எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது உண்மையா?

திருச்சி சிறீரங்கம் தேசிய சட்டப் பள்ளி  பார்ப்பனப் பண்ணையமா?

-  ‘‘சர்ச் லைட்’’

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி, திருச்சி, சிறீரங்கத்தில் தமிழக அரசின் ரூ.200 கோடி செலவில் கட்டடங்களுடன் நாவலூர் குட்டல்பட்டில் அமைக்கப்பட்டது. 2013-2014 இல் இருந்து செயல்பட்டு வருகிறது.

1. அண்மையில் துணைவேந்தர் நியமனம் - eminent academicians with administrative experience என்ற தகுதிகளுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எஸ்.எஸ்.தார்வேஷ், ரண்பீர்சிங், மமேந்திரபால் சிங் என்ற மூவர் குழுவால் மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. வேந்தராகத்(Chancellor) திகழ்ந்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் அவர்கள் வற்புறுத்தலின்படி கும்பகோணம் பார்ப்பனரான திருமதி. கல்பனா சங்கரன் பெயர் இணைக்கப்பட்டு (இரண்டாவது முறை கட்டாயப்படுத்தப்பட்டு, கொடுக்கப்பட்ட மூன்று பெயர்களில்) அவரையே துணை வேந்தராக தலைமை நீதிபதி நியமித்தார். அவருக்கு எவ்வித நிர்வாக பின்புலமும் அடிப்படைத் தகுதியும் இல்லையென தேர்வுக் குழு சொல்லியும், கட்டாயத்தின் பேரில் குலத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு ஜனவரி 2017 இல் பொறுப்பேற்றார்.

2. பொறுப்பேற்றது முதல் அவர் ஜாதிய மேலாண்மைப் போக்கைக் கடைபிடிக்கிறார். நிர்வாகக் கட்டடத்தில் பணியிலிருந்த மூத்த பேராசிரியர் அமிர்தலிங்கம் (தலித்) வேறு பொது அறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டு தகுதி குறைக்கப்பட்டார்.

3. தேர்வாணையர் பொறுப்பு மற்றும் இருப்பவர்களிலேயே முதுநிலைப் பேராசிரியரான தர்மராஜா (பிற்படுத்தப்பட்ட யாதவ குலம்) பந்தாடப்பட்டார். அவரை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என துறை விசாரணை போலியாக ஏற்பாடு செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

4. ஹைட்ரோ கார்பன் போராட்ட மக்களை சந்தித்து Survey Field Study செய்யச் சென்ற மாணவர்கள்மீது நடவடிக்கை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

5. தலைமை அலுவலகத்தில் Technical Assistant ஆக பணியில் இருந்த இரு கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் தலைமைக் கட்டடத்தில் (Administrative Block) நுழையக் கூடாது என வேறு கட்டடங்களில் சிறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை பணி நீக்கம் செய்ய முயற்சி நடைபெறுகிறது.

6. குறிப்பிட்ட பார்ப்பனர் பிரிவு சார்ந்த வட இந்திய, மற்றும் பிற பகுதிகளைச் சார்ந்த மாணவர்களை ஒரு குழுவாக இணைத்து மாணவர்களுக்குள் பிணக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

மற்ற தேசிய சட்ட பல்கலைப் போன்று இப்பல்கலைக் கழகத்தை மாற்றுவேன் என அறைகூவல் விடுத்து ஜாதி மேலாண்மையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் துணைவேந்தர் மீது உடன் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் அரசு நிதி உதவியால் இயங்கும் இச்சட்டக் கல்லூரி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படத்தக்க விதத்தில் நிர்வாக மேலாண்மை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் பார்ப்பனிய மேலாண்மையும், எஜமானத்துவ மனுதர்ம போக்கும் நிர்வாகத்தால் மாற்றப்படாவிட்டால், விரைவில் இந்த தேசிய சட்டப்பல்கலைக் கழகத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி.

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி கால் ஊன்றிட, திருச்சியில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களையும் குறி வைத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner