எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- பவன் கே.சர்மா-

(உணவையும், மொழியையும் ஆயுதங்களாகக் கொண்டு பா.ஜ.க. ஒரு வகையான மனநிலையை மக்களிடையே தூண்டிவிட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற பல வேறுபாடுகள் கொண்ட ஒரு நாட்டின் அரசியலில்,  ஒரே தேசம் - ஒரே சிந்தனை என்ற உத்தி யைக் கடைபிடிப்பது மிகமிகக் கடினமானது ஆகும்.)

கருணை நிறைந்த தந்தையைப் போல செயலாற்று வதாகக் கூறிக்கொள்ளும் பா.ஜ. கட்சியினால், இந்து, இந்துத்துவ ஆதிக்கத்தின் நிபந்தனைகளுக்கு மறு விளக்கம் அளிக்கும், ஒரு தேசியத்தைப் பொறுத்துக் கொள்வதற்காக அளிக்கப்பட வேண்டியுள்ள விலை, ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளுக்கும்,   அரசியல் சார்ந்த விசுவாசத்திற்குமிடையே, மறு பக்கத்தில் நேரடி மோதலாக வெடித்துக் கிளம்பி உள்ளது. இந்தப் போராட்டத்தில் தங்களது மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதையோ, அவற்றைப் பறித்துக் கொள்வதையோ அனுமதிக்கமுடியாது என்று மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநில அரசுகள் பா.ஜ.கட்சியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளன.

சட்டம் இயற்றுவதற்கான பொறுப்புகள் வகைப் படுத்தப்பட்ட போது, அதிகாரங்களை மய்யப்படுத்தப் படுவதை உந்தித் தள்ளும் புதுடில்லி மத்திய அரசுகள், மாநில அரசுகளின் அதிகாரங்களை வேண்டுமென்றே ஆக்கிரமித்துக் கொள்வது தவறு  என்று நமது அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால்,  நரேந்திர மோடி அரசால் வெளியிடப்பட்ட பசுக்கள் கொல்லப்படுவதைத் தடை செய்யும் அறிவிக்கை அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலாகும். இந்த அறிவிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தால், நான்கு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில அரசுகளின் உரிமைகளை ஆக்கிரமித்துக் கொள்ள மோடி அரசு ஏன்  முடிவு செய்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. மாநில அரசுகளுடன் சட்டப் படியான ஒரு மோதலை மத்திய அரசு மேற்கொள்வதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றிய எச்சரிக் கையை அளிக்கும் போதுமான அளவிலான அரச மைப்பு சட்ட செயற்கைக் கோள்கள்  பா.ஜ.க.வைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மாநில அரசுகளைப் பொறுத்த அளவில், இது தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பாகும்,  அதே நேரத்தில்  இது  இந்திய அரசியலில் ஒரு குறுகிய விருப்பு வெறுப்பு உணர்வுகள் மீண்டும் தலைதூக்கச் செய்வதுமாகும்.

இதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக, அரசமைப்பு சட்டத்தைச் சுட்டிக் காட்டி, ஆதிக்க உணர்வு கொண்ட இந்து, இந்துத்வ யதேச்சதிகாரத்துக்கு எச் சரிக்கை விடுவது, பாஜ.கட்சியின் மாட்டிறைச்சித் தடைக் கோட்டைகளிலிருந்து மாறுபட்டிருக்கும், வரலாற்று கலாச்சார இடங்களிலும், அதனால் அரசியலிலும் மேற்கொள்ளப்பட இயன்ற நியாயமான நடவடிக்கையாகத் தோன்றலாம்.  மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்துவதும், வியாபாரத்துக்கு கேடு விளைவிப்பதும், பசுவைக் கொன்று மாட்டிறைச்சி உண்பதை அனுமதித்து இருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான சமூகங்களை நிலை தடுமாறச் செய்வது மான ஒரு தடையை மேற்கு வங்க அரசாலோ, கேரள அரசாலோ ஆதரிக்க முடியாது. 2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேகாலயா மாநிலத்தில் அதிக நேரம் வேலை செய்யும் பா.ஜ.கட்சியினாலும்கூட, இறைச்சிக்காக பசுக்களைக் கொல்வதைத் தடை செய் யும் அதிகாரத்தை மத்திய அரசு ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை, கண்டும் காணாதது போல காட்டிக் கொள்வதோ அல்லது அடிபணிவதோ இயலாது. அவ்வாறு அடிபணிவது, மக்களில் பெரும் பகுதியினரை பா.ஜ.கட்சியிலிருந்து அன்னியப்படுத்திவிடும் என்பதால், இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கால்பதிக்க வேண்டும் என்ற அதன் மாபெரும் செயல்திட்டத்தை அது சீரழித்துவிடும் என்பதுதான் அதன் காரணம்.

சுதந்திர இந்தியா தோற்றம் பெறுவதற்குக் காரணமாக விளங்கிய நமது முன்னோர்கள் நமது நாட்டைப் பற்றி கொண்டிருந்த கருத்துக்கு மாறுபட்ட, பா.ஜ.கட்சியின் ஒன்றுபட்ட இந்தியா என்ற நோக்கத்தை எட்டுவதற்காக, அதிகாரங்கள் மய்யமாக்கப்படும் ஒரு உளுத்துப் போன,  கருணையின்றி பலியிடும், மிகப் பழைமையான கருத்து காரணமாக, அரசமைப்பு சட்டப்படியான கூட்டாட்சி தத்துவம் பொருளற்ற நிலையில் மங்கிப் போகும் போது, மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான அரசியல் போராட்டம் தவிர்க்க இயலாததாக ஆகிவிடும்.

ஆட்சி மொழியாக இந்தியை மறுபடியும் திணிப்பது  என்ற முதலாவது பழைமை வாதக் கருத்தை நடைமுறைப் படுத்த முயன்றதன் காரணமாக, எதிர்பார்த்தபடி தமிழ் நாட்டிலிருந்து மாபெரும் எதிர்ப்பு கிளம்பியதுடன், மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்துப்  பள்ளிகளிலும் வங்காள மொழியை  கட்டாய பாடமாக ஆக்கி முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிடவும் காரணமாயிற்று. தாங்கள் கொண்டிருக்கும் குறுகிய விருப்பு வெறுப்பு காரணமாக, முதன்மையான தங்களது விருப்பத்தின்படி,  இந்தியை மறுபடியும் புகுத்துவதற்கு முயன்றது, கனன்று கொண்டிருக்கும் எதிர்ப்பு என்னும் பெருநெருப்பை விசிறிவிடுவது போன்றது என்பதை பா.ஜ.க. நன்றாக உணர்ந்திருக்க வேண்டும்.

பசுவதைத் தடையிலும், மற்றவர்களின் மனங்களைப் புண்படுத்தும் தற்பெருமை மிகுந்திருப்பதைக் காணா மல் இருப்பது என்பது முற்றிலும் இயலாததாகும். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்து மக்களின் வாக்குகள் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவக் கொள்கை பற்றிய பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக கடைபிடிப்பது என்ற உத்தியைப்  பயன்படுத்த வேண்டிய தேவையும், தங்களுக்கு அடித்தளம் இல்லாத மாநிலங்களில்  இடம் பெறுவதற்கு அந்த வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும்  பா.ஜ.கட்சிக்கு இருந்தது. அகண்ட இந்தியா பற்றிய தங்களது இந்துத்துவ செயல் திட்ட வரைபடத்தில் தாங்கள் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை பா.ஜ.க. தவறாகக் கணித்திருக்கக் கூடாது.

பிராந்தியக் கட்சிகளின் தோல்வி பற்றி தவறான பொருள் எடுத்துக் கொண்டும், அண்மையில் நடை பெற்ற இடைத்தேர்தல்களில்  திரிணாமூல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக, பெற்ற வாக்குகளின் அடிப்படையில்  இரண்டாவது பெரிய கட்சியாக  பா.ஜ.க.  வந்திருக்கும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் முன் எப் போதும்இல்லாதஅளவில்பா.ஜ.க.முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜியின் போவானிபூர் தொகுதியிலும், நக்சல்பாரியிலும் பேரணிகளை ஏற்பாடு செய்து பா.ஜ.க. வெற்றிகரமாக நடத்தியது, அடையாளம் மற்றும் உணர்வுகள் மிகுந்த  கருத்துகளை திரிணாமூல் காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளால் மேகாலயாவில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் முடிவு செய்ய வேண்டியிருக்கும் கடினமான அரசியலுக்கும்,  இந்தி மொழி திணிப்பு, மாட்டிறைச்சி தடை என்ற துணை அரசியலுக்கும் இடையே, ஒரு புதிய அரசியலுக்கான இடம் உருவாகவும் கூடும். மக்களின் உணர்வுகளின் மீது விளையாட இயன்ற ஆற்றல் கொண்ட பா.ஜ.க., பன்முகத் தன்மையும், வேற்றுமைகளும் நிறைந்துள்ள  ஒரு மக்களாட்சி நாட்டில், அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. பிராந்தியக் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு 2014-க்குப் பின்னர் பா.ஜ.க. வின் பலம் வளர்ந்திருக்கக் கூடும். ஆனால், அக்கட்சிகள் செயல்பாட்டுடன் இருந்ததன் பின்னணியில் இருக்கும் எதிர்பார்ப்புகள், விழைவுகளின் கவர்ச்சியை அவை இழந்து விட்டன என்றோ, ஒட்டுமொத்தமாக காணாமற் போய்விட்டன என்றோ பொருள் கொள்ள முடியாது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு கூட்டத்தை டில்லியில் ஏற்பாடு செய்யும் பணிகளுக்குப் பின்னர், முன்னேற்றம் பற்றியும், கங்கை நதி அரிப்பு  பிரச்சினைகள் பற்றியும் பேசுவதற்கு பிரதமரை மம்தா பானர்ஜி சந்தித்ததும்,  தனது பரம எதிரிகளான கம்யூனிஸ்டு கட்சியினருடனும், காங்கிரசாருடனும் சோனியா காந்தி இல்லத்தில் மதிய உணவு அருந்தியதும், பொது அறிவுடையதேயாகும். நிதிஷ்குமாரும் இத னையே செய்தார் என்றாலும், மதிய உணவு விருந்துக்கு மட்டும் அவர் செல்லவில்லை. என்றாலும், நிதி ஒதுக் கீட்டைக் கோரி பெறுவதற்காக அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

சமகால அரசியலில் நிலவும் முரண்பாடுகளை கையாளத் தேவையான வளைந்து கொடுக்கும் தன்மை பற்றி மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்  அதிர் சவுத்ரி தெரிவித்திருக்கும் கருத்தாவது : வங்காள மாநிலத்துக்குள் நிலவும் அரசியல் சண்டைகள், மத்தியில் இரண்டு கட்சிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருந்து மாறுபட்ட பிரச்சினைகளாகும். மோடியை சந்தித்ததன் மூலம், மம்தாவோ, நிதிஷோ தங்களது மாநிலங்களில் உள்ள தங்களுக்கு எதிரான முக்கிய அரசியல் எதிரிகளின் பட்டியலில் இருந்து பா.ஜ.க.வை நீக்கிவிடப்போவதில்லை. அதற்கு மாறாக, நாட்டின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தான் மட்டுமே காரணம் என்று மோடி பெருமை பேசிக் கொள்வதை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பா.ஜ.க.வின் மூன்றாண்டு கால ஆட்சியில் நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, முன்னேற்றத்தை அளிக்க மோடி அரசு எவ்வாறு தவறி உள்ளது என்பதை, கங்கைநதி அரிப்பு பிரச்சினையை சுட்டிக்காட்டி  மம்தாவும், மவுரிசியஸ் தீவுகளுக்கு பீகார் மாநில மக்கள் கட்டாயமாக குடியேறச் செய்த வராலாற்றைச் சுட்டிக்காட்டி நிதிஷ்குமாரும் பேசியுள்ளனர்.

உணவுப் பழக்கத்தையும், மொழித் திணிப்பையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திய பா.ஜ.க. ஒரு விதமான மன உணர்வுகளை மக்களிடையே கொந்த ளிக்கச் செய்துள்ளது. இந்தியாவைப் போன்ற பல வேற்றுமைகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பு நாட்டில், ஒரே நாடு-ஒரே சிந்தனை என்ற உத்தியை நிலை நாட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. மொழிப் பிரச்சினையில் தமிழ்நாட்டைப் போல, உணவுப் பழக்க வழக்கத்தில் மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, கோவா, மேகாலயா, நாகாலாந்து, மிஜோராம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் இதற்கு விதிவிலக்கானவையாகும்.டார்ஜிலிங்கின் முஸ் லிம் சமூகத்தினருக்கும், மலைவாழ் இன மக்களான டோராக்களுக்கும் வேண்டுகோள் விடுத்ததன் மூலம், பிரிவினையை ஏற்படுத்துவதனாலும் கூட தேர்தல் ஆதாயத்தைப் பெற முடியும் என்பதை மம்தா வெற்றி கரமாக மெய்ப்பித்துள்ளார்.  உத்திரரரதேச தேர்தலில் இதனை பா.ஜ.க.வும் மெய்ப்பித்துள்ளது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தனித்தனியான இடங்களை அரசமைப்பு சட்டம் உருவாக்கியுள்ள இடத்தில், பிரிவினைகளைக் கூட பயன் தரக் கூடியதாக ஆக்கிக் கொள்ள இயலும். தீவிரமான, கடுமையான ஒரு மோதலின்போது,  போட்டியிடும் உணர்வுகள் எவ்வாறு செயல்படும் என்பது எதிர்பார்க்க இயலாததாக இருக்கும் என்பதுடன், அது ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கக் கூடும். புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு கோட்பாட்டுக்கு எதிரான பழமையான குறுகிய, விருப்பு வெறுப்பு நிறைந்த ஒரு கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரு சமூகமாக அது மாற்றப்பட இயலும் என்பதே இதில் உள்ள ஆபத்தாகும்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 31.05.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner