எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வி.சிறீதர் -

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

தொடக்கம் முதற்கொண்டே, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டது இலக்குகளை மாற்றிக் கொண்டு இருப்பதைப் பற்றியதாகத்தான் இருந் தது. முதலில் அது கருப்புப் பணத்தையும், அதனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட  கள்ள நோட்டு மற்றும் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி அளிப்பதையும் தடுப்பது ஆகியவற்றையே  இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது. நமது ஏழை சகோதரர்கள் போலவே பணக்காரர்களும் வங்கிகளில் வரிசைகளில் நின்று கொண்டிருக்கின்றனர் என்று கூறிய மோடி, அந்த இலக்கை கருப்புப் பணத்தின் மீதான போர் என்பதன் மீது மாற்றினார். இப்போது அது ரொக்கப்பணமே இல்லாத ஒரு சமூகம் என்ற இலக்கை நோக்கி திருப்பப் பட்டுள்ளது. செல்பேசிகளைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் வங்கி ஏ.டி.எம். அல்லது கடன் அட்டைகளைத் தேய்ப்பதன் மூலம் பணப்பரிவர்தனை செய்து கொள்ளச் செய்வதே இதன் இலக்கு. இத்தகைய இலக்கு மாற்றத்தில் டிசம்பர் 2 அன்று நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளார். வேறு எந்த விவரங்களும் இல்லாமல்,  பழைய ரூபாய் நோட்டுகளில் குறிப்பிடத் தக்க அளவில், புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதே மூச்சில்,   புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, பரிவர்த்தனையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டுமென்ற தேவை இல்லை என்றும் கூறி இருக்கிறார். ரொக்கப் பணம் என்ற தளைகளில் இருந்து விடுவித்து, ஒரு புரட்சிகரமான பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்திய நாட்டிற்கு, குறைந்தது இரண்டு காரணங்களுக்காகவாவது, பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஈடான மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட வேண்டிய தேவை இல்லை என்ற கருத்தையே இது பிரதி பலிக்கிறது.

முதலாவதாக, அருண் ஜேட்லியால் கடைபிடிக்கப்படும் நிதிக் கொள்கை, உண்மையான நவீன உலகில் அது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றியதல்ல.  வளர்ந்து வரும் துடிப்பு மிகுந்த ஒரு பொருளாதார நடைமுறை என்பது , பல மாற்றங்களிடையே செயல்படுவது என்பதையும், தேசிய அளவிலான வருவாய் அல்லது அதில் இடம் பெற்றுள்ள துறைகள், அல்லது அதன் நுகர்வு மற்றும் முதலீடு பற்றியது மட்டுமல்ல என்பதையும், ரூபாய் நோட்டு வடிவில் செல்வத்தை வைத்திருக்க விரும்பும் ஒரு சமூக மனப்பான்மை பற்றியதும் ஆகும் என்பதையும், அருண் ஜேட்லி கவனிக்கத் தயாராக இருந்தால், ஒரு சாதாரணமான பட்டகீழ்ப் படிப்பு பயிலும் பொருளாதார மாணவனாலும் அவருக்குக் கூற இயலும்.  மற்றவரின் துன்பங்களைப் பற்றி கவலைப்படாத, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியாத முறையில், முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினைகளை அருண் ஜேட்லி கையாள்வது,  தான் நேரடியாகப பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டிய ஒட்டுமொத்த குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதில் இருந்து தவிர்ப்பதற்கு மட்டுமே அவர் இதனைக் கூறுவதாகத் தோன்றுகிறது.

திட்டக்குழு இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிதாபத்திற்குரிய கேலிச்சித்திரம் போன்ற நிதித் துறை அமைப்பு முதற்கொண்டு,  பேரழிவின் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அமைச்சர்கள் வரையிலானவர்களால் , கடந்த சில நாட்களாக அரசின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும்,  புதிய வித்தை போன்ற சகலரோக நிவாரணியாக  தெரிவிக்கப்படுவது, ரொக்கப் பணத்திற்கு பதிலாக மற்ற வடிவங்களிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் நடைமுறையைப் பற்றி யதுதான். இது முற்றிலும் பொறுப்பற்ற தன்மை என்பது மட்டுமல்லாமல்,ஏழைகளுக்கு பாதுகாப்பின்மையைஏற் படுத்துவதுமாகும். ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை நடை முறை களை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி அரசு அதிகாரிகளுக்குக் கற்பிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக கார்ப்பரேட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் போல், நிதித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ரொக்கப் பணமற்ற இதர வடிவங்களிலான பரிவர்த்தனை நடைமுறை, குறிப்பாக ஈ-பணப்பை சேவை மற்றும் செல்பேசி வணிக சேவைகள் பற்றி இந்தியாவில் உள்ள டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு வணிக அமைப்பான மீடியா நாமா என்ற அமைப்பு மேற்கொண்ட  ஒரு பகுத்தாய்வு, இதில்  அளந்து அடி எடுத்து வைப்பதும், படிப்படியான அணுகுமுறையை மேற்கொள்வதும், அறிவுடைமையாகும் என்று எச்சரித்துள்ளது. எடுத்துக் காட்டாக இவற்றில் பெரும்பாலான சேவைகள் பயன்படுத்துவோரின் தொலை பேசி நிலையையும், அடையாளத்தையும் படித்து அவர்களின் இருப்பிடங்களைக் கண்டறிகிறது என்பதைக் கூறலாம். இத்தகைய இதர வடிவங்களிலான ரொக்கப் பணமற்ற பரி வர்த்தனை நடைமுறைகள் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதையும், அது பற்றிய  புள்ளிவிவரங்கள் திரட்டப்படுவதில் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லை என்பதையும் மீடியா நாமா சுட்டிக் காட்டுகிறது. பயன்படுத்துவோரின் பழக்கவழக்கங்களின் பெரும் பகு தியை இந்த சேவை நிறுவனங்களால் திரட்டுவதற்கு இயலும் என்பதையும், அவர்களைப் பற்றிய நுண்ணிய தன்குறிப்புகளைத் தயாரிக்கவும்,  அவர்களுக்கு சந்தை சேவைகளை அளிக்கவும் அவற்றால் இயலும் என்பதையும் மீடியா நாமா சுட்டிக் காட்டுகிறது. வாடிக்கையாளர்களின் ரகசியங்களைக் காப்பது பற்றிய விதிகள் ஏதும் இந்தியாவில் இல்லை என்பதால், இத்தகைய நிறுவனங்களால் தகவல்கள் திரட்டப்படுவது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றின் மீது பயன்பாட்டாளர் எந்தக் கட்டுப்பாட்டையும் பெற்றிருக்க மாட்டார். ஆனால் இது தெளிவற்ற, குழப்பமான ஒரு முறையில் புரிந்து கொள்ள இயன்ற ஒரு பிரச்சினை அல்ல இந்த ரகசியம் பேணுவது என்பது. இத்தகைய நிறுவனங்கள் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, புள்ளி விவரங்களைப் மிகப்பெரிய அளவில் திரட்டி சேமித்து வைத்திருப்பதும் கூட, குறிப்பிடத் தக்க அளவில் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாகும்.

ரொக்கப்பணமற்ற பரிவர்த்தனை என்னும் கானல் நீர்

ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனை உலகம் ஒன்றிற்கு மற்றுமொரு அணுகுமுறைதான் தொலைபேசி வங்கி பரிவர்த் தனை நடைமுறையும் கூட. இதில்  பயன்பாட்டாளரின் ரகசியத்தை சமரசம் செய்து கொள்வது போன்ற பிரச்சினைகள் உள்ளன என்பதுடன், பாதுகாப்பு ஆபத்து நிறைந்ததாகவும் அது விளங்குகிறது. வங்கிகளால் வழங்கப்பட்ட 80 கோடி கடன் அட்டைகளில் 45 கோடி அட்டைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்று  அருண்ஜேட்லி வருத்தப்பட்டுள்ளார். ஒரு சிறு வியாபாரியையோ அல்லது ஒரு கிராம வாசியையோ அவர் கேட்க முயன்றிருந்தால், அது எதனால் என்பதை அவர் உணர்ந்து கொண்டிருப்பார்.  அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும், அதற்கான செலவுடன் வருகிறது. தனது வலைதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில்,  மீடியா நாமாவின் தோற்றுநர் நிகில் பாவா  ‘‘ரொக்கப் பணத்திற்கும், டிஜிட்டல் பணத்திற்கும் இடையே ஒற்றுமை இல்லை. பணமற்ற பரிவர்த்தனையுடன் ஒப்பிடும்போது,  ஒரு ரூபாயை ரொக்கமாக செலுத்துவது பயன்பாட்டாளருக்கு சவுகரியமாக இருப்பதுடன்,  குறைந்த செலவுடையதாகவும் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

முதலாவதாக, சமமற்ற அளவில் செல்பேசிகள் நாட்டில் விநியோகிக்கப்பட்டிருப்பது,  பரிமாற்ற மேடைகளுக்கு சமமற்ற அணுகுமுறைகள் இருப்பதை தெரிவிக்கிறது. மேலும் பாவா சுட்டிக் காட்டியபடி, 34 . 3 கோடி இணையதள இணைப்புகளில், 19. 2 கோடி இணைப்புகள் குறுகிய அலைவரிசை இணைப்பு களாகும். ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனை நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு ஒரு சிறிய அளவினர் மட்டுமே தயாராக உள்ளனர். வங்கி அட்டை பயன்பாடு என்பது இப்போது, 100 அட்டைகளில் 18 பரிவர்த்தனை மட்டுமே செய்யப்படுகிறது என்ற அளவிலேயே இருக்கிறது என்பதையும் பாவா சுட்டிக் காட்டுகிறார். கடன் அட்டை பயன்பாடு 100க்கு 3.18 அளவில் மட்டுமே உள்ளது.

வாடிக்கையாளர் பக்கத்து பரிவர்த்தனை புள்ளி விவரங்கள் இவ்வாறு இருக்கும்போது, விற்பனையாளர் அளவிலான பரிவர்த்தனை புள்ளி விவரங்கள் இன்னமும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. விற்பனை நிலையில் நாடெங்கிலும் உள்ள , பெருநகரங்களில் கவனம் செலுத்தும்,   24.60 லட்சம் இயந்திரங்களில், இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 693 இயந்திரங்கள் மட்டுமே உள்ளன என்றும்,  4000 பேர்களுக்கு ஒரு இயந்திரம் வீதம் சீனாவிலும், பிரேசிலிலும் உள்ளன என்றும் கூறும் எர்னஸ்ட் அன்ட் யங் அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வருவதை பாவா சுட்டிக் காட்டுகிறார். தேவதைகளும் செல்ல அஞ்சக்கூடிய இடத்திற்கு ஓடிச் செல்லும், மோடியின் ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனை செயல்திட்ட ஆதரவாளர்களும், நிதி அமைச்சக அதிகாரிகளும், மூரதாபாதில் மோடி பேசும்போது குறிப்பிட்ட பிச்சைக்காரனும் இத்தகைய ரொக்கமற்ற பரிவர்த்தனைகளுக்கு, 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலான மாதாந்திர வாடகையும், பரிவர்த்தனைக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதற்கு சற்றும் அக்கறை காட்டவில்லை.

பாவா கீழே குறிப்பிட்டுள்ளபடி கூறுவதன் மூலம் தனது கருத்தை நிலை நாட்டுகிறார். ‘‘ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கும், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஒரு ரூபாய் நோட்டு காணாமல் போய்விடுகிற அளவில் மட்டுமே முந்தைய ரொக்கப்பணப் பரிமாற்றத்தில் இழப்பு இருக்கும் என்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனையில் உயர்ந்த அளவிலான இழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதும்தான்.’’ ரொக்கப்பணத்தைப் போலவே டிஜிட்டல் பணத்திற்கும் அது ஆற்றவேண்டிய ஒரு பங்கு அல்லது பணி இருக்கிறது. என்றாலும் டிஜிட்டல் நடைமுறைகளுக்குக் கண்களை மூடிக் கொண்டு ஓடுவது,  அனைத்து குடிமக்களின் பாதுகாப்பு பற்றிய அபாயத்தை அதிகப்படுத்துகிறது என்று  பாவா எச்சரிக்கிறார். ஏறக்குயை ஒரு நூற்றாண்டுக்கு முன் 1919 இல் அமைதியின் பொருளாதார பின்விளைவுகள் என்ற தனது நூலில் ஜான் மெனார்டு கெயின்ஸ் என்பவர், ‘‘லெனின் கூறுவது சரியானதுதான். தற்போதுள்ள சமூகத்தின் அடித்தளத்தை நிச்சயமாகவும், மென்மையாகவும் மாற்ற இயன்ற ஒரே வழி ரூபாய் நோட்டுகளை தடை செய்வதுதான். இந்த நடைமுறை பொருளாதார சட்டத்தில் மறைந்துள்ள அனைத்து சக்திகளையும் அழிவின் பக்கம் பயன்படுத்தி செயல் படுவதால், பத்து லட்சம் பேரில் ஒருவரால் கூட அதனை அடையாளம் காண இயலாமல் போய்விடுகிறது’’ என்று கூறியுள்ளார். ஆனால், லெலினைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது தவறான பிரயோகம் என்றும், இந்தியாவின் இன்றைய பரிதவிப்பை அவரது விவரிப்பு மிகச் சரியாகக் குறிப்பிடுவதாக இருப்பதாகவும்,  2009 ஆம் ஆண்டின் பொருளாதாரக் கண்ணோட்டங்கள் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான செல்வம் ஏழைகளிடம் இருந்து மாற்றப்பட்டுள்ளது விவசாயத் துறையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. சிறுதொழில் துறையில் கவனம் செலுத்தப்பட்டிருந்த பெரும் அளவிலான தொழிற் செயல்பாடுகள் தங்கள் வியாபாரத்தை நிரந்தரமாகக் கூட, பணப் பரிவர்த்தனையை அதிகம் சார்ந்திராத பெரிய தொழில் நிறுவனங்களிடம்  இழந்துவிடக்கூடும். சுருங்கக் கூறின், வேறு வழிகளில் செய்திருக்க இயலாத அளவில், செல்வத்தை பெரிய தொழில்நிறுவனங்களிடமும், பணக் காரர்களிடமும் குவிப்பதற்கான ஒரு வழியை இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது ஏற்படுத்தி விட்டது. அதனால்தான், செல்வம் மேலும் மேலும் யாரிடம் குவிக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம் அரசின் இந்த செயல்பாட்டை மிகச் சிறந்த தாக்குதல் என்று வரவேற்றுள்ளனர்.

மாண்டியாவுக்கு அருகில் உள்ள கிராமத்தின் கூட்டம் நிறைந்திருந்த ஒரு வங்கிக்கு வெளியே உட்கார்ந்திருந்த,  சித்த கவுடா என்ற பட்டுப் பண்ணை உரிமையாளர், தனது இரண்டு சுழற்சி பட்டு அறுவடையைக் கைவிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.  ஒரு சுழற்சி ஒரு மாதகாலம் நீடிக்கும். பட்டின் விலைமேலும் சரியும் என்று அவர் அஞ்சுவதே இதன் காரணம். இந்த வேதனைக்கு இடையேயும், மோடியின் இந்த நடவடிக்கையை அவர் வரவேற்கிறார். ‘‘கருப்புப் பணத்தின் மீதான மோடியின் தாக்குதல் சரியானதுதான் . . . என்றாலும்’’ என்று அவரது குரல் தழைகிறது. தான் கூற வந்ததை அவரால் முடிக்க முடியவில்லை.  புகழ்பெற்ற தொலைக்காட்சி செய் தியாளர் அண்மையில் கூறியது போல, பொதுமக்கள் கூற விரும்பும், ஆனால் கூற இயலாத, பல ‘ஆனால்’களை ஊடகத் தினர் கவனிக்க வேண்டும். அதனால்தான் மக்கள் இப்போது பெருங்கோபம் கொள்வதற்கு மாறாக, தங்களின் மனநிறைவின்மையை வெளிப்படுத்தாமல் மவுனமாக உள்ளனர் என்பதை இது விளக்கும்.

(நிறைவு)

நன்றி: ‘ப்ரண்ட் லைன்’,  23.12.2016

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner