எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- மஞ்சை வசந்தன் -

உத்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. பெரும்பான்மை பெற்று ஆட்சி  அமைத்தாலும் அமைத்தது, அத்தனை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களும் ஆணவத்தின் உச்சியில் நின்று ஆர்ப்பரிக் கின்றனர்; அச்சுறுத்துகின்றனர்!

ஆனால், உண்மையில் உத்திரப்பிரதேசத்தில் பி.ஜே.பி.யின் செல்வாக்கு குறைந்துள்ளது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி பெற்ற வாக்கு களைவிட, இச்சட்டமன்றத் தேர்தலில் 4% வாக்குகளைக் குறைவாகவே பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பி.ஜே.பி ஆட்சிக்கு வர காரணமாயிற்றே தவிர மற்றபடி பி.ஜே.பி உத்திரப்பிரதேச மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்ததால் அல்ல.

உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்,

மேற்கண்ட பட்டியல்படி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகள் ஒன்றுசேர்ந்து தேர்தலில் நின்றிருந்தால் எல்லா இடங்களையும் இக்கூட்டணி வென்று பி.ஜே.பி. படுதோல்வி அடைந்திருக்கும்.  இன்னும்  சொல்லப் போனால் ஒரு இடத்தில் கூட பி.ஜே.பி வெற்றி பெற முடியாத நிலை வந்திருக்கும்.

ஆக, மதம்சாரா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகளிடையே ஒற்றுமையின்மையால்தான் பி.ஜே.பி. பெரும் வெற்றி பெற்றதேயல்லாமல், பி.ஜே.பி.யின் செல்வாக்கு வளர்ந்ததால் அல்ல. ஊடகங்கள் ஊதிப்பெருக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யே பெரும்பான்மை பெறும் என்பது உண்மைக்கு மாறான, மிகையான கற்பனைக் கணிப்பு.

பீகாரைப் பின்பற்றி உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் சேர்ந்து மகாக் கூட்டணி அமைத்திருந்தால், பி.ஜே.பி. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை நிலை. மாறாக, இவர்கள் சிதறி நின்றதால், பி.ஜே.பி. பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த ஆபத்து நேர்ந்தது!

மாயாவதியின் மனமாற்றம்:

சட்டமன்றத் தேர்தலில் பாடம் கற்ற மாயாவதி அவர்கள், உடனடியாக உண்மையை உணர்ந்து, இனிவரும் தேர்தலில் சமாஜ்வாடியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து பி.ஜே.பி.யை வீழ்த்துவோம் என்று உறுதி கூறியுள்ளார். மாயாவதியின் இம்மனமாற்றம் மதவெறிக் கூட்டத்தை மருளச் செய்துள்ளது.

அகிலேஷ் ஆதரவு:

மாயாவதி அவர்கள் அறிவித்தவுடன், அகிலேஷ் அவர்கள் அதை வரவேற்று நாங்களும் ஒன்று சேரத் தயார் என்று உடனே அறிவித்தார்! இதனால், காங்கிரசும் சேர்ந்து மாபெரும் கூட்டணி அமைவது உறுதியாகிவிட்டது.
கம்யூனிஸ்ட்களின் கடமை:

இச்சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் உடன் நின்று, கட்டுக்குலையாது கூட்டணிச் சேர்ந்து, மதவாத பி.ஜே.பி.யை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடையச் செய்ய வேண்டும்.

எல்லா மாநிலங்களிலும் மகாக் கூட்டணி வேண்டும்:

பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மதவெறி ஆட்சிக்கு எதிராய் எல்லா மாநிலங்களிலும் உள்ள மற்ற கட்சிகள் தங்களுக்குள் உள்ள பிளவை அகற்றி, பி.ஜே.பி. எதிரணி என்ற இலக்கில் ஒன்றுசேர்ந்து மகாக் கூட்டணி அமைத்து, மதச்சார்பற்ற, மாநில உரிமை காக்கும் அரசு மத்தியில் அமைய, ஒற்றுமையாய் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். இதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு மிக முக்கியமானது.

பிரிந்து நின்று எதிரியிடம் எல்லோரும் தோற்பதைவிட, தங்களுக்குள் கூட்டு அமைத்து இடங்களைப் பகிர்வதன்  மூலம் எல்லோரும் குறிப்பிட்ட அளவு வெற்றி பெறலாம். அதன்வழி ஆட்சியிலும் பங்கு பெறலாம் என்பதுதானே அறிவுக்கு உகந்தது?  அதுதானே மானத்திற்கு ஏற்றதாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மற்றும் பி.ஜே.பி.யை எதிர்க்கக்கூடிய சிறிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து, பி.ஜே.பி 234 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழக்கும்படிச் செய்ய வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காட்டுகின்ற தமிழர் நலன் சார்ந்த வழியில், அனைவரும் செயல்பட்டு மதவாத சக்தியை வீழ்த்த வேண்டும். மனிதநேயத்தையும், மத இணக்கத்தையும், மாநில உரிமைகளையும் மீட்க வேண்டும்.

மத்தியில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி:

மத்தியில், மதச்சார்பற்ற அனைத்து மாநிலக் கட்சிகள் பங்கு பெறும் கூட்டாட்சி காங்கிரஸ் தலைமையில் உருவாவதே இந்தியாவை மீட்டெடுக்க ஒரே வழி!

காங்கிரஸ் வெறுப்பை கம்யூனிஸ்ட்டுகள் கைவிட்டு, நாட்டின் நலன் கருதி கூட்டாட்சிக்கு வழி செய்ய வேண்டும்.
இலஞ்சமா? மதவெறியா?

இலஞ்சம் என்பது  அகற்றப்பட வேண்டியது. மதவெறி என்பது ஒழிக்கப்பட வேண்டியது. இலஞ்சம் என்பது பாதிக்கக் கூடியது; மதவெறியென்பது அழிக்கக் கூடியது. எனவே, முதலில் ஒழிக்கப்பட வேண்டியது  அழிவைத் தரும் மதவெறியே! அடுத்து அகற்றப்பட வேண்டியது இலஞ்சம்.

இலஞ்சத்தைப் பேசி, மதவெறி ஆட்சிக்கு வழிசெய்வது மக்கள் துரோகமாகும்!

தெலங்கானாவைப் பாருங்கள்: மாநிலக் கட்சி ஆட்சி தெலங்கானாவில் நடப்பதால், அங்கு சிறுபான்மையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பி.ஜே.பி. ஆளும் உ.பி.யில் இடஒதுக்கீடு நீக்கப்படுகிறது.

எனவே, பி.ஜே.பி. அகற்றப்பட வேண்டும், மாநிலக் கட்சிகள் ஆட்சி மலர வேண்டும். மதச்சார்பற்ற மனிதநேய ஆட்சிக்கு அதுவே வழி. அரசியல் கட்சிகளும், இளைய சமுதாயமும் அவசியம் சிந்தித்து உடனடியாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner