எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ராஜிவ் பார்கவா-

(வேறுபாடுகள் கொண்ட சமத்துவ சமூகங்களில், சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் அளிப்பது எப்போதுமே ஒரு நற்செயல்தான். பெரும்பான்மை மக் களின் உரிமைகளைப் பறித்து சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படுவதில்லை)

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் அளிக்கப்படுவது என்ற கொள்கை ஆழ்ந்த தவறு கொண்டது என்ற பொது உணர்வு மத்திய பிரிவு மக்களில் ஒரு பகுதியினரிடம் உள்ளது. தனது சிறுபான்மை மக்களை ஒரு சமூகம் எவ்வாறு நடத்துகிறது என்பதே அதன் நாகரிகத் தன்மையைக் காட்டுவதாகும் என்றால், அப்போது சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை அளிப்பது பெருமைப்படத்தக்க ஒரு செயலாகவே ஆகிவிடுகிறது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு அது எரிச்சலூட்டும் பலவீனமாகவே தோன்றத் தொடங்கி விட்டது. சமூகத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொள்வதற்கு பெரும்பான்மை மக்கள் தவறிவிட்டனர் என்று கூறுவதற்கு காரணமற்ற முறையில் தோன்றும் கோபம் வெறுப்பை சிறு குழுக்கள் வெளிப்படுத்துவதற்கு  இது இடம் கொடுத்துவிட்டது.

சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு உரிமையும் பெரும்பான்மை மக்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். முதலில்,  சிறுபான்மையினர் பெரும்பான்மையினரிடமிருந்து தனியே பிரித்து வைக்கப் பட்டு, பெரும்பான்மையினரிடமிருந்து எடுத்துக் கொண்ட உரிமைகள்  சிறுபான்மையினருக்கு கொடுக்கப் படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையினரின் இழப்பே சிறுபான்மையினரின் லாபம் என்று கருதப் படுகிறது. இருவருக்குமிடையே வெளிப்படையாகத் தோன்றும் சமத்துவமின்மையை அது உருவாக்குவதால்,  அது நியாயமற்றது என்று உணரப்படுகிறது. அப்படியானால், பின்பு எவ்வாறு, சமத்துவத்தை விரும்பும் அரசமைப்புச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கான உரிமைகளை பொறுத்துக் கொள்ள முடியும்?

உரிமைகள் என்பது ஒருவரது தனிப்பட்ட நலன்களை சட்டப்படி அங்கீகரித்து, அவற்றில் மற்றவர்கள் தலையிடாமல் இருக்கச் செய்யும் ஒரு கடமையாகும். அப்படியானால், மத சுதந்திரத்துக்கான உரிமை எனக்கு இருந்தால், ஒரு மதத்தை நான் தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றுவதில் மற்றவர்கள்தலையிடக்கூடாது.இப்படிப்பட்டஉரிமை கள் தனிப்பட்டவர்களுக்கு அளிக்கப்படாமல், குழுக் களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் சில குறிப்பிட்ட செயல்பாடுகளை தனிப்பட்டவர்கள் இணைந்த குழுக்களால் மட்டுமே செய்யமுடியும். எடுத்துக் காட்டாக,  ஒரு மொழி பேசப்படுவதையோ, மதவழிபாடு மேற்கொள்ளப்படுவதையோ, பாரம்பரியமான பழக்க வழக்கம் பின்பற்றப்படுவதும் ஒரு குழுவினால் மட்டுமே செய்யப்பட இயலும்;  ஒரு தனிப்பட்டவர் தனியாகச் செய்ய இயலாது. இவ்வாறு, மொழி மற்றும் மத உரிமைகள் குழுக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு, அவை அதிகாரம் பெறச் செய்யப்படுகிறது. மற்ற குழுக்களிடமிருந்து வரும்  குறுக்கீடு பற்றிய அச்சுறுத்தலுக்கு எதிராக, அக்குழுக்களின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்பது கட்டாயமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

அப்படியானால், மொழி மற்றும் மத சிறுபான்மையினர்  என்னென்ன உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர்? இந்தி யாவில் அவர்களுக்கு உள்ள மூன்று உரிமைகளும், சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் அல்ல. அவர்களுக்கு உள்ள உரிமைகள்:

(அ) தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை உரு வாக்கி நிர்வகித்தல் (அரசமைப்பு சட்டப் பிரிவு 30)

(ஆ) தெளிவாக வேறுபட்ட தங்களது, குறிப்பாக மதக் குழுக்களது  மொழி, நூல்கள், கலாச்சாரத்தைப் பாதுகாப்பது

(அரசமைப்பு சட்டப் பிரிவு  29)

(இ) தங்களது மத எல்லைக்குள் தங்களது விவகாரங் களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதும், இந்த நோக்கத்திற்கான நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பது  (அரசமைப்பு சட்டப் பிரிவு 26)

ஆனால், இந்த உரிமைகள் சிறுபான்மையினருக்கு மட்டுமே ஏன் அளிக்கப்பட்டுள்ளன? சிறுபான்மையின ருக்கு இத்தகைய சிறப்பான சலுகைகள் ஏன் அளிக்கப் பட்டுள்ளன?

கீழ்க்கண்ட இரண்டு ஏற்பாடுகளைப் பரிசீலித்துப் பாருங்கள்.முதலாவதாக,புதியமகாராஜக்கள்,மகா ராணிகள் போன்ற சில குறிப்பிட்ட மிகமிக முக்கிய மானவர்கள் மன்றத்திற்குள் செல்ல தனியாக ஒரு நுழைவாயில் இருக்கிறது; அதனால் சாதாரணமான மக்களுடன் அவர்கள் உரசிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டியதில்லை. அனைத்து மக்களிடமும் காணப்படாத சில ஈடுஇணையற்ற விசேடத் தன்மைகள் அவர்களிடம் இருப்பதாகவும், பாமர மக்களை விட உயர்ந்தவர்கள் அவர்கள் என்றும் நம்பப்படுவதால், மாறுபட்ட சிறப்பான முறையில் அவர்கள் நடத்தப்படுகின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே இத்தகைய சலுகைகளை அளிப்பதன் மூலம்,  இந்த ஏற்பாடு தற்போது மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பலப்படுத்துகின்றன.

ஆனால், இரண்டாவது ஏற்பாட்டின் நோக்கமே முற்றிலும் மாறுபட்டதாகும். ஏதாவது ஒரு வழியில்  குறைபாடு உள்ள, முதியோர், கர்ப்பிணிப் பெண்கள்,  கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்,  சரி செய்ய முடியாத அளவுக்கு கால்கள் ஒடிந்த அல்லது ஊனமாகிப் போனவர்கள் போன்றவர்களுக்கு  குறிப்பிட்ட தேவை களை நிறைவு செய்வதற்காக, அதே மன்றத்திற்குள் செல்வதற்கு அவர்களுக்கு என்று ஒரு தனி நுழைவாயில் தேவை. தற்போதுள்ள குறைபாடு காரணமாக,  மற்றொரு இழப்பு அவர்களுக்கு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த இரண்டாவது ஏற்பாடு சமத்துவத்தை பலப்படுத்துவதுடன், ஒவ்வொருவரையும் சமமானவராக நடத்துவதற்கு சமூகத்திற்கு உதவுகிறது.

இந்த ராஜாக்களும், ராணிகளும் பொது நுழைவு வாயில் மூலம் மிக எளிதாகச் செல்ல முடியும்; என்றாலும்  அவ்வாறு செல்வது அவர்களது கவுரவத்திற்குக் குறைவை ஏற்படுத்துவதாக அவர்கள் கருதுவதால், அதில் செல்லமாட்டார்கள். இந்த இடத்தில் மற்ற அனைவருக்கும் மறுக்கப்படும் ஒரு விசேட சலுகையை இந்தசிறப்பு நுழைவாயில் பாதுகாக்கிறது.

அதற்கு நேர் மாறாக, குறைபாடுடையவர்களால் பொது நுழைவாயில் வழியாக செல்ல முடியாது என்ப தால்,  அவர்கள் அந்த வழியில் போகமாட்டார்கள். அவ்வாறு செல்வதில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமானது. மற்றவர்களுக்கு ஏற்கெனவே உள்ள, அவர்களால் சாதாரணமாக அனுபவிக்கப்படும்  சலுகைகளை அனுபவிக்க குறைபாடு உடையவர்களை அனுமதிப்பதன் மூலம், இந்த விசேட நுழைவாயில் ஓர் அவசரத் தேவையை நிறைவேற்றுகிறது. சமத்துவ சமூகங்கள் முதல் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டா என்பதோடு, இரண்டாவது ஏற்பாடு இல்லாமலும் அவர்களால் இருக்க முடியாது.

பாரம்பரியமான ஏற்றத் தாழ்வுகள் உள்ள சமூகத்தில் மகாராஜாக்களுக்குக் கிடைக்கும் சலுகை போன்றது அல்ல, மொழி, மத சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் இத்தகைய உரிமைகள். சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு பெரிய குறைபாட்டினை ஈடு செய்வதற்காக அளிக்கப் படும் சலுகைகளே இந்த உரிமைகள். எடுத்துக்காட்டாக, மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்களுக்கு  அவர்களது மொழி மீதான எந்த ஒரு தனி உரிமையும் தேவை இல்லை. ஆனால், மராட்டியத்தில் வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள்  தங்களது தாய் மொழியான தமிழை முறைப்படி கற்றுக் கொள்ள இயலாது என்பதால், அது அவர்களுக்கு ஒரு பெரிய குறைபாடாகவே இருக்கும். என்றாலும், தங்களால் சொந்தமாக  நடத்தப்படும் பள்ளிகளில் தங்களது தாய் மொழியான தமிழ் கற்பிப்பதை அனுமதிக்க அவர்கள் கோரலாம்; அக்கோரிக்கையை எந்த ஒரு சட்டத்தாலும் மறுக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. தமிழர்களுக்கு அந்த உரிமை இருக்கும்போது, அதில் தலையிடாமல் இருக்கவேண்டிய ஒரு கடமை மராத்தி பேசும் மக்களுக்கு இருக்கிறது. இந்த உரிமையை அனுபவிப்பதன் மூலம் தமிழர்கள் மராட்டியர்களிடம் தற்போது உள்ள எந்த ஒரு உரிமையையும் பறித்துக் கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்களுக்கு ஏற் கெனவே இருக்கும் உரிமையைத்தான் இப்போது தமிழர்கள் பெறுகிறார்கள்.

அதேபோல, தங்களது மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கான உரிமையை முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களுக்காகக் கேட்டுப் பெறுகின்றனர்.   தங்கள் மதத்தைப் பின்பற்றி வழிபாடு செய்வதற்கான சுதந்திரமும், உரிமையும் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு ஏற்கெனவே உள்ளது.

சாதாரணமான, நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட மக்களுக்கு மன்றத்திற்குள் செல்வதற்கான தனி நுழைவாயில் தேவையில்லை. அதே போல, சமூக, அரசியல் அதிகாரம் கொண்ட பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எந்த சிறப்பு உரிமைகளும் தேவையில்லை. சாதாரணமான மக்கள் வழக்கமாக செய்வது போல,  பொது நுழைவாயிலில் குறைபாடு உள்ள மக்களால் செல்ல முடியாது என்பதால், அவர்களுக்கு தனியான ஒரு நுழைவாயில் தேவை. அதே போல எண்ணிக்கையில் குறைந்த, அதிக அதிகாரமோ ஆற்றலோ அற்ற மக்கள் குழுக்களுக்கு மொழி, மத, கலாச்சார உரிமைகள் தேவைப்படுகின்றன. சிறுபான்மை மக்களுக்குக் கிடைக்கும் இந்த சலுகைகள், பெரும்பான்மையினரிடமிருந்துபறிக்கப்பட்டவைஅல்ல. பெரும்பான்மையினர்களுக்கு ஏற்கெனவே உள்ள உரிமைகள்தான் இவை. அப்படி இருக்கும்போது, சிறுபான் மையினருக்கு உரிமைகள் அளிக்கப்படுவதில் எந்த விதத் தவறும் இல்லை. வேறுபாடு கொண்ட சமத்துவ சமூகங்களில், சிறுபான்மையினருக்கு உரிமைகள் அளிப் பது எப்போதுமே ஒரு நற்செயலே ஆகும்.

நன்றி: ‘தி இந்து’, 25.06.2017

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner