எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உலகின் பல நாடுகளில், பகுத்தறிவுக் கொள்கையினை ஏற்று பல அமைப்புகள் உள்ளன.  கடவுள் மறுப்பினை வலியுறுத்தி,  அந்தந்த நாடுகளில் உள்ள மத நிறுவனங்களை விமர்சித்து கருத்துகளை வெளிப்படுத்தும் அமைப்புகளாக மட்டுமே பெரும்பாலான பகுத்தறிவு அமைப்புகள்  செயல் பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் அமைப் புகள் சேர்ந்து உலகளாவிய அளவில் கூட்டமைப்பாகவும் இருந்து வருகின்றன.

சில நாடுகளில் கடவுள் நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த நடவடிக்கைகள் என்பதாகக் கருதி, மதச் சார்பான நிகழ்வுகளில் அந்தந்த நாடுகளின் அரசு தலையீடு என்பது ஓர் அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. மத உணவுர்களை வெளிப்படுத்தும் அரசியலமைப்பைக் கொண்ட நாடுகளில் கூட மத நடவடிக்கைகளில் அரசின் தலையீடு ஒப்பீட்டளவில் அதிகமாக இல்லை.  உலக நாடுகளில் நிகழும் அரசு சார்ந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தால் இந்தச் சூழலை உணர்ந் திட முடியும்.

மத ஆளுமை என்பது பெரும்பாலான நாடுகளில் அன்றாட சமூக, பொருளாதார அரசியல் நடவடிக்கை களில் அளவோடுதான் இருந்துவந்தது; இன்றும் இருந்து வருகிறது.  அப்படிப்பட்ட நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர் அமைப்புகளும் ஒருவகையில் அறிவாளர் வட்டத்திலான அமைப்புகளாக மட்டும் செயல்பட்டு வரும் நிலை உள்ளது.

மதக் குறுக்கீடுகள் பொதுவெளியில் குறைந்து, அதன் ஆளுமைகள் சமூகத்தில் பாகுபாடுகளை, ஏற்றத் தாழ்வு களை ஏற்படுத்தாத நிலையில் பகுத்தறிவாளர்  அமைப்பு களின் தேவையும் ஓர் அளவில் சுருங்கி விடுகிறது.  அந்த பகுத்தறிவாளர் அமைப்புகள், மக்கள் இயக்கமாக மாறிடும் நிலையும் எழாமலே போய்விடுகிறது.  தனிநபர் பகுத்தறி வாளர் நடவடிக்கைகளும், சமூகம் பற்றிய அவர்தம் அக்கறை என்பதும் அறிவாளர்கள் என்ற அளவில் கருத்து களை மட்டும் வெளிப்படுத்தி, தனிநபர் செயல்பாடுகளாகவே இருந்துவிடுகின்றன; இன்றும் அத்தகைய போக்கு பல நாடுகளில் இருந்து வருகிறது.

மண்ணுக்குத் தேவையான

பகுத்தறிவாளர் அமைப்பு

ஆனால் இந்த மண்ணில் நிலவி வரும், மத ஆளுமை என்பது கடவுளின் பெயரால், பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை அடக்குமுறைகளுக்கு ஆளாக்கி, சமூக அடிமைகளாக, வைத்திட்ட அநீதிப் போக்கு உலகின் எந்த நாட்டிலும் காண முடியாதது. கடவுள் நம்பிக்கை, மத ஆளுமை ஆகியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தி எண்ணிக்கை அளவில் மிகச் சிறுபான்மையினர் மிகப் பெரும்பான்மையினருக்கான மனித உரிமைகளை பறிக்கும் நிலைகள்  கல்வி மறுப்பு, பரம்பரைத் தொழிலைத் தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்துவது - மனித அவலங்களில் மிகவும் கொடுமையானது.  இந்த அவலங்களை எதிர்த்திட, களைந்திட கடவுள் நம்பிக்கையினை தகர்த்து, மத ஆளுமை எதிர்க்கும் பணியினை செயல்பாடுகளை இந்த மண்ணில் தோன்றிய பகுத்தறிவாளர் அமைப்புகள் செய்து தான் ஆக வேண்டும்.

இந்த பகுத்தறிவாளர் அமைப்புகள் அழுத்தமாக பரந்து பட்டு செயல்படும் நிலையில் மக்கள் இயக்கமாக மாறிடும் நிலைகள் உருவாகிடும்.  இந்தியாவில் பல்வேறு மாநிலங் களில் செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் அமைப்புகள் வெறும் கருத்து வெளிப்படுத்தலை மட்டுமே கொண்டு இந்த நாட்டு சமூக நடவடிக்கைகளிருந்து ஒருவகையில் அன்னியப்பட்டு உள்ள நிலைகளைக் காணலாம்.

தந்தை பெரியார்தம்

பகுத்தறிவாளர் இயக்கம்

அப்படிப்பட்ட போக்கில், தமிழ்நாட்டில் தோன்றிய பகுத்தறிவாளர் அமைப்பானது, தந்தை பெரியார் எனும் மாபெரும் சிந்தனைச் செயல்பாட்டு ஆளுமையால், சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளால் மக்கள் இயக்கமாக. பரிணாமம் பெற்று சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில் ஒரு பெரும் தாக்கத்தினை கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்தியுள்ளது.  இந்தத் தாக்கத்தின் நீட்சி என்பது பிற மாநிலங்களில்  மய்ய அரசின் நாடு தழுவிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் நிகழ்ந்துள்ளது; இன்றும் நிகழ்ந்து வருகிறது.

சமூக நீதியினை வலியுறுத்தாத பகுத்தறிவாளர் அமைப் புகள் இந்த மண்ணிற்கு உகந்தவை அல்ல; ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளில் அக்கறை இல்லாத, வெறும் கருத்து வெளிப்பாடுகளால் சமுதாயத்திற்கு பெரிதாகப்  பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை.  தமிழ்நாட்டில் தந்தைப் பெரியார் தோற்றுவித்த பகுத்தறிவு சார்ந்த, சுயமரியாதையினை வலியுறுத்தும் - சமூக அவலத்தினை தகர்த்திடும் தன்மையில் அண்டை மாநிலமான கேரளாவில் பகுத்தறிவாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் இயக்கமாக முழுமை பெறாவிட்டாலும், அந்த மாநில சமுதாயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க எழுச்சியினை அந்த பகுத்தறிவாளர் அமைப்புகள் ஏற்படுத்தி உள்ளன. கேரளாவில் அப்படிப்பட்ட எழுச்சிக்கு வித்திட்ட பகுத்தறி வாளர்களில் முதன்மையானவர் சகோதரன் அய்யப்பன் ஆவார்.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே கேரளா வில் இயக்கம் கண்டு, தந்தை பெரியாருடன் ஒருங்கிணைந்து சமுதாயப் பணி ஆற்றிய சமூகப் புரட்சி சாதனையாளர் அய்யப்பன் ஆவார்.  ஏற்றத் தாழ்வுகளை  ஜாதியின் அடிப்படையில் ஏற்படுத்திய வருணாசிரம (அ) தர்மத்தை தகர்த்து அந்த மண்ணில் சகோதரத்துவத்தை வலியுறுத்திட 'சகோதரன்' எனும் ஏட்டினைத் தொடங்கினார்.

அந்த ஏட்டின் ஆசிரியராக இருந்து நடத்திய அந்த சமூகப் புரட்சியாளருக்கு 'சகோதரன்' எனும் அடைமொழியே அவருடைய பெயருடன் சேர்ந்து அறியப்பட்டு வருவது, அவர் ஆற்றிய புரட்சிப் பணியின் பறைசாற்றலாக உள்ளது.  சமூக மாற்றம் என்பது ஒரே கடவுள்; ஒரே மதம்; ஒரே ஜாதி; (One God, One Religion, One Caste) என்று வலியுறுத் தப்பட்ட காலக்கட்டத்தில் உண்மையான சமூக மாற்றம் என்பது கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை; (No God, No Religion, No Caste)   எனப் புரட்சி மொழியினைப் பிரகடனப்படுத்தியவர் சகோதரன் அய்யப்பன்.

சமூகப் பாகுபாடுகள்

‘தொட்டால் தீட்டு’ (untouchability), ‘பார்த்தால் தீட்டு’ (unseeability), ‘நெருங்கினால் தீட்டு’ (unapproachability)  என உழைக்கும் மக்களைப் பாகுபடுத்தி, தாழ்த்தப்பட்ட வர்கள் என முத்திரை குத்தி  அவர்களையும் ஏற்றத் தாழ்வுடன் பிரித்து வைத்து  அன்றைய ஆதிக்க வாதிகள் கடவுளின், மதத்தின் துணையுடன் அடக்கி ஆண்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் நோக் கத்தில் ஈழவரையும், புலையரையும் சேர்த்து சமன்மை விருந்தினை சகோதரன் அய்யப்பன் 1917  ஆம் ஆண்டில் புரட்சிகமாக நடத்தினார்.

அந்த நிகழ்வினை நடத்தியதற்காக ஹிந்து மத தர்ம பரிபாலன சபையினர் சகோதரன் அய்யப்பனை ஜாதிப் பகிஷ்காரம் செய்தனர்; ஜாதிப் பகிஷ்காரத்தினை அலட்சிய ப்படுத்தி தன் புரட்சிப் பாதையில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார் சகோதரன் அய்யப்பன். 1917  ஆம் ஆண்டு மே 29  ஆம் நாள் சமன்மை விருந்து நடத்தப்பட்டது.  அந்த நிகழ்வு நடைபெற்று நூறாண்டு நிறைவு பெறுகிறது.  அந்தப் புரட்சிகர நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் கேரள மாநில பகுத்தறிவாளர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கோழிக்கோட்டில் 2017 மே 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள்களும் நடைபெற்றது.

கேரள மாநிலத்தின் பகுத்தறிவாளர் அமைப்பான கேரள யுக்திவாதி சங்கம் முன்னெடுத்து நடத்திய நூற்றாண்டு விழாவின் மூன்றாம் நாளில் சகோதரத்துவ மாநாட்டினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தொடங்கி வைத்திட வேண்டும் என விழா குழுவினர் - அழைப்பு விடுத்திருந்தனர்.  அழைப் பினை ஏற்று தமிழர் தலைவரும், கோழிக்கோடு சென்று பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, சகோதரத்துவ மாநாட்டினை துவக்கி வைத்தார்.

தமிழர் தலைவருடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சிதம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் மற்றும் தோழர்கள் சென்றிருந்தனர்.

தமிழர் தலைவருக்கு

கோழிக்கோட்டில் வரவேற்பு

கோழிக்கோட்டில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிட மே 27 அன்று காலை 7.30 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழர் தலைவர் புறப்பட்டார். ஒரு மணி நேர வான் பயணத்தில் கோழிக் கோடு விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு வந்து சேர்ந்தார்.  விமான நிலைய வருகை வாயிலில் தமிழர் தலைவரை வரவேற்க நூற்றாண்டு விழாக் குழுவினர் மற்றும் தோழர்கள் காத்திருந்தனர்.  விமானப் பயணத்தில் வந்த பயணிகள் ஒவ்வொருவராக வெளியில் வந்தனர்.

வெளியில் வந்த பயணிகளுள் தமிழக திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் அவர்களும் ஒருவராக இருந்தார். கருப்புச் சட்டை அணிந்து தமிழர் தலைவரை வரவேற்க காத்திருந்த தோழர்களைப் பார்த்து புன்முறுவலுடன், ஆசிரியர் அய்யா வந்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். திராவிடர் கழகம் நடத்திய பொங்கல் விழாவில் பெரியார் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர் மான மிகு நடிகர் தலைவாசல் விஜய் ஆவார். மலையாளத்தில் தயாரித்து வெளியிடப்பட்ட சிறீ நாராயண குரு பற்றிய திரைப்படத்தில் நாராயண குருவாக நடித்துப் சிறப்புப் பெற்றவர் தலைவாசல் விஜய். தமிழர் தலைவர் கோழிக் கோட்டில் கலந்து கொள்ள வந்த நிகழ்ச்சி பற்றி தோழர்களி டம் கேட்டறிந்து, தான் ஒரு படப்பிடிப்பிற்காக கோழிக்கோடு வந்துள்ளதாகத் தெரிவித்து மகிழ்ந்து விடை பெற்றார்.

சற்று நேரத்தில் வருகை வாயிலில் இருந்து வெளிவந்த தமிழர் தலைவரை பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழா வரவேற்புக் குழுவின் சார்பாக கேரள யுக்திவாதி சங்கத்தின் துணைத் தலைவர் தனுவச்சபுரம் சுகுமாரன் வரவேற்றார். விமான நிலையத்தில் பணிபுரியும் ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலர் திரு. ராகவன் தமிழர் தலைவரை விமானத்திலிருந்து அழைத்து வந்து வருகை வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ. பயணத்தில் விடுதிக்கு வந்த தமிழர் தலைவரைச் சந்திக்க கருநாடக மாநில பகுத்தறிவாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பா ளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் காத்திருந்தார். விடுதியில் உள்ள வருகை மன்றத்தில் தமிழர் தலைவரும், பேராசிரியர் கே.எஸ். பகவான் அவர்களும் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.  மூடநம்பிக்கை எதிர்ப்புக்கான களப் பணி மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் பற்றி உரையாடிய பின்னர், பேராசிரியர் கே.எஸ்.பகவான் தமிழர் தலைவரிட மிருந்து விடை பெற்றார். நூற்றாண்டு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் கே.எஸ். பகவான், தமிழர் தலைவரைச் சந்திக்கும் பொருட்டு மூன் றாம் நாள் வரை கோழிக்கோட்டிலேயே தங்கியிருந்தார்.

பின்னர் தமிழர் தலைவரை அறைக்கு அழைத்து வந்த விழா ஏற்பாட்டாளர்கள், காலை உணவு விடுதி உணவகத் தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, சகோதரத்துவ மாநாட்டு தொடக்க ஏற்பாடுகளை செய்தபின் தொடர்பு கொள்வதாகக் கூறிச் சென்றனர். தமிழர் தலைவர் மாநாட்டு வளாகத்திற்கு வரவேண்டிய நேரம் குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் சொல்லிப் புறப்பட்டனர்.

விழாவின் முதல் நாள், இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து, கோழிக்கோட்டிற்கு  முன்னரே வந் திருந்த பேராசிரியர் பூ.சி. இளங்கோவனிடம் தமிழர் தலை வர் விசாரித்து அறிந்தார். இரண்டாம் நாள் மாலையில் நடை பெற்ற மாபெரும் ஊர்வலத்தில் பல்வேறு பகுத்தறிவாளர் தலைவர்களின் ஒளிப்படங்களுடன் கூடிய பதாகைகளை தாங்கியவண்ணம், தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்ற சிறப்பு குறித்து பூ.சி. இளங்கோவன் விரிவாக எடுத்துரைத் தார். “தந்தை பெரியார் விஜயதிட்டே!” (தந்தை பெரியார் வாழ்க!) எனும் ஒலி முழக்கம் மாநாட்டு ஊர்வலம் முழுவதும் கேட்க முடிந்தது, பெருமையும், மகிழ்ச்சியும் அளித்ததாகக் குறிப்பிட்டார். தீண்டாமை ஒழிப்பிற்காக 1924-ஆம் ஆண்டில் வைக்கம் நகரில் கோயில் தெருவில் அனைத்து ஜாதியினரும் பாகுபாடின்றி பயன்படுத்திட, தந்தை பெரியார் பங்கேற்று நடத்திய போராட்டமும், சகோதரன் அய்யப்பன் நடத்திய பல மாநாடுகளில் தந்தை பெரியார் கலந்து கொண்டு, களம் பல கண்ட நிகழ்வுகளும் கேரள மண்ணில் வரலாற்று நினைவுகளாக, நன்றிப் பெருக்கின் வெளிப்பாடுகளாக ஒலி முழக்கங்கள் மூலம் ஊர்வலத்தில் எதிரொலித்தன.  தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப் பனும் செய்த சமூகப் புரட்சிப் பணிகளுக்காக, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான நிர்வாகத்தினர், ‘கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தானவர்கள்’ என புலனாய்வுக் குறிப்பு களில் பதிவிட்டது, அப்புரட்சியாளர்கள் ஆற்றிய சமூகப் பணிகளுக்கான சான்றுகளாக அமைந்து பறைசாற்றி வருகின்றன.

விழா மாநாட்டிற்கு புறப்பாடு

விடுதியிலிருந்து கிளம்பி சரியாக 10.30 மணிக்கு மாநாட்டு வளாகமான கோழிக்கோடு நகர் மன்ற அரங்கிற்கு தமிழர் தலைவர் வந்தடைந்தார்.  நூற்றாண்டு விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சிறப்பு மலர் வெளியீட்டுக் குழுவின் தலைவருமான தோழர் பத்மநாபன் தமிழர் தலை வரை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.  மாநாட்டு அரங்கில் நுழைத்தவுடன், மேடையிலும், பார்வையாளர்கள் பக்கமும் தமிழர் தலைவருக்கு அறிமுகமான, பழக்கமான முகங்கள் அதிகம் தென்பட்டன.

தமிழகத்தில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் 2011- ஆம் ஆண்டு திருச்சியில் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டிலும் கேரளாவிலிருந்து மிகப் பலராக வந்திருந்த தோழர்கள் பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்தனர். தமிழர் தலைவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி கலந்த வரவேற்பினை வெளிப்படுத்தினர். தமிழர் தலை வரும் பார்வையாளர்கள் பக்கம் முழுமையும் சென்று வணக்கம் தெரிவித்து, கைகுலுக்கி பகுத்தறிவாளர் உறவுக ளுடன் தம்மை பிணைத்துக் கொண்டார்.

பின்னர் மேடைக்கு வந்த தமிழர் தலைவரை, மேடை யில் அமர்ந்திருந்த  பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவர்கள் வரவேற்றனர். சகோதரத்துவ மாநாட்டு நிகழ்வுகள் தொடங் கின.  பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழா வரவேற்புக் குழுவின் தலைவர் இரிங்கால் கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.  சகோதரத்துவ மாநாட்டினை தொடங்கி வைக்க வருகை புரிந்த தமிழர் தலைவரை, நாட்டின் கொள்கை பலம் மிக்க, தொண்டர் பலம் மிகுந்த, களப் பணியில் பல போராட்டங்களை நடத்தி சமூக நீதிக்குப் பாடுபட்ட வரு கின்ற பகுத்தறிவாளர் இயக்கத்தின் தலைவர், மாநாட்டினை தொடங்கி வைப்பார் என வரவேற்று உரையாற்றினார்.

சகோதரத்துவ மாநாட்டிற்கு கேரள யுக்திவாதி சங்கத் தின் தலைவர் வழக்குரைஞர் அனில் குமார் தலைமை வகித்தார். அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், கூட்ட மைப்பின் மேனாள் செயலாளரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் புரவலருமான யு. கலாநாதன், ஒடிசா பகுத்தறிவா ளர் மன்றத்தின் தலைவர் தத்துவப் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, உத்திர பிரதேசம் அர்ஜக் சங்கத்தின் தலைவர் ரகுநாத் சிங், பெங்களூரிலிருந்து வருகை தந்திருந்த கே.பி. மேனன், மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்த பகுத் தறிவாளர் தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.

- வீ.குமரேசன்

- தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner