எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், உலக புத்தகத் திருநாளை முன்னிட்டு வாசிப்பை நேசிப்பாக்குவதற்காக சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் ஏப்ரல் மாதத்தில் கொளுத்தும் வெப்பத்தில் குளுகுளு அரங்கில் ஒரு புத்தகக் காட்சியை, கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரில் பதிப்பகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மனதில் கொண்டு, அனைத்துப் புத்தகங்களையும் 50 விழுக்காடு தள்ளுபடியில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அது மக்களிடையேயும், பதிப்பகங்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்ற ஆண்டு கலந்து கொண்ட பதிப்பகங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கான சான்றாகும். இதுவொரு மக்கள் திருவிழாவாக மாறியுள்ளது. அதுவும் எப்படிப் பட்ட திருவிழா? அறிவுக்கான ஆர்வத்தை அளவெடுக்கும் குதூகலத் திருவிழா!

கேப்டன் ஜே.சுரேஷூக்கு புத்தகம் வாங்கிக்கொடுத்த தமிழர் தலைவர்!

புத்தகக் காட்சியை திறந்து வைத்தபின் உள்ளே சென்று ஒவ்வொரு பதிப்பகமாக பார்வையிட்டுக் கொண்டே செல்லும் போது, தமிழர் தலைவர், துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், இந்திய கடற்படைக் கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் அறிஞர் அ.இராசரத்தினம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், விழிகள் பதிப் பகம் வேணுகோபால், ஹிக்கின்பாதம்ஸ் சந்திர சேகர், எமரால்டு பதிப்பகம் எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன், சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் விடுதலை மேலாளர் சரவணன், பெரியார் திடல் மேலாளர் சீதாராமன் மற்றும் பார்வையாளர்கள் சூழ்ந்துள்ள நிலையில்-  நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இந்தியக்கடற்படை கேப்டன் ஜே.சுரேஷ், தமிழர் தலைவர் இருவரும் புத்தகங்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது கேப்டன் ஜே.சுரேஷ் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புத்தகங்களை எடுத்து ரசீது போடச்சொல்லிக் கொடுத்து பணம் கொடுக்க முற்பட்டதும், தமிழர் தலைவர் முந்திக்கொண்டு தனது பையிலிருந்து பணத்தைக் கொடுத்துவிட்டார். அவர் தடுக்க, இவர் கொடுக்க சில மணித்துளிகள் அங்கு அன்பும், விருந்தோம்பலும் இனிமையுடன் நடந்து முடிந்தது.

ஒரு தந்தையின் பெருமிதம்!

திராவிடர் இயக்கம்தான் நமக்கு புத்தகம் படிக்கவும் கற்றுக்கொடுத்தது என்று சொன்னால் சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். பலரும் இருந்தாலும் தந்தைபெரியார்தான் குடிஅரசையும், விடுதலையையும் தேநீர்க்கடைகளில் படிக்கவும், அதன் மூலம் அரசியலுக்கும் பழக்கியும் விட்டவர். அதன் தொடர்ச்சிதான் இன்று தமிழகம் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது.  புத்தகங்கள் என்றாலே பெருமைக்குரியது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தன் இரண்டு குழுந்தைகளுடன் வந்தி ருந்த ஒரு தந்தை அந்தக் குழந்தை குவிந்து கிடந்த புத்தகங்களைப் பார்வையிடுவதை மிகுந்த பெருமிதத்துடன் வளைத்து வளைத்து ஒளிப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.

புத்தகத்தைப் பற்றி மட்டும்தானே!

ஊடகத்துறையினர் மீண்டும் மீண்டும் வந்தாலும் தமிழர் தலைவரும், கேப்டன் ஜே.சுரேஷூம் சளைக்காமல் பேட்டி கொடுத்தனர். அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொலைக்காட்சி தாமதமாக வந்து தனியாக பேட்டி கேட்டதும் தமிழர் தலைவர் மிகுந்த உற்சாகமாக, புத்தகத்தை பற்றி மட்டும்தானே! என்று கேட்டதும் கூடியிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.

திராவிடர்களைத் தலைநிமிர வைத்தவர் தந்தை பெரியார்!

இந்தியக்கடற்படை கேப்டன் ஜே.சுரேஷ் அவர்களிடம் பெரியார் வலைக்காட்சிக்காக பெரி யாரைப்பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங் கினார். ‘‘பெரியாரைப்பற்றி எனக்குத் தெரிந்தது கொஞ்சம்தான். ஆனால் அவரைப்பற்றி நிறைய சொல்ல வேண்டும். அதில பெரிய விசயம் என்னன்னா திராவிடர் இயக்கத்திற்கு வித்திட்டவர் அவர்தான். தனித்துவமாக திராவிடர் என்று வரவேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது. அந்தக் கனவை மேற்கொண்டு கொண்டுபோக நிறைய தொண்டர்களை விட்டுச் சென்றிருக்கிறார். அதுதான் பெருமைப்படக்கூடிய விசயம். அவருடைய எண்ணங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன நமது மனங்களில்! இது மிகவும் பெருமைப்படக்கூடிய விசயம். ஏனென்றால் ஆண்டாண்டு காலமாக நம்மை அடக்கி வைத்தவர்களின் மத்தியில் நம்மை தலைதூக்கி நடக்க வைத்தவர் பெரியார் என்பது என்னுடைய கருத்து. தமிழர்கள் நாம் என்றும் நன்றி உணர்ச்சியோடு அவரை நினைவுகூர்ந்து,  அவரது எண்ணங்களை, அவரது எண்ணங்கள் மூலமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் மற்றும் கனவு. நன்றி!'' என்று அதே உற்சாகத்துடன் முடித்துக்கொண்டார்.

ஒரு புத்தகம் வாங்கினால்

ஒரு பெரியார் ஒளிப்படம் பரிசு!

சந்தியா பதிப்பகத்தில் எந்த புத்தகம் வாங்கி னாலும் தந்தை பெரியாரின் படத்தை வழுவழு தாளில் வடித்து இலவசமாகக் கொடுக்கிறார்கள். துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘கோவில் நுழைவுப்போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வாங்கியபோதுதான் இந்த படத்தைக் கொடுத்தார்கள். பிரித்துப்பார்த்தவுடன் நமக்கு இன்ப அதிர்ச்சி! ஆம், தந்தை பெரியார் படம்தான். அட! கரும்பு தின்ன கூலியும் கொடுக் கிறார்களே என்று அவர்களுக்கு நன்றி சொன்னோம்.

சென்னை புத்தகச் சங்கமம் நமது சந்ததியினருக்கான புதையல்!

கேப்டன் ஜே.சுரேஷ் தந்தைபெரியாரின் காட்சியகத்திற்கும், நினைவிடத்திற்கும் சென்று ஒவ்வொன்றையும் மிகவும் பொறுமையாகவும், உற்சாகத்துடனும் கண்டுகளித்தார். இறுதியில் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு உள்ளே சென்றவர் வியந்து போனார். முழுவதுமாகச் சுற்றிப்பார்த்தார். சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களான மேலாளர்கள் சீதாராமன் மற்றும் சரவணன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்களும் விவரித்தனர்.

பிறகு வருகைப்பதிவேட்டில் அவர், ‘‘இந்த புத்தகக் களஞ்சியத்திற்கு வந்தது எனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இது நமது சந்ததியினருக்கான புதையலாக அமையும் என்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் அளிக்கிறது. வாழ்க! வளர்க!'' என்று எழுதி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார்.

- உடுமலை வடிவேல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner