எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...

நாகம்மையார் யார்?

தந்தை பெரியாரே கூறக்கேட்போம் “நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்“.

1933இல் நாகம்மையார் உயிரோடிருந்த வரை யிலும் தந்தை பெரியார் இல்லம் எப்பொழுதும் விருந்துக் கூடமாகவே இருந்தது. ஏனென்றால் நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே.

ஒன்று தந்தை பெரியார் எப்பணியில் ஈடுபட் டாலும் தானும் உறுதுணையாக இருப்பது.

இரண்டு தம் இல்லம் வரும் எல்லோருக்கும் முகஞ்சுளியாது உணவு வழங்குவது.

அதனாலே தான் தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தவரை அன்னை நாகம்மையார் பட்டாடை துறந்து முரட்டுக் கதர்ச்சேலையை அணிந்தார்.

1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் காந்தியிடம் அப்போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று மண்ணுருண்டை மாளவியா எனத் தந்தை பெரியார் கூறியவர் கூறியபோது அது என் கையில் இல்லை, ஈரோட்டில் இரு பெண்கள் கையில் என அதில் ஒரு கை நாகம்மாள் என்பது இன்று நாடறிந்த செய்தி.

நாடறியாத முதல் செய்தி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண்மணி. 4.12.1923 திருச்சி தெப்பக்குளம் முனிசிபல் சத்திரத்தில் நடை பெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசின் முதல் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.12.1923 சுதேசமித்திரன் வெளியிட்ட செய்தி இது.

அடுத்த இரண்டாவது நிகழ்ச்சியைத் திரு. வி.க.வே கூறக்கேட்போம்.

“வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்.

வைக்கம் வீரர் என்று தந்தை பெரியாரைப் பாராட்டுகிறோம். ஆனால் வைக்கம் வீராங்கனை நாகம்மையாரைக் குறிப்பிடத்தவறுகிறோம்.

தந்தை பெரியார் வைக்கம் அறப்போரில் ஒரு மாதம் சிறைப்பட்டு விடுதலை ஆனதும், பிரஷ்ட உத்தரவு போடப்பட்டு மீறியதற்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று திருவாங்கூர் சிறையில் அடைக்கப்ட்டார்.

அப்போது நாகம்மையார் விடுத்த அறிக்கை 12.9.1924 நவசக்தியில் (பக்கம் 8) வெளியானது.

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு 11.9.1924 மறுபடியும் இராஜத்துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாக சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத்திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள்வளர வேண்டும் என்றும் கடவுளையும் மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.

அவர் பாக்கி வைத்து விட்டுப் போனதாக நினைத்துக்கொண்டு போகிற வரைக்கும் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச்சரியாக அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்கு வர தலைவர்களையும் தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்திக் கொள்கிறேன்.”

நாகம்மையார் வைக்கம் அறப்போரை வெற்றி பெறச் செய்தவர். தோழர் எஸ்.இராமநாதன், தமிழகத்துத் தேசிய இயக்கப் பெண்டிரைச் சேர்த்துக் கொண்டு போராட்டக் களத்தில் வீராங்கனையாக விளங்கினார். திருவாங்கூர் அரசில் சுற்றுப்பயணம் செய்து போராட்டத் தீ அணையாமல் காத்தார். மகளிர் பிரிவு அமைத்து வீதியில் அமர்ந்து, இராட்டையில் நூல் நூற்று நிதி திரட்டிப் பிடி அரிசி பெற்று போராட்டத்திற்கு உயிர் கொடுத்தார். போக்குவரத்துக்குத் தடையாய் இருந்ததாக குற்றஞ்சாட்டடப்பட்டு அய்ந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டடு அதைக் கட்ட மறுத்து கோர்ட்டு கலையும் வரை சிறைப்பட்டார். விசாரணைக்கு முந்தி எட்டு நாள் ரிமாண்டில் அடைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப் போரில் சிறை சென்ற முதல் பெண்மணிகள் நாகம்மையாரும் கண்ணம்மாளும் தான்.

யார்யாருக்கோ சிலை வைக்கிற, தெருக்களுக்குப் பெயர் வைக்கிற,ஸ்டாம்ப் வெளியிடுகிற தேசீ யம் பேசுவோர் நாகம்மையார் தொண்டை உணர வில்லை என்பது வேதனைக்குரியது இன்றாவது செய்வார்களா?

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் குடும்ப உறவோடு விளங்கியது எனில் அதற்குத்தந்தை பெரியார், தாயார் நாகம்மையார். தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் பங்கேற்றார். தந்தை பெரியாருடன் மலேசியப் பயணம் சென்று வந்தார்.

தந்தை பெரியார் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் செய்த 1923 டிசம்பரில் பத்து மாத காலம் மேல்நாட்டுப் பயணம் புறப்பட்டபோது ஏற்பட்ட உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும், “குடி அரசுப்” பத்திரிகைகையயும் தளராமல் நடத்தியவர். எனவே தான் 1950இல் சிவகாமி சிதம்பரனார் எழுதிய வரிகள் மெய்ப்பிக்கும். “ஈ.வெ.ரா. சுற்றுப்யபயணத்திலிருந்த சுமார் 10 மாதங்களுக்கும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன் செய்த வேலையை விட அதிக வேலை செய்தது. இதற்குக் காரணம் அன்னையார் இயக்கத்தோழர்களுக்கு அளித்த உற்சாகமேயாகும். தந்தை பெரியார் சுயமரியாதை வீரர் ஆன போதிலும் அவரையே விஞ்சக்கூடிய சாதனை நிகழ்த்திய பெண்மணி அவர்”.

தாலியைப் புனிதமாக ஒரு காலத்தில் கருதியவர் தாலி கட்டாத ஒரு புரட்சித் திருமணத்தை நடத்தி யவர்.

25.7.1929இல் கோபாலகிருஷ்ணன் - ஆர்.என். லட்சுமி விதவா விவாகம் சடங்குகள் ஒழித்த திருமணம், தந்தை பெரியார் இல்லத்தில் நாகம் மையாரால் குத்தூசி - குருசாமி - குஞ்சிதம் அம்மையார், சிவகாமி - சிதம்பரனார். நீலாவதி ராமசுப்பிரமணியம்! திருமணங்களைத் தந்தை பெரியாருடன் இணைந்து நடத்தினார்.

12.9.1932 இரவு 9.30 மணிக்கு நாகம்மையார் தலைமையில் திரு. முருகன் - திருமதி. செல்லம் மாள் திருமணம் மாலை மட்டும் சூடித் தாலிக் கட்டாமல் நடைபெற்றது. தந்தை பெரியார் இல்லாமல் நடைபெற்ற மணம். இது நடைபெற்றது இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன், நிகழ்த்தியவர் நாகம்மையார்.

பத்திரிகை வெளியீட்டாளர்

“குடி அரசு” என்பது அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் வீறு கொண்ட மனித நேயத்தின் ஒளிக்கதிர். ஓய்வறியாப் போர் வீரரான தலைவர் பெரியாரின் முனை மழுங்காப் பகுத்தறிவு ஆயுதம் என்பார். அந்த “குடிஅரசை” தந்தை பெரியார் அய்ரோப்பியப் பயணம் செய்தபோது  வெற்றிகரமாக நடத்தியவர் அன்னையார்.

1928இல் வெளியான ரிவோல்ட் தந்தை பெரியாரை ஆசிரியராகவும், நாகம்மையாரை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த ஏடு.

நாகம்மையார் 11.5.1933 மறைந்தார். தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி 14.5.1933இல் வெளி யாயிற்று. இந்த இரங்கல் செய்தி தந்தை பெரியார் எத்தகைய மனிதர்? மனைவி மீது அன்புப் பிடிப்புடையவர் என்று காட்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner