மனநிறைவின்மையைக் காட்ட  பேசாமல் இருந்தனர் என்பதுதான்.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த சோதனையின் இரண்டாவது மாதத்தில் நாடு தட்டுத் தடுமாறி நுழைந்தபோது, இது ஏழைகளின் மீதான, இதற்கு முன் எப்போதுமே நிகழ்ந்திராத தாக்குதல்  என்பது வெகுவிரைவில் தெரிந்துவிட்டது. நாடு இப்போது எதிர் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை இதற்கு முன்பு எப்போதும் சந்தித்ததில்லை என்பதுடன், இதனைப் பற்றி கற்ற றிந்து கொள்வதற்கான வரலாற்று முன்னுதாரணம் உலகின் எந்தப் பக்கத்திலுமே இருக்கவில்லை. நாடு முழுவதிலும் இருந்து வரும் அறிக்கைகளும், அவற்றை உறுதிப்படுத்தும் 12 மாநிலங்களில் இருந்து நமது செய்தியாளர்களிடமிருந்து வந்த தகவல்களும், இந்த முட்டாள்தனமான, அசட்டையான, முன்யோசனையற்ற, கண்மூடித்தனமான, பின்விளைவுகளைப் பற்றி சிந்திக் காத பொருளாதாரப் பரிசோதனை, கற்பனை செய்துகூட  பார்க்க முடியாத அளவில் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

தான் வாங்கும் பொருள்களுக்காகத் தனது வங்கிக் கணக்கு அட்டையைத்  தேய்க்கும் ஒரு பிச்சைக்காரனைப்பற்றி தந்திரமான, சிடுமூஞ்சித் தனமான பிரதமர் நரேந்திரமோடி  காணும் கனவு, ஏழைகளின் பால் வெறுப்பையும், அலட்சியத்தையும்  மட்டுமே கொண்டுள்ள மனநிலையைக் காட்டுவதுடன், ரொக்கப் பணப் பரிமாற்றமே அற்ற ஒரு ‘மாயா லோகத்தில்’ இந்தியா நுழைவதற்கு ஒத்துழைப்பதாகவும் இருக்கிறது. தான் முன்னொரு காலத்தில்  சாயா விற்பவனாக இருந்ததுபற்றி பெருமையுடன் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி,  ரொக்கப் பணப் பரிமாற்றத்தின் மூலமாக மட்டுமே, தங்களின் சிறு அளவிலான வாழ்வாதாரங்கள் சுழன்று கொண்டிருக்கும் ஏழைகள் மீது பெருத்த இழிவையும், அவமானத்தையும் ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறது.

மிகமிகக் குறைந்த அளவில் லாபம் ஈட்டும், இந்திய கிராமங்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் உள்ள காய்கறி சில்லறை விற்பனையாளர்கள், தேநீர்க் கடைக்காரர்கள், சிறுசிறு உணவு விடுதி உரிமையாளர்களைப் பொருத்தவரை இது நியாயம் அற்றதாகவே தோன்றுகிறது. விவசாயிகளுக்கு, குறிப் பாக விதைப்பு விதைக்க வேண்டிய இந்த நேரத்தில் ரொக்கப் பணம் என்பது மிகமிக முக்கியமானது. வங்கி நிறுவனங்கள் என்ற தங்களின் சட்டப்படியான  உரிமை பெற்றுள்ள கூட்டுறவு சங்கங்கள் எந்த விதப் பணப் பரிமாற்றமும் செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்திருக்கும் நிலையில், கடந்த அறுவடையில் கிடைத்த வருமானத்தில் தங்களிடம் மிச்சமிருந்த பணத்தைத் தியாகம் செய்ததுடன், அடுத்து பயிர் செய்வதையும் சிறு, குறு விவசாயிகள் கைவிட்டு விட்டனர் அல்லது அலட்சியப்படுத்தி விட்டனர்.

இந்தியாவில் இது திருமணக் காலமாக இருப்பதில் ஒரு நல்ல காரணமும் இருக்கிறது. இப்போது நடக்கும் அறுவடைதான்  சிறிது வருவாயைக் குடும்பங் களுக்குக் கொண்டு வரும். ஆனால், வங்கிகளில்  இருந்துபணத்தைத்திரும்பப்பெறுவதற்குவிதிக் கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,  கைவிடப் பட்ட திருமணங்கள் பற்றிய தகவல்களும், மகிழ் வுடன் இருக்கவேண்டிய நேரத்தில் கண்களில் கண்ணீருடன் மக்கள் இருப்பது பற்றிய தகவல்களும், நாடு முழுவதிலும் இருந்து வந்து  குவிந்து கொண்டே இருக்கின்றன.  டில்லிக்கு அருகில் உள்ள காசியாபாத், மூரதாபாத் (பித்தளைப் பாத்திரங்கள்),  பிரோசாபாத் (கண்ணாடிப் பொருள்கள்), திருப்பூர் (பின்னலாடைகள்), கர்நாடக மாநில மாண்டியா (வெல் லத் தொழில்) போன்ற சிறு நகரங்களில் இருந்த சிறு தொழில்கள், செயல்பட இயலாமல் மூடப்படும் ஒரு பேரழிவு நிலையை பிரதிபலிப்பதாக உள்ளன. இப்போது இருப்பது போல, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்பாடுகளும் அழிவுக் கோட்டிற்கு முன் எப்போதுமே தள்ளப்பட்டதில்லை.

மோடியின் அறிவிப்பு வெளிவந்தவுடனேயே,  ஆட்சியாளர்கள் தங்களது இலக்குகளையும், நிபந்த னைகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே சென்றதால்  ஏற்பட்ட பெரும் அளவிலான குளறுபடிகளே  நாட்டு மக்களின் இத்தகைய பரிதவிப்பிற்குக் காரணம் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. ரொக்கப் பணமற்ற சமூகம் என்பது போன்ற புதிய இலக்குகளை அரசு தனது செயல் திட்டத்தில் சேர்த்திருப்பது ஒன்றே, உதவியற்ற பொதுமக்களின் மீது குவிக்கப்படும் கடுந்துயரங்களுக்கான அரசின் திறமையின்மையைப் பற்றி அளிக்க இயன்ற  கருணை நிறைந்த விளக்கமாக அமையலாம். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்த அறிவிப்பு எந்த அளவிலான செல்வ மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, பரிதாப மனநிலையில் இருந்து மாறிச் செல்லவேண்டும். இந்த நாட்டின் மிகமிகப் பெரிய செல்வந்தர்கள் எல்லாம் கூட கற்பனை செய்து காண இயலாத அளவில், மக் களிடையே பொருளாதார சமத்துவமின்மை மேலும் மேலும் பெருகிக் கொண்டே  செல்ல இது காரணமாகிறது.

முட்டாள்தனமாக

பெரும் பிழை செய்த மூவர் கூட்டணி

பல வழிகளிலும் பேரழிவு ஏற்பட்டதற்கும், இன்னமும் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதற்கும் இறுதியான முழுப் பொறுப்பையும், முட்டாள்தனமாக பெரும் பிழை செய்த மூவர் கூட்டணியான மோடி, அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஆகியோரே ஏற்கவேண்டும். தனது அடையாளம் தெளிவாகப் பதிந்திருக்கும் இச்செயலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள மோடி ஏப்போதுமே கூச்சப் படவோ, வெட்கப்படவோ மாட்டார். இதில் அருண்ஜேட்லியின் பங்களிப்பு என்பது, அவரது பெயரால், அவரது உத்திரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட  இந்த ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்யும் நட வடிக்கையில்  இருந்து எழுவதாகும். ரூபாய் நோட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பான படேல், நவம்பர் 8 ஆம் தேதி முதல் கடைபிடித்து வரும் ஆழ்ந்த  மவுனம், அவரால் அளிக்க முடிந்த விளக்கத்தை விட அதிக அளவில் விளக்கம் அளிப்பதாக அமைந் துள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைத் துறையின் தலைவராகவும்,   ரிசர்வ் வங்கியின் உதவி ஆளுநராகவும் இருந்த படேல், இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்திருக்கிறார். கடுமையான ஒரு தேர்வு நடைமுறையின் மூலம் திறமையானவர்களை வடிகட்டி தனது பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ரிசர்வ் வங்கியில், ரூபாய் நோட்டு நிர்வாகத்துக்குத் தேவையான அடிப்படைத்  திறமைகள் கொண்ட பணி யாளர்கள் எவரும் இல்லை என்பது நம்பமுடியாதது ஆகும்.

ஆனால்,முதலில்குளறுபடிகளைப்பற்றிபார்ப் போம். கடந்த ஃப்ரன்ட் லைன் இதழில் குறிப்பிட்டிருப்பது போன்று,  செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டு களின் மொத்த மதிப்புக்கு இணையான மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடாமல் போன மாபெரும் தவறே, நாடு முழுவதிலும் வங்கிகளிலும், ஏ.டி.எம். களிலும் முடிவே இல்லாத வரிசைகளில் பொதுமக்கள் கால வரையறை இன்றி, நின்று கொண்டிருக்க வேண்டிய அவல நிலை உருவானதற்கு பொறுப்பாகும். இது இந்திய ரூபாய்க்கு இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் அவமானமாகும். போதிய அளவிற்கு ரூபாய் நோட்டுகள் இல்லாமல் போனதும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட யதேச்சதிகாரம் மிகுந்த கட்டுப்பாடுகளும், கிராமம் - நகரம் என்ற புவியியல் ரீதியிலான வேறுபாடுகளை மட்டுமல்லாமல், எந்த வங்கிகளுக்கு, அவற்றின் எந்தக் கிளைகளுக்கு,  எவ்வளவு ரூபாய் நோட்டுகளை அளிப்பது என்பதிலும் காட்டப்பட்ட வேறுபாடுகள் காரணமாக, ரூபாய் நோட்டு என்பது விற்பனைக்கு வரும்  மற்றொரு பண்டம் என்ற நிலைக்கு தாழ்த்தப்பட்டுவிட்டது. மோடியின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒரு மாதகாலம் கடந்த பிறகும், புதிய 500 ரூபாய் நோட்டுகளை பெரும்பாலான இந்திய மக்கள் பார்க்கவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலானதாகவும், தீவிரமானதாகவும் ஆக்குகிறது. சுழற்சியில் இருக்கும் ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பீட்டில் பாதி அளவு மதிப்பீடு கொண்ட நோட்டாக இருப்பதும்,  மக்களால் தங்களது பணப்பரிவர்த்தனையில் மிக அதிகமாகப் பயன்படுத்துவதும்  இந்த 500 ரூபாய் நோட்டுதான்.  புதிய 2000 ரூபாய் நோட்டை எவருமே விரும்பவில்லை. பெங்களூரில் இருந்து 1. 37 கோடி ரூபாயைத் திருடிச் சென்ற ஓட்டுநரும் கூட, 44 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளைப் புறக்கணித்துவிட்டுச் சென்றுள்ளார்.

(தொடரும்)

நன்றி: ‘ப்ரண்ட் லைன்’,  23.12.2016

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner