எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கபில் சிபல் -

நேற்றையத் தொடர்ச்சி.....

வேலை வாய்ப்பு உருவாக்கம்

ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கு வோம் என்று மோடி அளித்த மற்றுமொரு உறுதி மொழியைப்பற்றி இப்போது பார்ப்போம்.

2013 நவம்பர் 22 அன்று, ஆக்ராவில் ஒரு பேரணியில் பேசிய நரேந்திர மோடி, ‘‘பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தால், கடந்த தேர்தலில் காங் கிரஸ் கட்சி வாக்களித்து நிறைவேற்ற முடியாமல் போன, ஒரு கோடி வேலை வாய்ப்பு களை நாங்கள் உருவாக்கிக் காட்டுவோம்.  அத்துடன் விவசாயிகளின் நலனே பா.ஜ.க. ஆட்சியின் மிகப்பெரிய கவலையாக இருக்கும்’’ என்றும் அப் பேரணியில் கூறப்பட்டது. ஆனால் உண்மை நிலை என்ன? இந்தியாவின் ஜி.டி.பி. ஆண்டுக்கு 8.5 என்ற அளவில் உயர்ந்து கொண்டிருந்த 2009-2011 மூன்று ஆண்டுகளில், ஆண்டுதோறும் அமைப்பு சார்ந்த துறைகள் மட்டும் 9.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்துள்ளன. கடந்த 2015-2016 இரண்டு ஆண்டுகளில்,  இது ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.  2011 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டு தோறும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 25 சதவிகிதத்திற்கும் குறைவானது இது. 2015 ஆம்  ஆண்டில் தொழிலாளர் சார்ந்த எட்டு துறைகளில் வேலை வாய்ப்புகள் 1.5 லட்சத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது; இது  எப்போதுமே இல்லாத குறைவான அளவாகும்.

அமைப்பு சார்ந்த துறைகளின் வேலை வாய்ப்புகளுடன், சேவைத் துறை வேலை வாய்ப்புகளையும் சேர்த்துக் கணக்கிடும்போது,  2016 இல் புதிய வேலை வாய்ப்புகள் சற்று கூடியுள்ளது. 2015 இல் 1.55 லட்சமாக இருந்த இது 2016 இல் 2.31 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது. என்றாலும் 2009 இல் அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்பட்ட  வேலை வாய்ப்புகளின் 25 சதவிகிதத்திற்கும் குறைவானது இது.

மகாத்மா காந்தி  ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட புள்ளி விவரங்கள், வேலை வாய்ப்பு இல்லாத நிலை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதையும், கூறப்போனால் மிகமிக மோசமாக ஆகி வருவதையும் தெரிவிக்கின்றன. மோடி பதவியேற்ற முதல் ஆண்டில் இத்திட்டத்தில் 4.65 கோடி குடும்பங்கள் வேலை செய்தன.  இது 2015-2016 ஆம் ஆண்டில்  இது  15 சதவிகிதம் உயர்ந்து 5.3 கோடியாகவும், 2016-2017 ஆம் ஆண்டில்  6 சதவிகிதம் உயர்ந்து 5.69 கோடியாகவும்  உள்ள வேலை தேடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி

பெண்களின் பாதுகாப்புபற்றி அளிக்கப்பட்ட மற்றொரு உறுதிமொழியினைப்பற்றி இப்போது பார்ப்போம். 2013 நவம்பர் 1 அன்று பூனாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மோடி, தலைநகரில் பெண்களைப் பாதுகாக்க மன் மோகன்சிங் அரசு தவறிவிட்டதைப் பற்றி பேசிய போது,  ‘‘டில்லி முதல்வர் ஷீலா தீட்சத்தும், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெண்களாக இருந்த போதிலும், டில்லி பாலியல் வன்முறையின் தலைநகரம் என்றே அறியப்பட்டுள்ளது. இனியும் யாரைத்தான் நம்புவது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள்’’ என்று பேசினார்.

2014 ஜனவரியில் டில்லியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்,  பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது பற்றியும், வீட்டு வேலை செய்பவர்கள் என்ற நிலையில் இருந்து பெண்கள் தேசத்தை உருவாக்குபவர்களாக மாற்றம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வதையும் பற்றி பேசிய மோடி, ‘‘நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்த நாட்டில் நடப்பதெல்லாம் நம்மை அவமான உணர்ச்சி மிகுந்தவர்களாக ஆக்குகிறது. பெண்கள் கவுரமாக நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்’’ என்று பேசினார்.

ஆனால், நாட்டில் நிலவும் உண்மை நிலை என்ன தெரியுமா?  2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2015 இல் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மொத்தத்தில் 3.1 சதவித அளவில் குறைந்து இருந் தது என்ற போதிலும், பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் 2.5 சதவிகிதம் கூடியுள்ளது என்று தேசிய குற்றப்பதிவு ஆய்வம் தெரிவிக்கிறது. 2015 இல் பெண்கள் கடந்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதில் டில்லி முதலிடத்தில் இருக்கிறது. நிர்பயா கற்பழிப்பு பாதுகாப்பு இயக்கத்தின் மய்யமான டில்லியில், ஒரு புதிய அரசின் கீழ், 2013 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டதிருத்த மசோதா எனப்படும் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டமசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, எதிர்பார்த்ததற்கு மாறாக, டில்லியில் பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்தே உள்ளது. டில்லியைப் போலவே, தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை 2012 இல் 24,923 ஆக இருந்தது, 2015 இல் 36,651 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பண வீக்கத்தைக்

குறைத்தல்

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோடி வெளியிட்ட மற்றுமொரு அறிக்கையில், ‘‘100 நாட் களில் பணவீக்கத்தைக் குறைப்போம் என்று கூறியதை நிறைவேற்ற மன்மோகன்சிங் அரசு தவறி விட்டது. மக்களை நம்பிக்கை மோசடி செய்தவர்களை நம்பாதீர்கள். வாஜ்பேயி, மொரார்ஜி தேசாய் அரசுகளால், விலைவாசி உயர்வைத் தடுக்க முடிந்திருக்கிறது என்னும்போது, நம்மால் ஏன் செய்ய முடியவில்லை. 2014 இல் ஆட்சிக்கு வரும் பா.ஜ.க. அரசு விலைவாசி உயர்வைக் கட்டாயமாகக் கட்டுப்படுத்தும் என்று நான் உறுதி அளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளர்.

ஆனால், உண்மை நிலை என்ன? உணவுப் பொருள்களின் விலை உயர்வு குறைவதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவே இல்லை. அதற்கு மாறாக, அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பருப்பு வகைகள் கிலோ 100-150 ரூபாய்க்கு விற்கப் படுகின்றன. அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரிதுக் கொண்டே செல்கிறது. தொழில்துறையின் உற்பத்தி அளவு குறைந்து போயுள்ளது; ரூபாயின் மதிப்பும் குறைந் துள்ளது. இந்த அரசு வெளியிடும் ஜி.டி.பி. புள்ளி விவரங்களை நம்புவதையும் மக்கள் எவ்வாறோ நிறுத்தி விட்டனர்.

லஞ்ச ஊழல்

இறுதியாக மோடியின் மற்றொரு உறுதிமொழி யின் மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். ‘‘லஞ்ச ஊழலற்ற  இந்தியாவை  உருவாக்குவதாக’’ அவர் உறுதி அளித்தார். 2014 பிப்ரவரி 16 அன்று இமாசல பிரதேச சுஜான்பூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மோடி,  ‘‘எனக்கு குடும்பமோ, உறவுகளோ இல்லை. நான் தனி மனிதன். யாருக் காக நான் லஞ்சம் வாங்கப் போகிறேன் அல்லது ஊழல் செய்யப்போகிறேன்?’’ என்று பேசினார்.

மேலும், எனது மனதும், உடலும் ஒட்டுமொத்த மாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் கூறினார். 2014 பிப்ரவரி 23 அன்று தனது டிவிட்டரில் மோடி, ‘‘நாங்கள் பதவிக்கு வந்தால், நாட்டின் உடமைகளை, செல்வத்தை எவரும் கொள்ளை அடித்துச் செல்லவிடாமல் காவல்காரர்களைப் போல நாங்கள் பாதுகாப்போம்’’ என்று எழுதி யுள்ளார். 2014 ஏப்ரல் 13 அன்று மோடி தனது டிவிட்டரில், ‘‘இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் அளவில், லஞ்சஊழலற்ற ஓர் இந்தியாவை உருவாக்குவது என்று உறுதிபடத் தீர்மானித்து அதற்காக எங்களை நாங்களே அர்ப்பணித்துக்கொண்டுள்ளோம்’’ என்று எழுதியுள்ளார்.

ஆனால், உண்மை நிலை என்ன?  பல்வேறுபட்ட அரசியல் துறைகளில் லஞ்ச ஊழல் நிலவுவது பற்றிய புகார்கள் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளன. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, 11,000 லஞ்சஊழல் புகார்களுடன் ரயில்வே துறை முன்னிலை வகிக்கிறது. மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு 2016 இல் 49,847 புகார்கள் வந்துள்ளன. 2015 இல் பெறப்பட்ட 29,838 புகார்களை விட இது 67 சதவிகிதம் கூடுதலாகும் என்ற இந்த விவரத்தை ஆணையம் நாடாளுமன்றத்துக்கு தான் அளித்துள்ள  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நன்றி: ‘தி இந்து’, 29.05.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner