எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தியில் ஆளும் மோடி அரசு இங்கே ஆளும் மாநில அரசின் கையாலாகாதத்தனத்தைப் பயன்படுத்தி மெல்ல, மெல்ல பண்பாட்டுப் படை யெடுப்பைச் செய்து வருகிறது. தமிழகம் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை மோடி அரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

அதன் தாக்குதலுக்கு இளைய தலைமுறை மெரினாவிலும், தமுக்கம் மைதானத்திலும், இன்னும் பல இடங்களிலும் கூடி பதிலடி கொடுத்ததை மறந்துவிட்டுத்தான் மமதையோடு எச்.இராஜாக்களும், பொன்னாரும், ‘அக்கா’ தமிழிசையும் பேசி உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

22 மொழிகளில் ஒன்றுதானே இந்தி. அதற்கு மட்டும் அரியணை, ஒய்யாரம் ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பு ஏன்? விமானப்பயணச் சீட்டிலும், இரயில் பயணச்சீட்டிலும் இந்தியில் ஏன்? எல்லைக் கல்லில் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வகையில்லாமல், வக்கில்லாமல், “தலைமை அமைச்சர் மோடிக்குத் தமிழ்மீது காதல், தமிழின் சிறப்பைக் கூறுகிறார்” என்றெல்லாம் பொன்னார்களும், இந்திக்கு வால் பிடிக்கும், வக்காலத்து வாங்கும் திருக்கூட்டத்தினரும் பசப்பு மொழி பகர்கின்றனர்.

98 விழுக்காடு மாணவர்களுக்கு எதிராக, இரண்டு விழுக்காடு மாணவர்களுக்கு ஆதரவாக ‘நீட்’ தேர்வை நுழைத்துக் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வயிற்றிலடிக்கவில்லை, வாழ்க்கையை இருட்டடித்துள்ளனர் இந்த மாபாதகர்கள்.

அது மட்டுமல்ல, தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் நிம்மதியாக, மன அமைதியோடு தேர்வு எழுதக்கூட விடாமல் முழுக்கைச் சட்டை போடாதே, என்று சட்டையைக் கத்தரித்துப் போட்டுச் செல்ல வேண்டிய அவலம் நேர்ந்திருக்கிறது.

வாட்ஸ் அப்பில் கேனப்பயல் ஒருவன், “இன்ஸ்ட் ரக்ஷனை ஒழுங்காகப் படிக்கத் தெரியாதவனெல்லாம் ‘நீட்’ தேர்வுக்கு ஏனடா போக வேண்டும்“ என்ற கிண்டல் மொழிவேறு.

அத்தகைய நிலையில் உள்ளவர்கள் எல்லாம் ஆதிக்க வகுப்பின் பிள்ளைகளோடு எப்படிப் போட்டிபோட முடியும்? முடியாது என்பதாலேயே வேண்டாம் ‘நீட்’ என்று எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தக் கைக்கூலிகளின் காதில் விழவில்லை.

முழுக்கைச் சட்டைப் பிரச்சினை இருக்கட்டும். தமிழ்நாட்டில் இன்னும் சொல்லப்போனால் திரா விட மகளிரின் பாரம்பரிய உடையான சேலை கட்டிச் சென்று தேர்வு எழுதவும் தடையாம். இது அப்பட்டமான பண்பாட்டுத் தாக்குதல். தேர்வுக்கு எல்லோரும் சுடிதார் போட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம். இது பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரியலாம். நிச்சயம் நம் பண்பாட்டின் மீதான தாக்குதலே!

நீட் தேர்வே கூடாது என்னும்போது இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நாம் கூறவருவது படிப்படியாக இந்தியைத் திணிக்கிறார்கள். ஆரியப் பண்பாட்டிற்கு அடி எடுத்துக் கொடுப்பதன் விளைவு தான் அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் இந்தியில் உரையாற்ற வேண்டும் என்பது.

இந்தித் திணிப்பை இன்றல்ல; திராவிட இயக் கம் மட்டுமல்ல, கல்வியியல் நிபுணர்கள், சிறந்த வல்லுநர்கள் எதிர்த்திடுகிறார்கள் என்பதும் வரலாற் றின் பக்கத்தைப் புரட்டினாலே தெள்ளத் தெளிவாகப் பளிச்சிடுகிறது.

இதோ ஒரு வரலாற்று ஆதாரம். அறுபது ஆண்டுகளுக்கு முன்னே அறிஞர் பெருமகனார் சந்து முனையிலோ, எங்கோ ஒரு சிறு கூட்டத்திலோ எடுத்துக் கூறியதல்ல. சட்டமன்றத்தில் விடுத்த எச்சரிக் கையின் வரலாற்றுத் தகவல் இது.

“மொழி வெறி கொண்டு இந்தியை நம்மீது திணிப்பதை ஒப்ப முடியாது; நாம் பிழைப்பதெப்படி என்பதல்ல, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே பிரச்சினை”

இப்படிச் சென்னை மேலவையில் 1958லேயே இடித்துரைத்தார் டாக்டர் ஏ.லட்சுமணசாமி. டாக்டர் எ.எல்.முதலியார் என உலகம் அறிந்த புகழ் பெற்ற மருத்துவர். 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக விளங்கியவர். சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் விளங்கியவர். பிப். 13, 1958இல் மேலவையில் அன்று முழங்கியது. இன்றைய மோடி அரசுக்கும் விடத்தக்க எச்சரிக்கை மணி என்பதால் அதை இங்கே கண்ணுறுவது பயனளிக்கும்.

அனுதாபம் தேவையில்லை

“இந்திமொழித் திணிப்புக்கு நாம் ஒரு போதும் இணங்க முடியாது. ஆட்சி மொழிப் பிரச்சினையில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நமது முக்கிய கோரிக்கையாகும். சென்னை அரசியலார் அனுப்பி வைத்த ஆட்சிமொழி பற்றிய ஆலோசனையை மத்திய சர்க்கார் அனுதாபத்துடன் கவனிப்பர் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டார்.

நாம் அனுதாபத்துடன் கவனிக்க வேண்டும் என்று வருத்திக் கேட்கவில்லை.

நியாயம் வழங்கியாக வேண்டியது அவர்கள் கடமை என்பதை வலியுறுத்துகிறோம். மொழிப் பிரச்சினை ஒரு கொள்கையாகும். இதில் நியாயம் கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

நாம் உத்தியோகப் பிழைப்புக்காக இங்கிலீஷ் வேண்டுமென்று வற்புறுத்தவில்லை. இந்நாட்டினர் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்.

இந்தி வேண்டுமென்பவர்கள் மொழிவெறி கொண்டு நம்மீது திணிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்விதம் திணிக்கவே வடவர்கள் விரும்புகிறார்கள்.

இங்கு அண்மையில் வந்த யூனியன் அமைச்சர் ஒருவர் இங்கிலீஷ் அடிமை மொழி என்றும், அதை விரும்புவோர் அடிமைகளே என்றும் பேசி ஏசிச் சென்றுள்ளார். இது அவர்கள் இந்தித்திணிப்பில் எவ்வளவு தீவிரமாயிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது மொழிவெறியின் அடையாளமாகும். இதனால் நாடு பிரிய வேண்டியதன் அவசியத்தை அவர்களே வலியுறுத்துகிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும்“.

மேலே கண்ட ஏ.எல்.முதலியார் கருத்து இன்றும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். இந்தி வெறியர்கள் 60 ஆண்டுகளாக இதையே கூறி வருகிறார்கள்.

இச்செய்தியை 14.2.1958 “விடுதலை”யில் காண்கி றோம்.

இந்தியில் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், பதில் கூற வேண்டும் என்று இப்போது கட்டளை பிறப் பிக்கிறார்கள் அல்லவா? இது போன்ற பிரச்சினை 60 ஆண்டுகளுக்கு முன்இருந்ததற்கும் ஓர் ஆதாரத்தை “விடுதலை”யில் காண்கிறோம்.

பார்லிமெண்டில் இந்தியில் பதிலா?
திரு. எச்.டி.ராஜா கண்டனம்
என இடம் பெற்ற செய்தி இது.

“நேற்று ராஜாங்க சபைக் கூட்டத்தில் வர்த்தக அமைச்சர் திரு. கவல்கோ சில கேள்விகளுக்கு இந்தி யில் பதில் சொன்னார். இதைக்கேட்டதும் எச்.டி.ராஜா கோபமுற்று இப்படி இந்தியில் பதில் கூறுவதை மிகவும் ஆத்திரத்துடன் கண்டித்தார்.

கேட்கப்படும் கேள்விக்கு அமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றும், இந்தி தெரியாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங் கிலத்தில் பதில் சொல்ல வேண்டுமென்றும் கேட்டார்.
திரு. நேரு தலையிட்டு “முதலில் கேள்வி எம் மொழியில் கேட்கப்படுகிறதோ அம்மொழியிலே பதிலளிப்பதுதான் சர்க்காரின் கொள்கை” என்று விளக்கினார்.

ஆனால் இன்று மோடி அரசு இந்தியிலேதான் அமைச்சர்கள் பேச வேண்டும், இந்தியில் தான் பதில் கூற வேண்டும் என்று இந்தித்திணிப்பில் ஈடுபடுகிறது.

இந்தித்திணிப்பைத் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பதாக எண்ணினால் விரைவில் தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட நேரிடும் என எச்சரிப்பது நம் கடமை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner