எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- நீரா சந்தோர் -

(தலித்துகள்,முஸ்லிம்கள்,பெண்களுக்குஎதிரான மாபெரும் குற்றங்கள் இழைக்கப்படும் செயலில் இந்து சமூகம்  இன்று தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.ஒழுக்கம்என்பதைப்பற்றிதாங் கள் கூறுவதுதான் விளக்கம் என்று கருதிக் கொண்டிருக்கும், இந்து மத விதிகளை மீறு கிறார்களோ  என்ற சந்தேகத்தின் பேரில் மட்டுமே கூட மக்களைத் தண்டிக்கும், இந்து மதப் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் நடத்தும் கொடுமைகளைக் கண்டும் மக்கள் வாய்மூடி மவுனமாக இருப்பதே இதன் காரணம். அதிகாரம் நிறைந்தஅரசியல்வாதிகளின்ஆதரவுடனும்,காவல் துறையினரின் ஒத்துழைப்புடனும் இந்த பாதுகாவலர் கள் தங்களைத் தாங்களே சட்டம் இயற்றுபவர்களாகவும், குற்றம் சாட்டுபவர்களாகவும், நீதிபதிகளாகவும், தண் டனைகளை நிறைவேற்றுபவர்களாகவும் கருதி இந்த அனைத்துச் செயல்களையும் செய்பவர்களாக விளங்குகின்றனர்.ஹிந்துசாம்ராஜ்யத்தின்சாவி கள் தங்களிடம் வைத்திருப்பதாகக் கருதிக் கொண் டிருக்கும் இந்த இந்து மதப்பாதுகாவலர்களால் மேற் கொள்ளப்பட்ட மிகமோசமான வன்முறைச் செயல் கள் பற்றிய அறிக்கைகள் நாள்தோறும் செய்தித் தாள்களில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன)

கடந்த முறை இந்து சமூகம் தன்னைத் தானே பார்த்து, ‘‘நாம் யார்?’’ என்று எப்போது கேட்டிருக்கும்?  இவ்வாறு இந்து சமூகத்தைப் பார்த்து கடைசியாக கேள்வி கேட்டவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  அடக்கு முறைகள், பாகுபாடுகள் நிறைந்த, மக்களைத் தனிமைப்படுத்தும் இந்து மதத்தின் அரசியல் செயல்திட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்துமத பாரம்பரியத்தைப் பற்றி பரிசீலனை செய்து, இந்து சமூகத்தின் தீமைகளை எடுத்துக் காட்ட வேண்டும் என்று  அறிவார்ந்த பொதுமக்கள் சிலரையாவது அவர் வலியுறுத்தியுள்ளார். அவருக்குப் பிறகு ஒட்டு மொத்த இந்து மதத்திற்குள்  பார்த்து, ஆராய்ந்து, பரிசீலனை செய்து எவர் ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. (இந்து மதத்திற்குள் புதைந்து கிடக்கும் அனைத்து வகையான கேடுகளையும் தோலுரித்துக் காட்டிய தந்தை பெரியார் அவர்களைப் பற்றி இந்தக் கட்டுரை ஆசிரியர் அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது.)

இது ஒரு மாபெரும் சோகம்தான்.  தன்னைப் பற்றிய அடிப்படையான சில கேள்விகளைக் கேட்டு அறிந்திராத ஒரு சமூகம் மெத்தனத்திற்கும், தேக்கத்திற்கும் ஆளாகி இறுதியில் அழிந்தே போகும். ஒட்டு மொத்தமாக நம்மைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கான அறிவார்ந்த முயற்சி தேவையற்றதும், பயனற்றதும் ஆகும் என்று கருதி காலின் கீழ் போட்டு நசுக்கப்பட்டு வந்துள்ளது. ‘நாம் இந்துக்கள் என்பதைப் பெருமையுடன் கூறு’, ‘புதிய இந்தியா,  தூய்மையாகக்கப்பட்ட இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற அர்த்தமே அற்ற முழக்கங்களை முழங்கி சோர்வும் மெத்தனமும் அடைந்துபோன நாம், மத சிறுபான்மையினரிடம் வெட்கம் கெட்டத்தனமாக நாம் ஏன் தொடர்ந்து பகைமை பாராட்டி வருகிறோம் என்பதையோ அல்லது நமது சொந்த மக்களே துன் பங்களில் சிக்கி பரிதவிக்கும்போது நாம் ஏன் பாராமுகமாக அலட்சியமாக இருக்கிறோம் என்பதையோ வெகுசிலரே தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர்.

மவுனமாக இருக்கும் மெத்தனம்

ஒரு மக்களாட்சி அரசியல் சமூகத்தில்,  தங்களது சகக் குடிமக்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர வேண்டிய கடமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது. ஒரு தனிப்பட்டவரின் அல்லது ஒரு சமூகத்தின்  அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு  ஓர் ஒழுங்குமுறையில் மறுக்கப்பட்டாலோ அல்லது மீறப்பட்டாலோ,  அங்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இரக்கமும், கோபமும் எழுந்து, மனித உயிர்களின் மரியாதை மற்றும்  கவுரவத்தைப் பறிக்கும் வழியில் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானம் உருவாகிறது. ஆனால், அதில் எல்லாம் தலையிடாமல் நாம் நமது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு போகிறோம். நமது சமூகத்தில் ஒற்றுமையே இல்லை என்ற ஒரு மோசமான சூழலில் அதனைப் பற்றி கவலைப்படாமல் அலட்சியமாகவே நாம் இருக்கிறோம்.

இது ஒரு இரட்டை சோகமாகும். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நுண்ணிய பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த  மாபெரும் அறிஞர் பெருமக்கள், தத்துவ ஞானிகள், சமூக, மத சீர்திருத்தவாதிகள், தேசியத் தலைவர்கள் வாழ்ந்த ஒரு வளமான வரலாற்றுப் பாரம் பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம். இதுதான் இந்திய மறுமலர்ச்சிக் காலத்தின் தொடக்கமாகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி காலம் வரை இக்கேள்விகள் வளர்ந்து கொண்டே வந்தன. ஆனால், அதன் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.

தலித்துகள், முஸ்லிம்கள், பெண்களுக்கு எதிரான மாபெரும் குற்றங்கள் இழைக்கப்படும் செயலில் இந்து சமூகம்  இன்று தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. ஒழுக்கம் என்பதைப் பற்றி தாங்கள் கூறுவதுதான் விளக்கம் என்று கருதிக்கொண்டிருக்கும், இந்து மத விதிகளை மீறுகிறார்களோ  என்ற சந்தேகத்தின் பேரில் மட்டுமே கூட மக்களைத் தண்டிக்கும், இந்து மதப் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் நடத்தும் கொடுமைகளைக் கண்டும் மக்கள் வாய்மூடி மவுனமாக இருப்பதே இதன் காரணம். அதிகாரம் நிறைந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடனும், காவல் துறையினரின் ஒத்துழைப்புடனும் இந்த பாதுகாவலர்கள் தங்களைத் தாங்களே சட்டம் இயற்றுபவர்களாகவும், குற்றம்சாட்டுபவர்களாகவும்,நீதிபதிகளாகவும், தண்ட னைகளை நிறைவேற்றுபவர்களாகவும் கருதி இந்த அனைத்துச் செயல்களையும் செய்பவர்களாக விளங்கு கின்றனர். ஹிந்து சாம்ராஜ்யத்தின் சாவிகள் தங்களிடம் வைத்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் இந்த இந்து மதப்பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான வன்முறைச் செயல்கள் பற்றிய அறிக் கைகள் நாள்தோறும் செய்தித் தாள்களில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய மிகைப்பட்ட செயல்களே, இன்றைய நமது அரசியல் வாழ்வில் மிகமிக சாதாரணமாக செய்யப்படும் அரசியல் செயல்பாடுகளாக ஆகிவிட்டன. மக்களாட்சி என்பதே பொருளற்றதாக ஆகிவிட்டது என்பதையும், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டுப் போய் விட்டது என்பதையும்,  அரசியல் வாழ்வு இவ்வளவு மோசமான நிலைக்குத் தரம் தாழ்ந்து போனதற்கு  நமது அரசியல்வாதிகளே பொறுப்பு என்ப தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனாலும், நாம் மவுனமாகவே இருக்கிறோம்.

வளர்ந்து வரும் இந்து மத பாதுகாவலர்களின் வன்முறை

பசுக்களை லாரிகளில் ஏற்றிச் சென்றனர் என்பதற் காக 15 முஸ்லிம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படையினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் ஒருவர் இறந்து போக எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக் கடத்தல் தடை செய்யப் பட்டிருக்கிறது என்று கூறி, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்  குலாப் சிங் கத்தாரியா வன்முறையில் ஈடுபட்ட பசுப்பாதுகாவலர்களுக்கு ஆதரவாகப் பேசி யுள்ளார். பசுக்களை எடுத்துச் செல்வதற்கான உரிய அரசு ஆவணங்களை அவர்கள் காட்டியுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது நீதி சேர்ப்பதாகாது. மக்கள் ஒரு சட்டத்தை மீறினால், அவர்கள் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப் பட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இவர்களோ சட் டத்தை தங்களது கைகளால் துடைத்தெறிந்துவிட்டு, நமது சமூகத்தின் மிகவும் பாதுகாப்பு அற்ற நிலையில் இருக்கும் முஸ்லிம்கள், தலித்துகள் மீது இவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இத்தகைய வன்கொடுமைகளும், காட் டாண்டித்தனமும் கூட இன்று சாதாரணமானவை களாகவே ஆகிவிட்டன.

பாதுகாப்பது என்பது பல மறைமுகமான தீய வடிவங்களைப் பெற்றுள்ளது. தனது ஓவியங்கள் மூலமாக பெருமைப்படுத்தி,  தான் மிகவும் நேசித்த இந்தியாவை யும் இதிகாசங்களையும்  பிரிந்து நாட்டை விட்டு வெளியேறிய ஓவியர் ஹூசைன் 2011 இல் இறந்து போனார். அவர் இறந்து போவதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, இந்துமதப் பாதுகாவலர்கள் லண்டன் மாநகரில் நடைபெற்ற அவரது ஓவியக் கண்காட்சியை அடித்து நொறுக்கினர். விலை மதிப்பற்ற பல கலைப் பொக்கிஷங்கள் பாழாக்கப்பட்டன.

இந்தியாவில் மாபெரும் கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சிகளில் வைப்பது என்பது முடியாதது. அவ்வாறு அவரது ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது, காவல்துறை அவருக்கு கைது வாரண்டு பிறப்பித்ததன் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. கலைஉணர்வு, உபமான, உபமேய நுணுக்கங்கள் பற்றி எந்த வித அறிதலும் இல்லாத எவர் ஒருவர் வேண்டுமானாலும்  எந்த ஓவியம், எந்த நூல், எந்த திரைப்படம் மக்களின் நுகர்வுக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு கால கட்டத்தில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம்.

வாரணாசி ஆசிரமத்தில் தனது திரைப்படத்தின் ஒளிப்பதிவை தீபா மேதாவால் செய்ய முடியவில்லை. ராஜ்புத் கரனி சேவா என்ற வன்முறைப் பாதுகாப்பு அமைப்பினர், திரைப்படம் எடுக்கக் கூடாது என்று, புகழ் பெற்ற இயக்குநர்   சஞ்சய் லீலா பன்சாலிக்கு இப்போது தாக்கீது அனுப்பியுள்ளனர். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று அனைவருமே தங்களது திரைப் படங்களை வெளியிடுவதற்கு சிவசேனா மற்றும் அதன் மகாராஷ்டிர நவநிர்மான் சேவாவின் தயவை நாடவேண்டியிருப்பது என்பதே நீண்ட கால வழக்கமாக உள்ளது. இந்த வழக்கம் இயல்பான உச்சநிலைக்குச் சென்றுவிட்டபடியால், தங் களைத் தாங்களே தணிக்கையாளர்களாக அறிவித்துக் கொண்ட அவர்கள், திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கட்டளை இடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

பேசவேண்டியதன் தேவை

கலாச்சாரம், கலை, சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்களது தவறான கண்ணோட்டத் தின் காரண மாக இந்த இந்து மதப்பாதுகாவலர்கள் இழைக்கும் வன்கொடுமைகள் பற்றிய கதைகள் நாள்தோறும் நாளிதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதனைக் கண்ட பிறகும், நம்மால் பேசாமல், செயல்படாமல் அமைதியாக இருக்க முடியாது. ஜெர்மன் நாட்டில் இருந்த லூதர்ன் கிறித்தவப் பாதிரியான மார்டின் நீமோலர் தொடக்கத்தில் நாஜிகளை ஆதரித்தவர், பின்னர் அவர்களை எதிர்த்தார். கைது செய்யப்பட்ட அவர் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டார். சமூகம் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, எதுவும் பேசாமல் தான் அமைதியாக இருந்தது குறித்து அவர் இயற்றிய ஒரு பாடல் புகழ் பெற்றது.

முதலில் சமதர்மவாதிகளைத் தேடி அவர்கள் வந்தனர்;

நான் ஒரு சமதர்ம வாதியல்ல என்பதால் எதுவும் பேசாமல் இருந்தேன்.

பின்னர் தொழிற்சங்க வாதிகளைத் தேடி அவர்கள் வந்தனர்;

நானோ ஒரு தொழிற்சங்க வாதியும் அல்ல என்பதால்  எதுவும் பேசாமல் இருந்தேன்.

யூதர்களைத் தேடி பின்னர் அவர்கள் வந்தனர்;

நானோ ஒரு யூதன் அல்ல என்பதால் எதுவும் பேசாமல் இருந்தேன்.

இறுதியில் என்னைத் தேடி அவர்கள் வந்தனர்;

எனக்காகப் பேசுவதற்கு அப்போது எவர் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை.

இந்தப் பாடலை ஒட்டி,  மைக்கேல் ஆர். பர்ச் என்ற அமெரிக்க கவிஞர் கீழ்க்கண்ட பாடல் ஒன்றை இயற்றினார்:

அவர்கள் முதலில் முஸ்லிம்களைத் தேடி வந்தார்கள்,

பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தேடி அவர்கள் வந்தனர்,

பின்னர் பெண்ணிய வாதிகளைத் தேடி அவர்கள் வந்தனர்,

ஆனால் நான் இவர்கள் எவருடனும் சேர்ந்தவன் அல்ல என்பதால்

நான்  எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன்.

எனது சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கத் தவறும் அளவுக்கு உணர்ச்சியும் ஆர்வமும்

அற்றவனாக நான் இருந்துவிட்டேன்.

இறுதியாக என்னைத் தேடி எப்போது அவர்கள் வரப்போகிறார்கள்?

மவுனமாக இருப்பது விலை மதிப்பற்றது என்று ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், சமூக அடக்கு முறையின் போது கடைபிடிக்கப்படும் மவுனம் அடக்கு முறைக்கு ஆதரவு அளிப்பதாகவே ஆகிவிடுகிறது.

இந்த இந்து மதப் பாதுகாப்பு என்பது படைப்புக் கலைகள் என்ற எல்லையில் இருந்து இன்று  மக்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வந்துவிட்டது என்பதால், அதனை எதிர்த் துப் பேச வேண்டிய ஒரு தேவை, கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது. இது மற்ற எல்லா இடங்களையும் விட யோகி ஆதித்தியானந்தாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நன்றாகவே தெரிகிறது.  அவரது ஹிந்து யுவ வாஹினி அமைப்பினர் மாநிலம் முழுவதிலும் அவரது விருப்பங்களை நிறைவேற்றி வருவதன் மூலம் மாநிலத்தையே ஆட்சி செய்து வருவதுடன், மக்களது உறவு முறைகளைக் கூட கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் உறவு கொள்ளும் இணையர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்; இறைச்சி விற்பனை நிலையங்களை மூடும்படி வற்புறுத்துகின்றனர்; மதக் கலவரங்களைத் தூண்டிவிடுகின்றனர். சில நாள்களுக்கு முன்னர், மீரட் நகரில் ஒருவர் வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து இணையர்களைத் தாக்கினர்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு நம்மால் எதுவும் பேசாமல், செயல்படாமல் இருக்க முடியுமா? தனிப்பட்ட ரகசியம் பேணுதல் என்னும் நமது அடிப்படை உரிமை இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. எத்தகைய வாழ்க்கையை நாம் வாழ விரும்புகிறோம், எவரை நாம் நண்பர்களாகக் கொண்டிருக்க விரும்புகிறோம், எவரை நேசிக்க நாம் விரும்புகிறோம், எத்தகைய உணவை உண்பதற்கு நாம் விரும்புகிறோம் என்பதை முடிவு செய்யும் ஆற்றல் பெற்ற பண்பட்ட குடிமக்களாக விளங்கும் நமது நிலையும் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. நமது மவுனத்தைக் கலைத்து,  நமது சொந்த சமூகம் பற்றியும், சக குடிமக்களாக சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய பங்களிப்பைப் பற்றியும் சில அடிப்படைக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

நன்றி: ‘தி இந்து’, 25.04.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner