எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார்

கருப்புச் சட்டைப் படை என்பதாக ஒரு படை ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் திரட்டப் படுவது பற்றிப் பலருக்குக் கிலி ஏற்பட்டு அந்தக்கிலியைப் பரிகாசம் செய்வதன் மூலமாகப் பல இடங்களில் காட்டி வருகிறார்கள். நாட்டில் அரசியலின் பேராலோ மதத்தின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்சியாரும் அக்கட்சித் தொண்டாற்றுவதற்கு என்று ஒவ்வொரு படையை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ராம தண்டு, அனுமான் சைனியம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதளம் என்பன போன்ற பல படைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் எவரும் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, கருப்புச் சட்டைப்படை என்பதற்கு ஆக மாத்திரம் ஏன் இத்தனை பேர்கள் பரிகாசம் செய்யவும், ஜாடை பேசவும் (கேலிச்சித்திரம்) பொம்மை போட்டுக் காட்டவுமான காரியங்கள் செய் கிறார்கள் என்பது விளங்கவில்லை. எப்படி இருந்தபோதிலும் கருப்புச் சட்டைப்படை என்பது மற்றப் படைகளைவிட மக்கள் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை என்பதோடு, அதற்கேற்றபடியே மக்கள் கவனத்தை ஆழ்ந்து செலுத்தும்படியான அளவுக்குக் கருப்புச் சட்டைப்படை வேலை செய்யப் போகிறது என்பதிலும் அய்யமில்லை.

கருப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக்கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாசவேலை செய்து நம் மக் களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையோ பாழாக்கிக்கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்கு ஆக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என் பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்.

கருப்புச் சட்டைப் படை என்கின்ற பெயர் சிலருக்கு இழிவாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. அனுமான் படை, வானர சைனியம் என்று சொல்லப்படுவதை மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதி பொறுத்துக் கொண்டிருக்கும்போது, கருப்புச் சட்டைப் படை என்பது மாத்திரம் மக்களுக்கு எந்த விதத்தில் இழிவாக கருதப்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. சிலரால் கருப்புச் சட்டை பார்வைக்கு அசிங்கமாக இருப்ப தாக சொல்லப்படுகிறது. பகுத்தறிவு உள்ள மக்கள் உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும்,பட்டை நாமமும், சாம்பல் பூச்சும், தொப்பை வயிறு தொப்புள் குழியுடன் தெரியும்படியான பஞ்சகச்சமும்; சூத்திரன் என்று ஒரு ஜாதியும், பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன், சக்கிலி என்று ஒரு ஜாதியும் அதற்கு ஒவ்வொரு மாதிரி அடையாள வேஷமும் கொண்டு அவற்றை அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியைவிடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும் கேலியாக வும் இருக்கக்கூடும் என்று கேட்கிறோம்.

மற்றும் கன்னான் வார்த்துக் கொடுத்த செம்புப் பொம்மைகளைச் சுவாமிகள் என்று சொல்லி அதை வண்டியில் வைத்து வாத்தியத்துடன் இழுப்பதும், அதற் குக் கல்யாணம் காரியாதி செய்வதும் பிள்ளை குட்டிகள் இருப்பதாகக் காட்டுவதும் சோறு பலகாரம் படைப்பதும் ஆன முட்டாள் தனமான காரியங்களைவிடவா கருப்பு சட்டைக்காரர்கள் மக்களுக்குக் கேலிக் கிடமாய் நடந்துகொள்ளுகிறார்கள் என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறோம்.

இந்த நாட்டில் உண்மையான முட்டாள் தனத்தை யும், காட்டுமிராண்டித் தனத்தையும், சுயநல சூழ்ச்சிக் காரர்கள் மக் களுக்குள் கடவுள், மதம் என்னும் மயக்க வஸ்துக்கள் பேரால் புகுத்தி மடையர் களாகவும், மானமற்றவர்களாகவும் இழிவுபடுத்தி வைத்திருக்கும் காரியங்களைப் பற்றி இந்நாட்டு மக்கள் சிறிதும் கவலையும் இல்லாமல், மான உணர்ச்சியும் இல்லாமல் பொறுத்துக்கொண்டு, பின்பற்றி வந்த கார ணத்தாலேயே அவைகளை ஒழிக்கவோ, அவ்விழிவுகளிலும், மடமையிலும் இருந்து வெளிவரவோ எவராலாவது செய்யப்படும் முயற்சிகளையெல்லாம் அம்முயற்சியின் எதிரிகள் பரிகாசம் செய்தும், பழி சுமத்தியும், குறும்புப் பிரசாரம் செய்தும், மற்றும் பல வழிகளில் வஞ்சகம், துரோகம், பலாத்காரம் முதலியவைகளைச் செய்தும், அடக்கி வைத்தும், ஒழித்தும் வந்திருக்கிறார்கள். அதுபோலவே திராவிட மக்களின் இழி வையும், மடமையையும் நீக்க இன்று முன் வந்திருக்கும் கருப்பு சட்டைப் படையைப் பற்றி எதிரிகள் கேலி செய்து பழி சுமத்தி குற்றம் கற்பிப்பது இப்போது அதிசயமல்ல என்போம்.

வெள்ளைக்காரனை ஓட்டுவது என்று பெயரை வைத்துக்கொண்டு அதற்கு ஆக என்று ராட்டினம் சுற்றுவதும், வெள்ளையனை ஓட்டும்படை (தேசிய வீரன்) என்று பெயர் வைத்துக்கொண்டு கோணிச்சாக்கை (கதர் துணியை) கட்டிக்கொண்டு குரங்கு குல்லாயை (கதர் குல்லாயை) தலையில் மாட்டிக்கொண்டு திரிகிறதுமான பைத்தியக் காரத்தனத்தை விட, ஆபாசக் காட்டு மிராண்டி செய்கையை தோற்றத்தைவிடக் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் ஆபாசமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

மனிதனுக்கு மானம் பிரதானமே ஒழிய அழகு பிரதானமல்ல. அழகு என்பது நாம் ஏற்படுத்திக் கொள் வதாகும். நம் பெண்கள் ஆபாசமாய் வேஷம் போட்டுக் கொள்ளுவதைக் காதிலும், மூக்கிலும் ஓட்டைகள் போட்டுக் கொள்ளுவதை, அதில் விகா ரமாய் நகைகள் என்று கண்ட கண்ட வைகளை மாட்டிக் கொள்ளுவதை அழகென்கிறோம். அப்படி இல்லாமலிருப்பதை அசிங்கமாக இருப்பதாகக் காண்கிறோம். ஆனால் மானமும், மடமையும் நாம் ஏற்படுத்திக் கொள்வதல்ல. நமக்கு இயற்கையாகவே அவை அறியப்படக் கூடிய வைகளாகும்.

எனவே, கருப்புச் சட்டையைப் பற்றி மற்றவர்கள் (நம் எதிரிகள்) கேலி செய்கிறார்கள் என்று படை வீரர்கள் யாரும் கருதிவிடக் கூடாது என்பதோடு நிர்ப்பந்த மாக ஏற்படக்கூடிய சமயம் தவிர மற்ற சமயங்களில் கருப்புச் சட்டை மாத்திரமல் லாமல் கருப்பு உடை அதாவது வேஷ்டியும் அல்லது பைஜாமா என்றும் கால் சட்டையும் கூட கருப்பாய் இருந்தாலும் நலமேயாகும். சட்டைகளை கருப்பு சட்டைப் படை ஸ்தாபனத்தில் இருந்தே விலைக்குச் சப்ளை செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன.

பெண்களும் இப்படையில் சேரலாம். அவர்கள் கருப்புச் சேலை அல்லது குறைந்த அளவு கருப்பு ரவிக்கையையே சதா அணிந்து கொள்ள வேண்டும். கூடுமான வரையில் நகைகளை வெறுத்துத் தள்ள வேண்டும்.

இன்று நம்மைப் பரிகாசம் செய் கிறவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும்படியான அளவுக்கும், நம்மைப்போல் அவர்களும் காப்பி அடிக்கும்படியான அளவுக்கும் நாம் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம், வேலை செய்யவும் போகிறோம். இதற்கு ஆக நாம் ஒவ்வொருவரும் குடும்பம் வாழ்வு என்பவைகளைத் துச்சமாகக் கருத வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்று தோன்றியுள்ள இந்த திராவிடர் கருப்புச் சட்டைப் படை இயக்கம் பொதுநல வாழ்வின் பேரால் தொப்பை வளர்க்கவோ யோக்கியதைக்கு மேற்பட்ட சுகவாழ்வு வாழவோ ஏற்பட்டதல்ல, அப்படிப் பட்டவர் என்று சந்தேகிக்கப்பட நேர்ந்த எவருக்கும் கூடத் திராவிட இயக்கம் இடம் கொடுத்தால் இயக்கம் தற்கொலை செய்து கொள்ளச் சம்மதித்தது போலாகும்.

இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன் நலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தனது மானாவ மானத்தைக் கூட லட்சியம் செய்யாமல் இயக்கத்திற்கு தலை கொடுக்கக் கூடியவர் களாகத் துணிவுகொள்ள வேண்டும். விளம் பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுபவர்கள் திடீர் என்று கவிழ்க்கப்பட்டு விடுவார்கள் என்பதை மனதிலிறுத்திக் கொண்டு இதில் கலக்க வேண்டும். உண்மையான இயக்கத் தில் இது இயற்கை. ஆதலால் சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவை களுக்குக் கருப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நன்றாய் வலியுறுத்திக் கூறு கிறோம். அடுத்த மாதம் சென்னையில் கூடும் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் கருப்புச் சட்டை விதிகள் மற்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படும்.

இப்போது படைவீரர்கள் தங்கள் கழுத்து அளவு, மார்பு அளவு, உயரம் முதலியவை களைத் தெரிவிக்க வேண்டும். சட்டை 1க்கு ரூபாய் 1-12-0 அல்லது 2-க்குள் விலையாக லாம். சட்டை தேவை உள்ளவர்கள் எவ் வளவு வேண்டும் என்பதையும் எழுத வேண்டுகிறோம்.

- ‘குடிஅரசு’ தலையங்கம் - 17.11.1945

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner