எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...

தந்தை பெரியார் மறைந்தபோது இனி இயக்கம் அவ்வளவுதான் என்று எண்ணியவர்களின் எண் ணத்தில் மண் விழும்படி அன்னை வீரிட்டெழுந்தார். அய்யாவின் எண்ணம் பொய்த்து விடாதபடி புது வீராங்கனையாகக் கொள்கை கொடி கட்டிப்பறக்கச் செய்பவராகத் தந்தை இல்லாத சோகத்தை நெஞ்சில் தாங்கிப் புறப்பட்டார்.

1973இல் இயக்கத் தலைமைப் பொறுப்பைத் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றுக் கொண்டவர் செய்த முதல் பணி, தந்தை பெரியாரின் செயல் முடிப்பது. அவர் வகுத்து தந்த பாதையில் நடைபோடுவது என்று முடிவெடுத்தார்.

ஒரு மாபெரும் இயக்கத்தலைவியான அவரிடம் இருந்த இந்த அரிய பண்புகளை, எளிமையை எடுத்துக் கூறாவிடில் மணியம்மையார் பற்றிய கூற்று நிறைவு பெறாது.

எளிமையென்றால் அவ்வளவு எளிமை. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள், அவருடைய சொந்தச் சொத்துக்கள் ஏராளம். ஆனால் அவர் நினைத்திருந்தால் ஆடம்பரமாக இல்லாவிடினும், மிகச் சொற்ப வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம். அப்படி வாழ்ந்திருத்தால் கூட 58 வயது என்பதைத் தாண்டி மேலும் சில காலம் வாழ்ந்திருக்கக்கூடும். அவரோ மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

திருச்சியிலிருந்து சென்னை வரும்போது மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் மக்கள் கூட்டத்தோடு ஒருவராக அமர்ந்து வருவார். வருபவர், மாற்று உடை என்று ஒரு சேலை, பாவாடை இவற்றை ஒரு துணிப்பையில் எடுத்து வந்து இரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வந்து விடுவார். திடலில் இருந்து தகவல் அறிந்து அழைத்துவரச் சென்றால், “இந்த ரயில் நிலையம் அருகிலேயே திடல் இருக்கிறது. எதற்கு வீணாக வர வேண்டும்“ என்று கடிந்து கொள்வார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்ன இரண்டு தகவல்களை இங்கே பதிவு செய்தால் சரியாக இருக்கும். “விடுதலை” ஆசிரியர் மணியம்மையார். எனவே கவிஞர் “விடுதலை” பொறுப்பேற்ற போது தலையங்கம் தான் எழுதுவது சரியாக இருக்காது என்று பழைய தலையங்கங்களையே வெளியிட்டு வந்தார்.

ஒரு நாள் மணியம்மையார் கவிஞரை அழைத்து “நாளை முதல் ‘விடுதலை’யை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். அறிவிப்பு வெளியிட்டு விடு” என்று சொல்ல அதிர்ச்சியுற்ற கவிஞர் “ஏன் அம்மா? அவ்வாறு செய்ய வேண்டும்?” என்று கேட்க “பின் என்ன பழைய தலையங்கங்களையே போட்டுக்கொண்டு இருந்தால் தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். உன்னை எழுதச்சொன்னேன். நீ எழுதத் தயங்குகிறாய்? பின் பத்திரிகை நடத்தி என்ன பயன். நிறுத்தி விட வேண்டியது தான்” என்று சொல்ல அதன் பின் தாமே தலையங்கம் எழுதுவதாகச் சொல்லி அப்பணியைச் செய்து வந்திருக்கிறார்.

அம்மாவின் பண்பிற்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சென்னை புரசைவாக்கத்தில் கண் அறுவைச் சிகிச்சை யினை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மருத்து வமனையில் செய்து கொண்டவரை கவிஞர் சென்று கண்டிருக்கிறார். “என்ன அம்மா இப்படி சொல்லாமல் வந்து மருத்துவ மனையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு அன்னையார் “டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். நர்ஸ் மருந்து ஊற்றுகிறார். எனக்கு உணவு முதலியன கொடுப்பதற்குத் தங்கை மகள் உடன் இருக்கிறாள். நீ என்ன செய்யப் போகி றாய்! சரி வந்ததற்கு விடுதலையைப் படித்துக் காட்டி விட்டுப்போ” என்று கூறிவிட்டாராம். எவ்வளவு எளிமையான குணம் என்று பாராட்டாமல் இருக்க முடியாது.

இப்படி அம்மாவின் எளிமைக்கு இன்னும் பல சான்று காட்டலாம். மேலும் ஒன்றே ஒன்று. “விடுதலை” சம்பந்தம் இல்லத்திருமணம் மறுநாள் அம்மாவின் தலைமையில் நடைபெற இருக்கிறது. திடலில் பெரிய பந்தல் போட்டு விளக்கு அலங்காரத்துடன் தடபுடல் விருந்து ஏற்பாடுகள் பலமாக இருந்தன.

திருச்சியிலிருந்து மாலை அம்மா வந்து சேர்ந்தார் கள். பலத்த ஏற்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி. ஆசிரி யரை அழைத்தார்கள். “வீரமணி நாம் திருமணங்களை எளிமையாக நடத்தவேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். ஆனால் நம் திடலிலேயே இவ்வளவு ஆடம்பரமா? நாளை நான் வரப்போவதில்லை” என்று கூறி விட்டு ஷெனாய் நகர்  சுந்தரவடிவேலு இல்லம் சென்றவரை ஆசிரியர் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார்கள்.

எளிமைக்கு மட்டுமல்ல; துணிச்சலுக்கும் தொண் டர்களை மதித்துப் போற்றுவதிலும் அம்மாவின் வாழ்வில் இடம் உண்டு.

1957இல் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப் பட்ட வேளையில் திருச்சி சிறையில் இறந்த இரு தொண்டர்களின் உடலைக் கொடுக்காமல் சிறை நிருவாகம் அழிச்சாட்டம் செய்தபோது அன்னையார் சென்னை வந்து அமைச்சர்களிடம் பேசி இருவர் உடலையும் வெளிக்கொணர்ந்து காவிரிக் கரையில் புதைக்க முயன்றபோது, காவல்துறை அதிகாரிகுறிப்பிட்ட பாதை வழியேதான் செல்ல வேண்டும் என்று கட்டளையிட “முடியாது” என்று மறுத்துச் சாலையில் அமர்ந்து மறியல் செய்தவர் நம் தங்கத்தாய் மணியம்மையார். இது நடந்தது திராவிடர் கழக ஆதரவு பெற்ற காமராசர் ஆட்சியில்.

அதைப் போலவே பின்னால் திராவிடர் கழக ஆதரவு பெற்ற கலைஞர் ஆட்சியில் அம்மாவின் சாதனை நிகழ்வு இராவண லீலா நடத்தியது. தடையை மீறி இராவண லீலா நடத்த முயன்றபோது டில்லியில் இருந்த இந்திரா அரசு தமிழகத்தில் ஆட்சி செய்த கலைஞர் அரசை அதை எப்படியும் நடத்த விடாமல் தடுக்கும்படி நெருக்கடி கொடுத்தது.

தலைவர் கலைஞர் காவல்துறை ஷெனாயையும், துரையையும் அனுப்பி அம்மாவிம் பேசச் சொன்னார். அம்மாவிடம் வந்து பேசினர். அம்மா உறுதியாக இராவண லீலா நடைபெறும், இராம, லட்சுமணர் உருவங்களுக்குப் பெரியார் திடலில் எரியூட்டப்படும் என்று கூறிவிட்டார். எனவே அவர்கள் அம்மாவிடம் விடை பெற்றுச் செல்கையில், “அய்யாவாக இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை நிறுத்தியிருப்பார்” என்று சொல்ல, அம்மா நச்சென்று அவர்களிடம் சொன்ன பதில் “ஆமாங்க! அவர் தலைவர். அவர் சொன்னால் தொண்டர்கள் மீற மாட்டார்கள். நான் இயக்கத் தலைவியானாலும் தொண்டர் தான். நான் சொன்னால் எந்த அளவிற்கு கேட்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது” என்று கூறிவிட்டார்.

மூன்றாவது நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடந்தது. தொண்டர் பொருட்டு அம்மா எந்த அளவிற்குப் பொங்கி எழுவார் என்று காட்டக்கூடியது. இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டச்சென்றபோது, மறைமலையடிகள் பாலத்தில் அன்னை, ஆசிரியர் உள்ளிட்டோரை கைது செய்தபோது வேனில் அமர்ந்திருந்தவர், வெள்ளைச்சாமி என்ற காவல் அதிகாரி தொண்டரை அடித்துக்கொண்டிருந்ததைக்கண்டபோது வேனில்  இருந்து இறங்கி, அந்த அதிகாரியிடம் “ஏன் அடிக்கிறாய்!” என்று துணிவுடன் கேட்டபோது, அங்கு வந்த வால்டர் தேவாரம் அந்த அதிகாரியைக் கண்டிக்காது, ஒரு மாபெரும் இயக்கத் தலைவியாம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரைப் பார்த்து, அவரெல்லாம் அந்தப்பதவிக்கு வரக்காரணமாக இயக்கத் தலைவி அன்னையாரைப் பார்த்து

“மி ஷ்வீறீறீ sலீஷீஷீt ஹ்ஷீu” - “உங்களைச் சுட்டுக் கொல்வேன்” என்று மிரட்டியது கண்டும் மிரளாமல், அஞ்சாமல் துணிவுடன் இருந்தவர் அன்னையார். எளிமைக்கும், துணிச்சலுக்கும், அன்னைப் பண்புடன் இயக்கத் தோழர்களுக்குத்தோழர்நாகம்மையார்போல் வடித்துக் கொட்டிய, தாமே சமைத்துப் போட்ட ஒருதலைவியை வேறு எங்கும் காணமுடியாது. உலகி லேயே பகுத்தறிவு இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே தலைவியை வேறு எங்கும் காணவியலாது.

அன்னையாரின் தொலை நோக்கத்தையும், அருட்கொடை உணர்வினையும் கூறாவிடில் இந்த உரை நிறைவு பெறாது.

தொலைநோக்கு என்பது, தனக்குப்பின் இந்த இயக்கம் நிலை பெறுவது யாரால் என்று கண்டுபிடித்து தமிழர்தலைவர்ஆசிரியர்வீரமணிதான்இயக் கத்தை வழிநடத்த, தந்தை பெரியாரை உலக மயமாக்க உகந்தவர் என்று கண்டறிந்த ஒன்று போதும் அன்னையாரின் பெருமை கூற! இயக் கத்தில் எவ்வளவோ மூத்த தலைவர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இருந்தனர். ஆயினும் அன்னையார் அதைக் கண்டு கொண்டாலும், இயக்கம் தழைக்க தந்தை பெரியாரின் தொண்டு சிறக்க ஆசிரியர் வீரமணியே தகுந்த வாரிசு என்று உயில் எழுதி வைத்தார்.

இன்னுமொரு சம்பவம். மருத்துவமனையில் இருந்த அம்மா பொதுக் குழுக்கூட்டத்திற்கு வந்து தாம் வகித்த பொறுப்பைத் துறப்பதாகவும், ஆசிரியரிடம் அதனை ஒப்புவிப்பதாகவும் மருத்துவமனையி லேயே எழுதி எடுத்து வந்த கடிதத்தை ஆசிரியர் ஒப்புக்கொள்ளாது கிழித்துப் போட்ட நிகழ்ச்சியும் உண்டு.

இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள். எடுத்துச் சொல்லவும் ஆவல் தான். எனினும் கால நெருக்கடி கருதி இவ்வாய்ப்பு அளித்த தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக விளங்கிய முனைவர் ஏகாம்பரம், முனைவர் நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி கூறி இந்த அறக்கட்டளைப் பொழிவை நிறைவு செய்கிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner