எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- பவன் கே.வர்மா -

(மோடியிடம்  இருந்து நாட்டு மக்கள் மிக அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநில அரசால் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படத் தூண்டுதல் அளிக்காது என்று எதிர்பார்ப்பது, அரசியல் கிட்டப்பார்வை கோளாறே அன்றி வேறல்ல!)

விவசாய நிலங்களில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில் வெற்றி பெறுவது மட்டுமன்றி,  மற்ற மாநிலங்களுக்கும், புதிய பிராந்தியங்களுக்கும் அந்தத் தீ  பரவிவிடாமல் தடுப்பதிலும்  நரேந்திர மோடியின் அரசு  வெற்றி பெறாமல் போனால், செங்குத்தான மலைச்சரிவில் நிற்பது போன்ற ஒரு நிலைக்கு  விரைவில் அது உள்ளாகிவிடும். 2015 நவம்பர் மாதத்தில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த தோல்விக்குப் பிறகு, தொடர்ந்து இக்கட்சி பெற்று வரும் தேர்தல் வெற்றிகளால்,  மோடி அரசு செயல்படாமல் மெத்தனமாக இருக்கத் தொடங்கிவிட்டது. மக்களுக்கு மாபெரும் துன்பங்களை ஏற்படுத்திய, கடந்த கால சுதந்திர இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதுமே நிகழாத ஒன்றான, பணமதிப்பீட்டு நடவடிக்கைக்குப் பிறகு, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற மிகப்பெரிய வெற்றியே,  தங்கள் அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குச் சான்று எனக் கூறிக் கொண்டிருக்கும் மோடி அரசு,  விவசாயிகள் படும் துயர்களை பொதுமக்களின் ஒட்டுமொத்தப்  பார்வையில் இருந்து தொடர்ந்து மறைத்துவிட முடியும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நாடு பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று இந்திய நகர்ப்புற மக்கள் நம்பி மெத்தனமாக இருக்கும் நிலையில், கிராமப்புற இந்திய மக்களோ, எங்கோ ஓரிடத்தில், எவரோ ஒருவர் தீயைப் பற்ற வைப்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீரழிந்துவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுவது, தவறான தகவல்களின் அடிப்படையில் கூறப்படுவது என்ற நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் கூற்றை இதுவரை தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த ஊடகத்தினர், பல மேற்கத்திய, வடக்கத்திய மாநிலங்களில்  உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கூறி அம்மாநில விவசாயிகள் கொதித்து எழுந்து மேற்கொண்டு வரும் போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.

ஒரு மிகச் சிறிய தவறைக் கூட செய்யாத, செய்ய இயலாத அரசு என்று பெருமைப்பட்டுக் கொண்டு வந்த மோடியின் அரசு மீது இருந்த நம்பிக்கையும்,  இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில்  தோற்றுப் போவோம் என்பதை எதிர் கட்சிகள் ஒப்புக் கொள்ளும் நிலையும் ஒரே இரவில் தலைகீழாக மாறிப்போனது. மோடி அரசின் கல்லறை மீது இரங்கல் செய்தி எழுதுவதற்கான நேரம் இன்னமும் வந்துவிடவில்லை என்றாலும், மோடி அரசின் வரலாறு எழுதப்படும்போது, அதன் முடிவுக்கான தொடக்கம் ஏற்பட்ட நேரம் இதுதான் என்றோ அல்லது பதவி ஏற்றபிறகு முதன் முதலாக எழுந்த மாபெரும் சவாலினால்  அது எவ்வாறு பாதிக்கப்பட்டது என்றோ குறிப்பிடப்படும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

மத்திய பிரதேச மாநில மண்டாசுர், மகாராட்டிர மாநிலத்தின் சில பகுதிகள், மேற்கு உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நாட்டின் பல்வேறு பட்ட இடங்களில், விவசாயிகளிடையே திடீரென்று பொங்கி எழுந்த கோபம், அவர்கள் மனத்தளவில் நிலைத்தன்மையற்ற கோழைகளாக இருப்பதைக் காட்டுகிறதா? உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு முழுமனதான ஆதரவை மக்கள்  தந்து மூன்று மாத காலம் ஆகியிருக்குமா? உத்தரப்பிரதேச கிராமப்புற மக்களும், அண்டை மாநிலமான உத்தரகாண்ட் மாநில மக்களும் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாகவும், பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கும் வாக்களித்தனர் என்ற முரண்பாட்டிற்கான  பல அடுக்குகளைக் கொண்ட விடை ஆராய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.  உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பெரும் அளவிலும், பஞ்சாப் தேர்தல் முடிவுகளை ஓரளவிலும் தீர்மானித்த முக்கிய காரணி அடையாள அரசியலே என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்,  ஆளுங்கட்சிக்கு எதிரான பலமான உணர்வு வாக்காளர்களிடையே நிலவியது என்பதும் முக்கியமான காரணியாக அமைந்திருந்தது. மேலும், பஞ்சாபில் அகாலி தளக் கட்சியின் தலைமையிலான மாநில அரசில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது, அவ்வளவுதானே அன்றி, பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக்கவில்லை.

அதனால், பஞ்சாப் வாக்காளர்கள் மத, சமூக அடிப்படையில் வாக்களிக்காமல், வர்க்கப்பிரிவு அடிப்படையில் வாக்களித்தனர். இதற்கு நேர் மாறாக, உத்தரப் பிரதேச விவசாயிகள், தேர்தல் நெருங்க நெருங்க,  பொருளாதார பிரச்சினைகள் அவர்களை நெருக்க நெருக்க, ஜாதி அடிப்படையில் பிரிந்து நின்றனரே அன்றி, வர்க்கப் பிரிவுகளின் அடிப்படையில் ஒன்றுபட்டு வாக்களிக்கவில்லை. ஜாதிப் பிரிவினைகள் இப்போதைய உத்தரப் பிரதேச அரசியலில் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. அவர்களின் முகத்தில் அறையவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக, உத்தரப்பிரதேச மாநில பாரதிய விவசாய சங்கமும், மற்ற விவசாய அமைப்புகளும், போராடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இந்த போராட்டம் இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகே தொடங்கியது. முதலாவது, மற்ற மாநில விவசாயிகள் காட்டிய வழி. இரண்டாவது, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி தொடர்ந்து நிலவி வரும் குழப்பம். புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்று மூன்று மாத காலம் கழித்து, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம், யார் யார், எந்த அளவில் பயன்  அடைய முடியும் என்பது அந்த அறிவிப்பில் தெளிவாகக் கூறப்படவில்லை.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக, உறுதிமொழிகளை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே  பிரதமர் மோடி கடந்த மூன்று ஆண்டு காலத்தை கடத்தி வந்துள்ளார். மற்ற அரசியல்வாதிகளைப் போலவே மோடிக்கும் தான் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. ஆனால், மற்ற அரசியல்வாதிகளை மக்கள் நம்பியதை விட அதிகமாக அவர்கள் மோடியை நம்பினர். இதன் விளைவாக, மோடிக்கு முன்பு ஆட்சி செய்தவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை விட மோடியிடம் இருந்து மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்தனர். உத்தரப்பிரதேச மாநில அரசால் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படத் தூண்டுதல் அளிக்காது என்று எதிர்பார்ப்பது, அரசியல் கிட்டப்பார்வை கோளாறே அன்றி வேறல்ல! மகாராட்டிர மாநிலம், மத்திய பிரதேச மாநிலம் அவற்றைத் தொடர்ந்து இதர மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டம் ஏற்படுவதை எதிர்பார்க்கத் தவறுவது, மற்றவர்களைக் குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள பழக்கம் மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளதற்கான அடையாளமாகும்.  ஒரு அரசியல் கட்சியில் இருந்து  மாறி மற்றொரு அரசியல் கட்சியுடனும்  தொடர்ந்து கூட்டணி அமைத்து, அதிக விளைவுகளின்றி வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். எதிர்கட்சிகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டாலும், ஒதுக்கப்பட்டாலும், அலட்சியப்படுத்தப்பட்டாலும் கூட, மக்களின்  போராட்ட உணர்வினை அடக்குவது என்பது இயலாதது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள். ஓர் இயக்கத்துக்கு கட்டாயமாக ஒரு தலைவர் வேண்டும் என்பது இல்லை என்பதையும்,  போராளிகளுக்குள் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் என்பதையும் வரலாறு திரும்பத் திரும்ப மெய்ப்பித்துள்ளது. விவசாயிகளின் துன்பங்களை திடீரென்று உணர்ந்து கொண்டதால் மட்டுமே எதிர்கட்சித் தலைவர்கள் மண்டாசூருக்கு வரிசை கட்டிச்  செல்லவில்லை ;  அரசியல் அரங்கில் செயல்படுபவர்களாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் செல்கின்றனர்.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான நிதிச்சுமையை ஏற்றுக் கொள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துவிட்டார். நிதியமைச்சராக அவரால் இதனை செய்ய இயலக்கூடும். ஆனால்,  விவசாயக் கடன் தள்ளுபடி அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய முடிவு என்று கூறி ஒதுங்கிக் கொள்ள மற்ற பா.ஜ.. கட்சியினரால், குறிப்பாக மோடியினால் முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மோடிக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று பற்களைக் கடித்துக் கொண்டு விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று அறிவித்து விடலாம். அல்லது கடன் தள்ளுபடி செய்து, நிதிப் பற்றாக்குறை மலை போல வளர்வதற்கு இடம் கொடுத்து விட்டு,  நிதிநிர்வாக ஆற்றல் பெற்றவர்கள் என்ற தங்களது பெருமையைக் காற்றில் பறக்கவிடலாம். இவற்றில் எந்த வழியை மோடி தேர்ந்தெடுத்தாலும், அடுத்த பக்கத்திலான அவரது பயணம் அவ்வளவு எளிதாக இருக்காது. மற்ற மாநிலங்களுக்கும், கூடுதலான விவசாயிகளுக்கும், தற்போது அவர்கள் கோருவதுபோல  விவசாயக் கடன் தள்ளுபடி விரிவாக்கப்படாவிட்டால், இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது. என்றாலும், இது பற்றி மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முடிவும், அரசின் நிதிநிர்வாகம் மீது எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும்;  ஆனால், மோடி ஒரு திறமையான நிர்வாகி என்ற முகத்திரையை அது கிழித்துவிடும். மக்களுக்கு இலவசங்களை அளிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வெகு காலமாகவே மோடி கூறி வருகிறார். பொதுமக்களின் பரவலான கோரிக்கைகளுக்கு மோடி அடிபணிய நேரிட்டால், அவரது நற்தோற்றத்திற்கு பெரியதொரு பாதிப்பை அது   ஏற்படுத்திவிடும். மோடி உறுதி அளித்த நாட்டின் பொருளாதார வளத்தை இன்னமும் தாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது என்று மக்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக கேலியும் கிண்டலுமாக பேசி வந்தது,  மோடிக்கும், அவரது முக்கிய சகாக்களுக்கும் ஒரு நல்ல நேரமாகவே அமைந்துவிட்டது. அந்தக் காலம் முடிவடைந்து விட்டது போலவே தோன்றுகிறது. அடுத்த சில வாரங்களில் பிரதமர் தனது படகை எவ்வாறு ஓட்டிச் செல்லப் போகிறார் என்பதே, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 16.06.207

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner