எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு பிரிட்டிஷ் இந்திய சட்ட மன்றத்தில் வகுப்புரிமை வழங்கிடும் ஆணையினைப் பிறப்பித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் பிறப்பித்த உத்தரவின்படி இந்திய சட்டமன்றங்களில் மதம் மற்றும் வகுப்புவாரி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனடிப்படையில் மத்திய சட்டமன்றத்தில் பட்டியலிட்டப்பட்ட ஜாதியினரான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்திய அரசு சட்டம் 1935-இன் படி, இந்த வகையான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. பட்டியலிடப்பட வேண்டிய தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வகைப்படுத்தப்பட்டனர். இப்படி வகைப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் பட்டியலாக இணைக்கப் பட்டனர். இப்படித்தான் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பட்டி யலிடப்பட்ட ஜாதியினராக அடையாளப்படுத்தப்பட்டனர். இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பும் ஒரு சில ஜாதி சேர்க்கையுடன் தாழ்த்தப்பட்டவர் ஜாதிப் பட்டியல் தொடர்ந்தது. எனவே, பட்டியலிடப்பட்டவர்களான தாழ்த்தப்பட்ட ஜாதியினர் முழுமையான கணக்கெடுப்பின் மூலம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தீர்மானிக் கப்பட்டுவிட்டனர். எனவே, நாடு விடுதலை அடைந்த பின்னர் தாழ்த்தப்பட்ட ஜாதியினராக அடையாளம் காணும் பணி கடுமையானதாக இருக்கவில்லை. பட்டியலிடப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடி மரபின மக்கள் 1935ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டனர்.

பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பற்றிய கணக்கெடுப்பு அப்படி நடைபெறவில்லை. எந்த மாநிலத்திலும் பிற் படுத்தப்பட்ட ஜாதியினர் பற்றிய கணக்கெடுப்பு முழுமையாக நடைபெற வில்லை. மேலும் மாநிலம் தழுவிய அளவில் நூற்றுக்கணக்கான, நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் இருக்கின்றனர். அரசமைப்புச் சட்ட விதி 15(4)இன் படி அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட முடியாது.

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கிட சட்டம் அனுமதிக் கின்றது.

‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலை’ என்பது பற்றி அரசமைப்புச் சட்டம் விளக்கிடவில்லை.

எனவே, அதுபற்றிய வரையறையினை நிர்ணயிப்பது கடினமானதாகும். மண்டல் குழு பரிந்துரை நடைமுறை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என கூறப்பட்டது.

இந்த ஆணையத்தின் மூலம் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, நேரடி மத்திய அரசின், மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் வரும் நிறுவனங்களின், கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிறுவனங்களின் பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பினை அளித்திடவேண்டும். மாநில அரசு களும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை அமைத்து மாநில அரசின் நேரடி அதிகாரம் மற்றும் கட்டுபாட்டில் உள்ள பணிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் பெற்றிடுவதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறியும் பணி, சட்ட அறிவுடன் நீதி வழங்கிடும் அனுபவம் சார்ந்ததாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களுக்கு நியமிக்கப் படும் தலைவர்கள் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பணியில் உள்ள அல்லது பணிநிறைவு பெற்ற நீதிபதியாக இருந்திட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியது.

மேலும் பட்டியலிடப்பட்ட ஜாதியினராக வகைப்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் நாடு முழுவதும் எங்கு கல்வி பயின்றாலும் பணியில் சேர்ந்தாலும் பட்டியலிடப்பட்ட ஜாதியினராக இடஒதுக்கீடு பெறுவதற்கு அறியப்படுவர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இவ்வாறு அறியப் படுவதில்லை. ஒரு மாநிலத்தில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவராக அறியப்பட்ட ஜாதியினர் என்பதால் நாடு முழுவதும் இட ஒதுக்கீட்டு உரிமையினைப் பெற்றிட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அங்கீகாரம் அளித்துவிடுவதில்லை.

மேலும் ஒரு மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டவராக அடை யாளம் காணப்பட்ட சிலர் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட் டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்படும் நிலையும் உள்ளது.     எனவே சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைச் சேர்க்கவோ, நீக்கவோ மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் திறம்பட, சரியாக செயல்பட முடியும். மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பயனை பெற்றிட முடியும். இந்தப் பணியினை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்திட இயலாது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் சமூக, கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்டோரிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சில ஜாதியினர் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் மத்திய அரசு சார்ந்த இடஒதுக்கீட்டிற் கான பிற்படுத்தப்பட்டோரைத்தான் அடையாளப்படுத்த முடியும். தேசிய ஆணையம் மாநில அளவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு உரியவர்களை கண்டறிய முடியாது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமோ, தேசிய பழங்குடி மரபின ஆணையமோ தாழ்த்தப்பட்ட ஜாதியினரில் பழங்குடி மரபினர் மக்களில் துணைப் பிரிவுகளை உள் ஒதுக்கீட்டிற்கு இதுவரை கண்டறியவில்லை. ஆனால் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரான அருந்ததி யினருக்கு இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பிற மாநிலங்களில் கோரப்பட்டுவரும், தாழ்த்தப்பட்டோரில் உள்ஒதுக்கீடு பெறுவதற்கான பணியினை தேசிய ஆணையம் செய்திட இயலாது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசு சார்ந்த இடஒதுக்கீட்டிற்கு பயன்படும் வகையில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரை சேர்ப்பதற்கான, நீக்குவதற்கான பரிந்துரை அதிகாரம் மட்டுமே பெற்றிருந்தது. இட ஒதுக்கீட்டு நடைமுறையினை கண்காணித்து வலியுறுத்தும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம்தான் இருக்கிறது. எனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்திற்கு உள்ளது போன்ற அரசமைப்புச் சட்ட அதிகாரம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, விதி 338 போன்று புதிதாக ஒரு விதியினை உருவாக்கிடும் தேவை ஏற்பட்டது. இந்த புதிய விதி பற்றி மத்திய அரசு முற்றிலும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளது.

இந்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத்தின் 123ஆம் திருத்தத்தின் மூலம் புதிதாக, விதி 338 பி சேர்க்கப்பட்டது. தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினருக்கு முறையே உரிய விதிகள் 338 மற்றும் 338 ஏ, (துணை விதி 5(சி) தவிர்த்து) போன்று புதிய விதி அமைந்தது. துணைவிதி 5(சி) தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினர் ஆணையங்களுக்கு, அம்மக்களுக்காக சமூக பொருளாதார வளர்ச்சிக்கான அரசினர் மேற்கொள்ளும் திட்டமிடுதலில் பங்கேற்றிடும் அறிவுரை வழங்கிடும் அதிகாரத்தினை வழங்கியது. ஆனால் விதி 338 பி-இன்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வளர்ச்சிக்கான அறிவுரை வழங்கிடும் அதிகாரத்தை மட்டும் கொண்டதாக உள்ளது. வளர்ச்சி திட்டமிடலில் பங்கேற்றிடும் அதிகாரத்தை விதி 338 பி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கிடவில்லை. இந்த அதிகாரம் வேண்டுமென்றே பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர் ஆணையங்கள் போன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும், முழு அதிகாரம் படைத்ததாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவில்லை.

பட்டியலிடப்பட்ட ஜாதியினரை தீர்மானிக்கும் அதிகாரத் தினை அரசமைப்புச் சட்ட விதி 341-யும் பட்டியலிடப்பட்ட பழங்குடி மரபினரை தீர்மானிக்கும் - அதிகாரத்தினை விதி 342-ம் இந்திய குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. புதிதாக 123-ஆம் திருத்ததின் மூலம் சேர்க்கப்படவுள்ள புதிய விதி 342 ஏ-இன்படி சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை, மாநில அளவில் உள்ள இடஒதுக்கீட்டிற்கும் தீர்மானிக்கும் அதிகாரத்தினை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. இந்த புதிய விதி தீங்கு விளைவிக்காது போன்ற தோற்றத்தினைக் காட்டும். ஆனால் இந்த புதிய விதி 342-ஏ நடைமுறைக்கு வந்தால் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு சரி செய்திட முடியாத சேதத்தினை விளைவிப்பதோடு, இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

அரசமைப்புச் சட்டவிதி 336க்கும் புதிதாக துணைவிதி 26(சி) சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் துறைவிதிப்படி புதிய விதி 342 ஏ-இன்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப் படும் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோர்களாக அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவர், புதிய விதிகள் 342 ஏ மற்றும் 366 (26சி) ஆகியவை 123 ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்தம் நடை முறையானால் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப் பட்டோரைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மட்டுமே வழங்கிவிடும். மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோரை தீர்மானிக்கும் அதிகார உரிமையினை இழந்துவிடும். மாநில அரசுகளுக்கு இருந்த வந்த அந்த உரிமையினை மத்திய அரசு பறிப்பதாக ஆகிவிடும். இது இந்திய கூட்டாட்சி அரசியல் அமைப்பின் மீதான வெளிப்படையாக அவமதிக்கும் செயலாகும்.

இதனால் மாநில அரசுகள் தங்களது மாநில மக்களுக்கு தேவைப்படும் நீதி சார்ந்த நிறைவேற்றங்களை வழங்கிடவோ, குறைகளைத் தீர்த்திடவோ உதவ முடியாத அரசுகளாக மாறிட நேரிடும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 (சட்டம் 27-1993)இன்படி ஆணையத்தின் தலைவராக பணியில் உள்ள அல்லது பணிநிறைவு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிதான் நியமிக்கப்படவேண்டும் என கூறுகிறது. நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா எண் 70/2017இன்படி (123ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தம்) இந்த நியமன விதி யினைத் திரும்பப்பெறப்படுகிறது. அதற்கு பதிலாக நாடாளு மன்றம் இயற்றிடும் சட்டத்தின் மூலம் (புதிதாக சேர்க்கப் படவுள்ள அரசமைப்புச் சட்டவிதி 338-ஜி ஆணைவிதி 2-இன்படி) ஆணையத்தின் தலைவரோ, துணைத்தலைவரோ மற்ற மூன்று உறுப்பினர்களோ இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். அப்படி நியமனம் பெறுபவர்கள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்திடவோ இருந்திருக்கவோ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதன் மூலம் நீதிபதிகள் அல்லாத பிறரையும் ஆணையத்திற்கு நியமிக்கலாம என்று மத்திய அரசு விரும்புகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த புதிய நியமன விதி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட நியமன விதிகளுக்கு எதிரானது.

1993ஆம் ஆண்டு சட்டம் முழுமையாக திரும்ப பெற வேண்டிய அவசியம் இல்லை. பதிலாக பகுதி மிமிமி-ல் உள்ள புதிதாக சேர்க்கப்பட உள்ள அரசமைப்புச் சட்டவிதி 342 ஏ-இன்படி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு பற்றி மாநில அரசின் வசம் உள்ள அதிகாரங்கள் பறிபோய்விடும். இந்த விதி நடைமுறைக்கு வந்தால் மாநில அரசுகள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ள ஜாதியினரை சேர்க்கவோ நீக்கவோ கொண்டிருந்த அதிகாரத்தினை இழந்துவிடும். அந்த அதிகாரத்தை மத்திய அரசு முழுமையாக கைப்பற்றிவிடும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திவரும் சமூக, ரீதியாக கல்வி, ரீதியாக பிற்படுத்தப்பட்டோரை அங்கீகரிக்கும் பணி

குடியரசுத்தலைவர் வசம் போய்விடும் மத்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் பிற்படுத்தப் பட்டோரை அங்கீகரித்திட முடியும்.

மாற்றம் பெறவேண்டிய
அரசமைப்புச் சட்ட விதிகள்:

அரசமைப்புச் சட்டவிதி 342-ஏ(2)யை மாற்றி துணைவிதி 1-இன்படி அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளோரை நீக்கவோ, புதிதாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைச் சேர்க்கவோ, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படலாம்.

அரசமைப்புச் சட்டவிதி 342 ஏ(3) புதிதாக சேர்க்கப்பட வேண்டும். இதன்படி மாநில அரசின் நேரடி அதிகாரம், கட்டுப்பாட்டு அதிகாரத்தில் உள்ள பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு உரிய சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரை அங்கீகரிக்கும் அதிகாரம் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு வழங்கலாம்.

மேலும் புதிதாக அரசமைப்புச் சட்ட விதி 342 ஏ (4) அய் சேர்த்திடலாம்.  இதன்படி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிவுரைப்படி சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள அதிகாரத்தை அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு வழங்கலாம்.

இப்படிப்பட்ட அரசமைப்புச் சட்ட திருத்தங்கள்தான், சேர்க்கைகள்தான் கூட்டாட்சி அரசமைப்பு முறைக்கு உகந்ததாக இருக்கும். இந்திய நாடு ஒற்றை ஆட்சி அதிகாரம் கொண்டது அல்ல மாநில அரசுகளின் ஒன்றியம் அது.  மாநிலங்களுக்கு உள்ள ஆட்சி அதிகாரங்களை மதித்துப் போற்றுவது, நீண்ட காலம் நடைப்பிடிக்கப்படுவது இந்திய நாட்டின் ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டையும் பலப் படுத்தும்.

முடிவாக, அரசமைப்புச் சட்ட 123 - ஆம் திருத்த மசோதா சட்ட வடிவமாக்கப்பட்டால், மாநிலங்கள் தங்களது. வரம்பில் கையாண்டுவரும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய அதிகாரத்தை பறிக் கொடுக்க நேரிடும். இந்த திருத்த மசோதா, மண்டல் குழு பரிந்துரை மீதான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது புதிதாக சேர்க்கப்பட உள்ள அரசமைப்புச் சட்டவிதி 342 ஏ கூட்டாட்சியினை பங்கப்படுத்திவிடும். மாநில அரசுகள் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் கொண்டு தங்களது அதிகார உரிமைகளை பாதுகாத்திட முன்வராவிட்டால் தங்களது அதிகாரங்களை இழந்துவிட நேரிடும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner