எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தாமலேயே,

நிர்வாக அமைப்பை மாற்றி அமைப்பதன் மூலம்

இந்துத்துவாவை நடைமுறைப்படுத்த முனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி (2)

- ஏ.ஜி.நூராணி -

 

இத்தகைய தவறான வழிக்கு வழிவகுக்கும் ஒரு கோட்பாட்டைப் போற்றி வளர்க்க வேண்டியது மற்றொரு தேவையாகும். 1990 நவம்பர் 19 அன்று எல்.கே.அத்வானி , ‘‘இனிமேல், இந்துக்களின் நலன்களுக்குப் பாடுபடுபவர்கள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்யமுடியும்’’ என்று அறிவித்தார்.  மதச் சார்பற்ற அரசியல் தனது உள்ளடக்கங்களைத் துறந்துவிடுவதை உறுதிப் படுத்திக் கொள்ளும் பொறுப்பு நிர்வாகத்தைச் சேர்ந்தது. இந்து ராஜ்யம் அரசமைப்பு சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவை இல்லை. இந்து ராஜ்யம் நிர்வாக அளவிலேயே உறுதிப்படுத்திக் கொள்ளப்பட இயலும்.

தேசிய கருத்தொற்றுமை

ஒரு மக்களாட்சி அரசு,  சில ஆதாரமான அடிப்படைக் கொள்கைகள் மற்றும் ஒரு தேசிய கருத் தொற்றுமையைச் சார்ந்து  இருப்பதாகும். தேர்தல் மூலம் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி அரசு, ஆட்சி செய்யப்படும் மக்களின் ஒப்புதலைச் சார்ந்து உள்ளதாகும். அறிவு மேதையான பேரா. ஹான்ஸ் ஜே. மோர்கன்தாவு என்பவர் மிகமிகத் துல்லியமாக இந்த உண்மைகளையெல்லாம் வெளிக் கொண்டு வந்துள்ளார்.

‘‘எந்த ஒரு நாகரிக அரசுக்கும் கருத்தொற்றுமை என்பது ஒரு முன்நிபந்தனையாகும். ஒரு குறிப்பிட்ட மக்களாட்சி அரசுக்கு, ஆட்சி செய்யப்படும் மக்களின் ஒப்புதல் ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது. அனைத்து நாகரிக அரசியல் சமூகங்களும், தாங் கள் தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண் டிருப்பதற்கு, சமூகத்தின் அடித்தளங்களைப் பொருத்த அளவிலான ஒரு கருத்தொற்றுமைக்குக் கடமைப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, ஒரு மக்களாட்சி சமூகத்தின் குடிமக்கள், தங்களது நோக்கங்கள், இந்த நோக்கங்களை எட்ட அவர்களால் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் மற்றும் எந்த நிறுவனங்களுக்காக தாங்கள் சேவை செய்ய இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒரு சமூக ஒப்பந்தத்தைத் தங்களுக்குள் தாங்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள்.’’

‘‘ஆட்சிசெய்யப்படுபவர்களின்ஒப்புதல் என்பது மக்களாட்சி அரசியலின் அடிப்படை களுடன் தொடர்புடையது அல்ல; ஆனால் அந்த கருத்தொற்றுமையால் பாதுகாப்பு அளிக்கப் படுவதாகவே அது கருதப்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட மக்களாட்சி அரசின் குறிப்பிட்ட தேவைகள் பற்றிய கருத்தொற்றுமை அது.  கருத்தொற்றுமை இல்லாமல் எந்த ஒரு நாகரிக சமூகமும் பிழைத்திருக்க முடியாது; ஆட்சி செய்யப்படுபவர்களின் ஒப்புதல்  இன்றி,  ஒரு மக்களாட்சி அரசு ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது. மக்களாட்சியின் சக்தி மிகுந்த முன் நிபந்தனையான கருத்தொற்றுமை என்ற பொதுவான அடித்தளத்தில் இருந்தே அந்த கருத்து வேற்றுமை எழுகிறது என்பதால், அரசாளப்படுவோரிடையே எழும் கருத்து வேற்றுமை, விசுவாசமற்ற செயல் என்று வண்ணம் தீட்டிக் காட்டப்படமாட்டாது.  மக்களாட்சிப் போட்டியின் ஆற்றல், அனைவருக்கும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புத் திறந்தே இருக்கிறது என்பதால், இன்று மாறுபட்ட கருத்து கொண்டவரே நாளை ஆட்சியாளராக ஆகவும் வாய்ப்பு உள்ளது. கருத்தொற்றுமையுடன், ஆளப்படுவோரின் ஒப்புதல் சமன்படுத்தப்படுவதன் மூலம்,  கருத்து வேற்றுமையை  மக்கள் விசுவாசமின்மையுடன் சமன்படுத்துகின்றனர்.’’

சகிப்புத்தன்மை அற்ற ஒரு கட்சி, தனது சொந்த கோட்பாட்டையே கருத்தொற்றுமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, அதனைத் திணிக்க முனையும்போது,  கருத்து மாறுபாடு கொண் டவர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறது. ஒரு புதிய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அரசு சார்ந்திருக்கும் கருத்தொற்றுமையுடன், ஆட்சி செய்யப்படுவதற்கான அனுமதியை அது  அடையாளப் படுத்தப் படுதுகிறது. இந்தப் புதிய கருத்தே கருத்தொற்றுமைதான். அதாவது, பொது மற்றும் தனிப்பட்ட  அதிகார எல்லைகள், முன்னதன் நிபந்தனைகளுடன் சங்கமிப்பதுதான். அந்த கண்ணோட்டத்தில், பொதுக் கொள்கையில் இருந்து தனிப்பட்டவர் கருத்து மாறுபடுவது மிகுந்த தொல்லை தரும் ஒன்று என்பதுடன், விசுவாச மின்மையைப் போன்ற மோசமான தன்மையைக் கொண்டதுமாகும்.

‘‘தனது கொள்கைகளுக்கு ஆதரவு தரும் கருத்தொற்றுமையை உருவாக்கும் அமெரிக்க அரசின் தொடர்ந்த முயற்சிகள், தனியார் துறை களில் இருந்து வெளிப்படும் விமர்சனங்களால், தோற்கடிக்கப்படுகின்றன. அரசோ, தனது கண் ணோட்டத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையிலேயே, அவ்வாறு கருத்து மாறுபடுபவர்களைப் பொறுப் பற்றவர்கள் என்று அழைக்கிறது. அரசின்  இத்தகைய முயற்சிகள் எல்லாம், அமெரிக்க சமூகத்தின் பாரம்பரியமான உறுதிப்பாடுகளால் ஆதரிக்கப்படுபவையாகும். பொதுக் கருத்துகளை உருவாக்கும் மக்கள் ஊடகங்களை எட்டுவதற்கான அரசின் ஆற்றலுக்கும், அவை அளிக்கும் ஆதரவுக்கும் பக்கத்தில் கூட தனியார் கருத்து வேற்றுமையால் நெருங்கவும் முடியாது. அமெரிக்க உளவுத் துறை கடைபிடிப்பது போன்ற ஓர் இணையான, முறையான ஒரு ஏமாற்று வேலையினாலும்கூட அவர்கள் ஆதரிக்கப்படுகின்றனர். அனைத்துப் பொதுத் தகவல்களையும் திரட்டி வைத்திருக்கும் ஓர் உயர்ந்த அரசு அதிகாரி, ஊடகத்தினரால் அரசின் கைப்பாவைகள் என்று குறிப்பிடப்பட்டதுடன், இங்கே பார், எந்த அமெரிக்க அதிகாரியாவது உண்மையை உன்னிடம் கூறுவார் என்று நீ நினைத்தால், நீ ஒரு முட்டாள்தான். அதை நீ கேட்டாயா? முட்டாள்’’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘‘இது மக்களாட்சித் தத்துவமல்ல; சர்வாதிகார தத்துவமே.’’ (உண்மையும் அதிகாரமும் பக்கம் 19-20, 53-54.) ‘‘சர்வாதிகாரம் எவ்வாறு தொடங்குகிறது’’  என்ற அத்தியாயத்தைப் பார்க்கவும்.  மோடியின் வடிவத்தில் ஒரு கதாநாயகரை உருவாக்குவதிலும், அவருக்கு ஆதரவாக ஆளப் படுபவர்களின் ஒப்புதலைப் பெறுவதிலும், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, இந்திய ஊடகத்தினரில் பெரும்பகுதியினர், குற்றத்துக்கு துணை செல்பவர்களாகவே உள்ளனர்.

அமைச்சரவையே பிரதமரின்

அடிமைக் கூட்டம்தான்

ஒரு கட்சியாக இருந்த பா.ஜ.க.வை மோடி விழுங்கிவிட்டார்.  அது இப்போது அவரது கைகளில் வெறும் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங்,  ஏன் இந்திரா காந்தியின் தொடக்க ஆண்டுகளிலும் கூட, அமைச்சரவை நடைமுறை நன்றாகவே செயல்பட்டு வந்தது. மோடியோ அமைச்சர்களை அடிமைகள் என்ற அளவில் தரம் தாழ்த்திவிட்டார். சர்வாதிகாரம் வளர்ச்சி அடைவதன் ஓர் அம்சம் இது. அதன் மற்றொரு அம்சம் மிகமிக ஆபத்தானது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் இந்துத்துவா என்ற நஞ்சைப் பரப்புவதே அது.

இந்திய தேசியத்தை அழித்து கலாச்சார

தேசி யத்தை உருவாக்கும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். அமைப்போ, அதன் அரசியல் முகமான ஜனசங்கம் மற்றும் பா.ஜ.கட்சிகளோ,  மதச்சார்பின்மை கொள்கையை மய்யமாகக் கொண்ட தேசிய கருத்தொற்றுமையை எப்போதுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. அது வரை நண்பராக இருந்த அவரது புதுடில்லி இல்லத்தின் புல்வெளியில், 1989 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் முடிந்தவுடன், பா.ஜ.க. வின் ஓர் உயர்மட்டத் தலைவருடன் இந்தக் கட்டுரையாளர்  பேசிக் கொண்டிருந்த செய்தி இப் போது நினைவுக்கு வருகிறது. 1984 இல் வெறும் 2 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டிருந்த பா.ஜ.க.க்கு 1989 இல் 85 இடங்கள் கிடைத்திருந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்த அவர், எந்த வித ஒளிவு மறைவுமின்றி தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். ‘‘சிலை உடைப்பவரது உருது பெயர் என்ன’’ என்று கேட்ட அவரே,  நான் பதில் அளிக்கும் முன், பட்க்ஷிகான் என்று பதில் கூறிவிட்டு, மேலும் அவர், ‘‘அண்மைக் கால ஆண்டுகளில் அமைக்கப்பட்ட சிலைகளை நாம் உடைக்க வேண்டும்’’ என்று விளக்கிவிட்டு, இரண்டாவதாக, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் அணிசேரா கொள்கை இரண்டையும் உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் சொல்லாமல் விட்ட மூன்றாவது அம்சத்தை, அதற்கு சில நாட்களுக்குப் பிறகு மும்பையில் பேசும்போது வெளிப்படுத்திவிட்டார்.   ‘‘கீதை, கங்கை, பசு ஆகிய புனிதமானவை இந்தி யாவில் ஏளனம் செய்யப்படுகின்றன’’ என்று அவர் கூறினார். உடைக்கப்பட வேண்டிய சிலை எது என்று அவர் கூறாமல் விட்டது மதச்சார்பின்மையைப்  பற்றியதுதான்.  இந்திய தேசியத்தின் ஆணிவேர்களை அழித்தொழிக்கவே சங்பரிவாரத்தினர் முயன்று வந்தனர். தேசியம் என்பதற்கு மாற்றாக, கலாச்சார தேசியம் என்ற ஒன்றை முன்னிறுத்தியதன் மூலம் இந்த அழிவுவேலையை அவர்கள் செய்து வந்தனர். இந்திய தேசியம் பற்றிய ஒரு மாற்று விளக்கம் அளிக்க வேறு எந்தக் கட்சியும் முன்வரவில்லை. ஆனால், கோல்வால்கரும் சாவர்க்கரும் அதனைச் செய்தார்கள்.  1969 தேர்தலில் போது ஜனசங்கம் முன்வைத்த இந்திய மயமாக்கல் என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் இருந்த கோட்பாடு இதுதான். 1989 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தலை தூக்கிய இந்த கோட்பாடு 1991 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது; இந்திய பிரதமராக வந்திருக்கும் முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரின் கொள்கைகளை வழிநடத்திச் செல்வதும் இந்த கோட்பாடுதான்.

புவியளவிலான இந்த தேசியத்தை தொடர்ந்து மறுத்து வந்த பா.ஜ.க., ‘‘கலப்புக் கலாச்சாரம்’’ என்ற ஒன்றையும் கூட மறுத்து வந்தது. 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் அறிக்கைகளில்அறிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது பா.ஜ.க.’’ அந்த ஒரு கலாச்சாரம்தான், கலாச்சார தேசியத்தின் இதயம் போன்றது என்று அது பெருமைப்பட்டுக் கொள்கிறது; அதுதான் இந்து தேசியம். நமது தேசிய அடையாளமே கலாச்சார தேசியம்தான் என்று ஓர் அத்தியாயத்தில், தனது 1989 தேர்தல் அறிக்கையில் மிகவும் விரிவாக குறித்துள்ளது. இந்தியாவின் கலாச்சார தேசியம்தான் இந்துத்துவாவின் மய்யக் கருத்து என்று போதுமான அளவுக்கு வெளிப்படையாக அது கூறுகிறது.

தொடரும்

நன்றி: ‘தி ஃப்ரண்ட் லைன்’,

ஏப்ரல் 14, 2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner