எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தாமலேயே,

நிர்வாக அமைப்பை மாற்றி அமைப்பதன் மூலம்

இந்துத்துவாவை நடைமுறைப்படுத்த முனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி (3)

- ஏ.ஜி.நூராணி -

கருத்து வேறுபாடே தேசதுரோகமாகக் கருதப்படுகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்புகளின் அடிப்படையில், மக்களவைத் தேர்தல்களில் அருண்ஜேட்லி போட்டியிட்டுள்ளார்.  2017 மார்ச் 2 அன்று அவர் மிகுந்த ஆணவத்துடன், தேசியம் என்பது இந்த நாட்டில்தான் ஒரு கெட்ட வார்த்தையாக இருக்கிறது என்று கூறியபோது, இக்கோட்பாடு பற்றி அவரது கட்சி கொண்டுள்ள தவறான அடிப்படையை மறந்து விட்டார் போலும். அகில பாரதிய வித்யார்த்த பரீசத் அமைப்பின் முன்னாள் தலைவர், ஒரு பல்கலைக் கழகத்தில் சில பிரிவினைவாதிகளும், கம்யூனிஸ்டுகளும் நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர் என்று கூறியதில் வியப்பேதும் இருக்க முடியாது. காஷ்மீர் கொள்கை பற்றிய கருத்து வேறுபாடு நாட்டிற்கு எதிரான சதி என்பது போலவே கருதப்படுகிறது. அரசின் எந்த கொள்கை மீதாவது, அது காஷ்மீர் பிரச்சினையாக இருக்கட்டும் அல்லது சீனாவுடனான எல்லைப் பிரச்சி னையாக இருக்கட்டும், கண்டனம் தெரிவிப்பது - அது தேசதுரோகமாகும். மோடி அதிகாரத்துக்கு வந்தது முதற்கொண்டு, பலவகைப்பட்ட பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இத்தகைய தாராளமான உறுதிப்பாடுகளே நமக்கு பதிலாக அளிக்கப்படுகின்றன. 2016 மார்ச் 17 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைச் செயலாளர் தத்தேத்ரயா ஹோசபெல்லி பாரதிய மாதா கி ஜே என்று கூற மறுக்கும் எவர் ஒருவரும் எங்களைப் பொருத்தவரை தேசவிரோதிகளே என்று கூறியுள்ளார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, நம் நாட்டைப் பற்றிய தவறான விமர்சனங்களை பா.ஜ.க. பொறுத்துக் கொள்ளாது; பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். அகில பாரதிய வித்யார்த்த பரீசத் அமைப்பின் பொதுச் செயலாளர் அங்கிட் சங்வார் 2017 பிப்ரவரி 27 அன்று இந்த நாட்டை நோக்கி எவர் ஒருவர் விரலை நீட்டி பேசினாலும், அந்த விரல் வெட்டப்படும் என்று பேசியுள்ளார். அதற்கு அடுத்த நாள் அதன் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் சாகேத் பகுகுணா,  இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அது தேசவிரோத செயலாகும். இது பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பேச்சுக்களுமே,  காஷ்மீர் பற்றிய தங்களது கருத்துகளுக்காக தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், ஷீலா ரஷீத் இருவரும் பேச அழைக்கப்பட்டிருந்த ரம்ஜாஸ் கல்லூரியில் பிப்ரவரி 22 அன்று பேசுவதைத் தடை செய்யும் நோக்கத்தில் கூறப்பட்டவையே ஆகும்.

அகில பாரதிய வித்யார்த்த பரீசத் அமைப்பின் தேசிய அமைப்பு செயலாளர் சுனில் அம்பேகர், உமர் காலித் போன்ற ஒருவரை நமது கல்லூரி வளாகத்தில் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்  என்று கூறியுள்ளார். 49 வயதான இவருக்கு மாணவர் அமைப்பில் என்ன வேலை?

காவியுடை செயல்திட்டம்

இத்தகைய பேச்சுகள் அனைத்துக்கும்  பின்னணியில்,  ஒரு காவியுடை செயல்திட்டத்தை நாட்டின்மீது திணிப் பதற் கான திட்டமிடப்பட்ட ஒரு முயற்சி இருக்கிறது. குறிப்பாக, இந்திய கொள்கை வடிவமைக்கும் மய்யம் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு  பெற்ற சிந்தனை அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொனால் டிரம்பின் மாற்று உண்மைகள் என்பதைப் போன்ற மாற்றுக் குரல்களுக்கான இடங்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக்கும். கடந்த ஆண்டு லக்னோ தசரா விழாவில் ஜெய்சிறீராம், ஜெய் ஜெய் சிறீராம் என்று ஜெபித்த முதல் இந்திய பிரதமர் மோடிதான். (‘ஏசியன் ஏஜ்’, அக்டோபர் 13, 2016

குஜராத் இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட முஸ்லிம் பெண்கள், அவர்களது சகோதரர்கள், கணவர்கள், குழந்தைகள் பற்றி மோடிக்கு எந்த கவலையுமே இல்லை. ஆனால், தலாக் கூறி விவாகரத்து பெறும் பிரச்சினையில் திடீரென்று ஆவல் கொணட  அவர், தொலைபேசி மூலம் தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்படுவதற்கு எனது முஸ்லிம் சகோதரி செய்த குற்றம்தான் என்ன? என்று 2016 அக்டோபர் 24 அன்று லக்னோவில் கேட்டார். மோடி அதிகாரத்துக்கு வந்த பிறகு, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கத்தினை இலக்காகக் கொண்டு சங்க் பரிவார் தாக்குதலை மேற்கொண்டது. அதன் நோக்கமே முஸ்லிம் பெண்களைப் பாதுகாப்பது அல்ல. முஸ்லிம்களின் தனித்த அடையாளமாக இருக்கும் முஸ்லிம்களின் தனிப்பட்ட மத சட்டத்தை ஒழிப்பதுதான் அதன் நோக்கமாகும்.

அவர்களது இந்த தேசிய செயல்திட்டத்தில், மத மாற்றமும் மாட்டிறைச்சி விற்பதன் மீதான தடையும் அடங்கும். நவம்பர் 13 அன்று காஷ்மீரில்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மிகுந்த மனநிறைவுடன் அறிவித்தது: நமது நாடு இந்து ராஷ்டிர மாகும்; நமது முன்னோர்கள் இந்துக்கள். எனவே மதம் மாறியவர்கள் திரும்பவும் வீட்டுக்குத் திரும்புங்கள். நாம் அனைவருமே பாரத மாதாவின் புத்திரர்கள். பகவத் கூறியது போல, சங் பரிவாரத்தினர் ஒற்றுமையை நாங்கள் விரும்புகிறோம் என்று கூறும்போது, மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்தி, மக்கள் அனைவர் மீதும் இந்துத் துவாவைத் திணித்து, அதன் மூலம் ஒற்றுமையைப் போற் றுவது  என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள் என்பது நன்றாகவே விளங்குகிறது.

முழுமையாக மனநிறைவு அடைந்திருப்பதற்கு ஆர்.ஸ்.எஸ்.சுக்கு அனைத்துக் காரணங்களும் உள்ளன. அதன் பிரச்சாரகர் பிரதமராக இருக்கிறார். மேலும், அவர் மோகன் பகவத்தாலேயே முன் நிறுத்தப்பட்டவர் ஆவார்.  மோடியும் பகவத் இருவரும் 1950 செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள்.  குஜராத் மாநிலத் தலைமை பிரச்சாரகராக இருந்த பகவத்தின் தந்தை  மதுக்கர் ராவ் பகவத்தினால் பயிற்சி அளிக்கப்பட்டு ஆளாக்கப்பட்டவர் மோடி. பிரதமர் பதவிக்கு எல்.கே. அத்வானியைத் தாண்டி நரேந்திர மோடியை முன்னிறுத்தியவர் மோகன் பகவத்.

வெளிப்படையாகத் தெரியும் இந்த உறவுமுறை ஆபத்தானது  கூட. ஜின்னாவைப் பற்றிப் பேசியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். விதித்திருந்த எல்லையைக் கடந் ததால், அத்வானி வீழ்ந்தார். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அறிவு படைத்தவராக மோடி இருந்தார். மேலும், தனது பதவிக்கு ஆ.எஸ்.எஸ்.சுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதால்,  அதனை கோபம் கொள் ளச் செய்ய மோடியால் முடியாது. இதன் விளைவு என்ன வென்றால், முழு அளவிலான ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

2016 அக்டோபர் 31 ஆம் நாளிட்ட “ஹிந்துஸ்தான் டைம்ஸ்‘ பத்திரிகையில் பிரதீப் குமார்மைத்ரா வால் எழுதப்பட்ட அருமையான ஒரு கட்டுரையில் இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் எல்லாம் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் மோடி வெற்றி பெற்றதற்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். குழுத் தலைவர்களும், சுமார் ஆறு லட்சம் சுயம்சேவக்குகளும் ஆற்றிய மகத்தான பணிக்கு நன்றி செலுத்த மோடி கடமைப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் காட்டப்பட்ட ஆதரவுக்காக கோட்பாட்டின் மீதான பாசத்தையும்,  நன்றியையும் காட்டுவது ஒரு புறமிருக்க, எந்த அரசியல்வாதிதான் இத்தகைய ஆதரவை கண்ணெனப் போற்றி பாதுகாக்கமாட்டார்? அத்தகைய ஆதரவை பாதுகாத்துக் கொள்வதற்கு மோடி என்னதான் செய்ய மாட்டார்? அவ்வப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆனால் எப்போதுமே அவற்றை இருவருமே சரி செய்து கொள்வார்கள். தான் விரும்புப்போது, தனது நிலையை ஆர்.எஸ்.எஸ். தக்க வைத்துக் கொள்ளும். தேர்தல் வெற்றிக்கான உத்தி ஒன்றை உருவாக்குவதற்கு, பகவத்தும் அவரது தளபதிகளும் மிகக் கடுமையாகப் பணியாற்றியுள்ளனர்.

கற்பனையிலான குறைபாடுகள்

தேசியம் பற்றிய இத்தகைய பேச்சுக்களுக்கிடையே, கற்பனையிலான குறைகளைப் பற்றி பகவத்  புகார் அளிப்பதைக் காண முடிகிறது. இந்தியா முழுவதிலும் தங்களின் மதச் சடங்குகளையும், செயல் பாடுகளையும் இந்துக்களால் சுதந்திரமாக செய்ய முடிகிறதா? இந்த நாட்டில் இந்துக்களின் மனித உரிமைகள் நன்றாக நிலை நாட்டப்பட்டுள்ளனவா? 2017 ஜனவரி 15 அன்று கொல் கத்தாவில் பகவத் இவ்வாறு கேட்டுள்ளார் (‘ஏசியன் ஏஜ்', ஜனவரி 16). இத்தகைய மோசமான நிலைக்கான காரணத்தை அவர் விளக்கினார். இந்துக்கள் ஒற்றுமையாகவும், பலம் கொண்டவர்களாகவும் இல்லாத காரணத்தால், இத்தகைய சூழ்நிலையை இந்துக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்து சமூகத்தை ஒன்று சேர்க்கும் பணியை மட்டும்தான் நாம் மேற்கொண்டுள்ளோம். அதுபோன்றதொரு செயல் திட்டத்தில், இந்திய தேசியத்திற்கு எங்கே இடம் இருக்கிறது? (‘ஏசியன் ஏஜ்’, ஜனவரி 15, 2017)

பகவத் மீண்டும் நினைவு கூர்கிறார்: நமது வீழ்ச்சிக்கு ஆங்கிலேயரையோ அல்லது முகமதியர்களையோ நாம் குறை கூறக்கூடாது என்று நமது பெரியவர்கள் கூட கூறியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்துக்களின் பலம், எவரும் அவர்களைக் கேவலமாகப் பார்க்க இயலாதபடியானதாக இருக்கும். மக்களவையில் தனது முதல் உரையையாற்றியபோது மோடி புலம்பியது ,ஆயிரம் ஆண்டு காலமாக இந்துக்கள் இவ்வாறு அடிமைப்பட்டிருப்பதைப் பற்றியதுதான். இந்திய வரலாற்றுடன் ஆர்.எஸ்.எஸ். போரிட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் முகலாயர்களின் வாரிசுகளாகவும், கிறித்து வர்கள் ஆங்கிலேயரின் வாரிசுகளாகவும் முத்திரை குத்தப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், இடதுசாரிகள் தாக்கப்படுகின்றனர். அதன் கோட்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். சின் பாசிசத்திற்கு இடமில்லை; பாசிசம் தேசியமல்ல. கற்பனையிலான குறைகளை உருவாக்கி தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த ஹிட்லரைப் போலவே, தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு,  உயர்சிறப்புமிக்க தலைவரின் கீழ் மக்களை ஒன்று திரட்டுவதே அதன் நோக்கம்.

இந்த ஆண்டு பிப்ரவரி  8 அன்று போபாலில் தனது கோட்பாட்டைப் பற்றி பகவத் விளக்கிக் கூறியுள்ளார். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியருமே ஒரு இந்துதான். முஸ்லிம்களோ, மத நம்பிக்கையால் முஸ் லிம்களாகவும், தேசிய அளவில் இந்துக்களாகவும் இருப்பவர்கள் ஆவர்.  எவ்வாறாயினும்,பாரத மாதாவை மதிக்கும் ஒவ்வொருவரும் ஒரு இந்தியர்தான். அதே நேரத்தில் ஒன்று சேரும்படிஅவர் இந்துக்களைக் கேட்டுக் கொள்கிறார். இது ஒன்றும் புதிர் அல்ல.  இந்துத்துவா எனப்படும் கலாச்சார தேசியத்தின் விளக்கமே ஆகும்.

இத்தகைய பாசிச வழியிலான தேசியம் பற்றிய மாணவர்களுக்கான பயிற்சி தொடங்கிவிட்டது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் பேரா. கவுசல் கிஷோர் மிஸ்ராவின் மாணவர்கள் எம்.எஸ்.கோல்வால்கரின் கலாச்சார தேசியம் மற்றும் அரசியல் அறிவியலில் இந்து மகா சபைத் தலைவர் சாவர்க்கரின் பொருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ தொடர்புள்ள பாடங்களில் பல்வேறுபட்ட பல்கலைக் கழகங்களில் உள்ள துறைகளில் ஆய்வு மேற் கொள்வதற்காக மாணவர்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. (தி டெலிகிராப் - பிப்ரவரி 19, 2017)

அமெரிக்காவில் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்குப் பிறகு, வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் பெருகி வருகின்றன.  (ஹிந்துஸ்தான் டைம்ஸ்  பிப்ரவரி 25) அதே போன்று மோடியின் ஆட்சியிலும், வெறுப்புணர்ச்சி கொள்வதற்கானசூழல் போற்றி வளர்க்கப்பட வில்லையா? காலம் தாழ்ந்தாவது, கான்சாஸ் படுகொலை பற்றி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் மோடியின் மவுனம் காதை செவிடாக ஆக்கிவிடும் என்பது போல உள்ளது. அவரது மவுனத்துக்கான காரணத்தை விளக்கும்போது மனினி சட்டர்ஜி கூறுகிறார்: நீண்டதொரு காலமாகக் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த மதிப்பீடுகள் சீரழிவது பற்றியோ, போற்றத்தகுந்த ஜனநாயகம் என்று அண்மைக் காலம் வரை போற்றப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியோ, ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை  என்று வருத்தத்துடன் கூறுகிறார். (‘தி டெலிகிராப்’, பிப்ரவரி 27, 2017). பா.ஜ.க.ஆட்கள் தொலைக் காட்சிகளில் தங்களது பிரச்சாரப் பறையை உரக்க அடித்துக் கொண்டிருக்கும் போது, கருத்து வேறுபாட்டுக்கான இடம் சுருங்கிப் போகிறது. தேசதுரோகக் குற்றச்சாட்டு பற்றிய புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க அரசு உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்பரிவாரத்தில் உள்ள மெக்கார்த்திகள்

அமெரிக்கத்தனம்அற்றசெயல்பாடுகளைத்தேடிக் கண்டுபிடிப்பது என்ற பெயரில், ஜோசப் மெக்கார்த்தி  தொடங்கிய ஓர் அவதூறுப் பிரச்சாரத்தின் எச்சங்கள்தான் இவை அனைத்தும். சங்பரிவாரத்தில் உள்ள மெக்கார்த் தியைப் போன்றவர்களைப் பொருத்தவரை, அவர்கள் கொண்டிருந்த தீய நோக்கங்கள் பலவும் இருந்திருக்கின்றன. இந்திய தேசியத்தை அணைத்துவிட்டு, அந்த இடத்தில் இந்து தேசியத்தை வைப்பதே அவர்களது நோக்கம்; இதை அவர்கள் படிப்படியாக, நிதானமாக, ஒரு தீர்மானமான நடைமுறையில் திட்டமிட்டு செய்வதே அவர்களது வழிமுறை.

நேரு இதனை எதிர்பார்த்திருந்தார். அயல்துறை சேவைப் பணியாளர் களுக்கான பயிலரங்கில்  1959 இல் பேசும்போது, இந்தியாவுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து கம்யூனிசமல்ல; வலதுசாரி மதத் தீவிரவாதம்தான் இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கும் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நேரு கூறியுள்ளார். 1948 மே 11 அன்று நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிக்கூட்டம் ஒன்றில் பேசும்போது,   சிறுபான்மையினரின் மதவெறியை விட, பெரும்பான்மையினரின் மதவெறி ஆபத்து மிகுந்தது என்று அவர் கூறினார். சிறுபான்மையினரின் மதவெறியை அவர் மன்னித்துவிடவில்லை. பின்னர் அவர் , சிறுபான்மை மதத்தினர் மதவெறி கொண்டிருப்பதை உங்களால் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரும்பான்மை மதத்தினரின் மதவெறி தேசியம் என்று கருதி ஏற்றுக் கொள்ளப்பட இயன்றதாகும் என்று விவரித்தார்.

நிறைவு

நன்றி: ‘தி ஃப்ரண்ட் லைன்’, ஏப்ரல் 14, 2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner