எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  பத்ரலேகா சட்டர்ஜி

 

(மனிதர்களை வெட்டிக் கொல்வது என்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி குலைந்து போனதையே காட்டுகிறது. நாட்டின் ஒரு பகுதியில் எழும் குழு வன்முறை உடனடியாக அடக்கப்படாமல் விடப்பட்டால்,  நாட்டின் மற்ற பகுதிகளிலும் அது போன்ற குழு வன்முறைகளையும் தூண்டிவிடக் காரணமாக ஆகிவிடும். இதுவரை இது பற்றி பேசியது எல்லாம் போதும். அத்தகைய குழு வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக செயல்பட வேண்டிய நேரமிது. )

உங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? தீ பரவாமல் தடுப்பதற்காக, முதலில் தீயை அணைப்பதற்கு முயல்வீர்கள் அல்லவா? இல்லாவிட்டால், மனிதன் எவ்வாறு தீயைக் கண்டு பிடித்தான் என்பது பற்றி விவாதிப்பதிலோ அல்லது தீவிபத்து ஏற்படுவதற்குக் காரணமான புவியியல் பகுத்தாய்விலோ உங்களை நீங்கள் உட்படுத்திக் கொள்வீர்களா? ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஒன்றில்,  ஒரு முஸ்லிம் பதின்மவயது இளைஞன் திரும்பத் திரும்பக் குத்திக் கொல்லப்பட்ட பிறகு நாடெங்கும் எழுந்துள்ள விவாதங்களுடன் இந்த கேள்வி பெரிய அளவில் பொருந்துவதாக இருப்பது, ஓர் ஆபத்து மிகுந்த திசையை நோக்கி நாம் பயணிப்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

ஈத் திருநாளுக்காக புதிய உடை வாங்குவதற்காக ஜூனைடி என்ற 15 அல்லது 16 வயது சிறுவன் டில்லி ஜூம்மாமசூதி பகுதிக்கு வந்துவிட்டு, திரும்பிச் செல்லும்போது மற்ற சில பயணிகளுடன் ஏற்பட்ட சச்சரவில்,  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முடிவில் ஜூனைடி என்ற அந்த சிறுவன் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளான்.

அந்த சிறுவன் இறந்து போனது போலவே, அவனது கனவுகளும் இறந்து போயின. அவனுடன் வந்திருந்த அவனது சகோதரர்களும் தாக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர். ஒரு சகோதரன் கத்திக் குத்து காயங்களுக்கு  இப்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். அந்தக் குடும்பமே அதிர்ச்சியிலும், பேரச்சத்திலும் மூழ்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும், வருத்தமும் தெரிவிக்கும் வகையில் ரமலான் அன்று அவனது கிராம மக்கள் கைகளில் கருப்புப் பட்டைகள் அணிந்தனர். ரயிலில் பயணம் செய்த பலரும் அவர்களை நாட்டுப் பற்று அற்றவர்கள் என்று அழைத்ததாக அவனது சகோதரர்கள் தெரிவித்தனர். தான் மது அருந்தியிருந்ததாகவும்,  மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும், நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், இன்னமும் வேறு வழிகளிலும்  அந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களை கேலி செய்து கோபமூட்டிக் கொண்டு  வந்த தனது நண்பர்களின் தூண்டுதலினால் தான் அவனைக் கத்தியால் குத்தியதாகவும், அக்குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவன் அளித்த வாக்குமூலம் அனைத்து தொலைக்காட்சி செய்திப் பகுதிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கும், மாட்டிறைச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இப்போது காவல்துறை மறுத்துள்ளது மட்டுமன்றி,  ஒருவரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் பேசியதால், இந்த நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தங்களின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

பேரச்சம் தரும் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரத்தில், சிறீநகரிலுள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கலவரக் கும்பலால் முகமது அயூப் பாண்டித் என்ற காவல்துறை அலுவலர் நிர்வாணமாக்கப்பட்டு, கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கேட்கப்படும் கேள்வியே, அக் குற்றங்களின் காட்டாண்டித்தன்மை பற்றியது மட்டுமல்லாமல்,  குறைந்தபட்ச அரசாட்சியைப் பற்றி யதாகவும் இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், வெட்டிக் கொலை செய்யப்படுவதை பொதுமக்கள் காணத் தகுந்த ஒரு காட்சியாகவே தாக்குதல் நிகழ்த்தியவர்கள் மாற்றிவிட்டனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்நிகழ்ச்சிகளைத் தடுக்க முன்வரவில்லை என்பதோடு, ஒரு சிலர் தாக்குதல் நடத்தியவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு காவல்துறை அலுவலர், தான் நிர்வாணமாக ஆக்கப்பட்டு, கற்களால் அடித்துக் கொல்லப்படுவதில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார் என்பதோ, ஓடும் ரயிலில் ஒரு இளைஞன் குத்திக் கொல்லப்பட இயலும் என்பதோ, நமது சட்டம் ஒழுங்கு நடைமுறை மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது? பேரச்சத்தைத் தோற்றுவிப்பது என்னவென்றால்,  தங்கள் எதிரிகளை அழிப்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் செயல்களே எண்ணிக்கையில் வளர்ந்து வரும்  இத்தகைய தாக்குதல்கள் என்ற நிலை மாறி,  வெறுப்பு என்னும் நஞ்சை மக்களின் மனதில் தூவி விடுபவர்களால், தூண்டிவிடப்படுவதால், சாதாரண மக்களும், அற்ப காரணங்களுக்காகவோ, காரணமே இன்றியோ,  இத்தகைய குற்றங்களை இழைப்பதற்கான துணிவைப் பெறுகின்றனர்.   ஒரே ஒரு சிந்தனைதான் இன்று மனதில் தோன்றுகிறது. நாடு முழுவதும் எரிந்து சாம்பலாவதற்கு முன்பு,  மக்களிடையே நிலவும் வெறுப்பு என்னும் இந்தப் பெருந்தீ அணைக்கப்பட வேண்டும். பசு  கொல்லப்படுவற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் எதிராக முஸ்லிம்கள் மீதான, கலவரக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும்  வன்முறைத் தாக்குதல்கள்  கடந்த பத்தாண்டு காலத்தில்,   அளவுக்கு அதிகமாகவே  நடந்து வந்துள்ளன. கலவரக் கும்பல்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தலித்துகள் அல்லது மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இதனைக் கூற முன்வரவில்லை.  சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்று வதற்காகவும்,  நாம் அறிந்திருக்கும் அமைதி நிறைந்த இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும்தான் இவ்வாறு நாம் கூறுவது.

மக்களை  வெட்டிக் கொல்வது என்பது ஏதோ புதிதான ஒன்று அல்ல என்றும்,  அவ்வாறு நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பசு வதையும், இறைச்சி உண்பதும் காரணமல்ல என்று கூறி, அதனை நிலை நாட்டுவதற்காக இத்தகைய வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை சிலர் அண்மைக் காலமாக பட்டியலிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால், இவ்வாறு மனிதரை வெட்டிக் கொல்வது புதுமையானது என்றோ, பசுக் கொலை தொடர்பான தீவிரமான விவாதத்துடன்  எந்த விதத்திலும் தொடர்பு கொண்டதோ இல்லை என்றோ,  எவர் ஒருவரும் கூறவில்லை. இந்த ஆண்டில், ராஜஸ்தானில் இருந்த  கால்நடைப் பண்ணை வைத்திருந்த ஒரு முஸ்லிம், பசுப் பாதுகாவலர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்ற வதந்தியால் ஜார்கண்ட் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 7 பேரை கலவரக் கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.

ஜூனைடி குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உரக்க எழுந்துள்ள வேடிக்கையான விவாதம் என்னவென்றால், இருக்கைக்காக இரண்டு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்று கூறப்படுவதுதான். சாதாரணமாக எழுந்த இந்த சச்சரவைத்தான், ஊடகத்தினர் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினையை எழுப்பி இந்த நிகழ்ச்சியையே உணர்ச்சி மயமானதாக ஆக்கிவிட்டனர் என்று கூறப்படுகிறது. ஜூனைடியுடன் தாக்கப் பட்ட அவரது சகோதரர்களிடமிருந்தும்,  அக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரிடமிருந்தும் பத்திரிகையாளர்களான நாங்கள் அறிக்கைகளைப் பெற்று பரிசீலிக்கமாட்டோமா? சமூக ஊடகத்தில் அத்தகைய  நிகழ்வுகள் நடக்கின்றன என்றே பலரும் கூறுகின்றனர்.

அடிப்படையான சில விஷயங்களை சரி செய்ய வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. இறந்து போன அந்தச் சிறுவன் ஒடும் ஒரு ரயிலில் சகபயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் குத்திக் கொல்லப்பட்டபோது, எவர் ஒருவரும் தாக்கப்பட்டவனைக் காப்பாற்றவோ, தாக்கியவனைத் தடுக்கவோ முன்வரவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறை கூறுகிறது.

ஒரு ரயிலில் ஒரு இருக்கைக்காக ஒருவரைக் கத்தியால் குத்துவது என்ன சாதாரணமான ஒரு விஷயமா? பல்வேறுபட்ட முறையில் குத்தியோ, வெட்டியோ கொல்லப்படுவதைப் பற்றி பல்வேறு மதிப்பீடுகளை சிலர் முன் வைக்கிறார்கள். வெட்டிக் கொல்வது ஒன்றும் நரேந்திர மோடி அரசு வந்த பிறகு புதியதாக  தொடங்கியது அல்ல என்றும் சிறுபான்மை மக்களை கலவரக்கும்பல்கள், இதற்கு முன் இது போன்ற கொலைகளை செய்த நிகழ்வுகள் பல உள்ளன என்று வாதிடுவோரும் உள்ளனர். மோடி அரசு வருவதற்கு முன், எவருமே வெட்டிக் கொல்லப்பட வில்லை என்றோ, கும்பலாக கலவரம் செய்வது ஒரே ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே வழக்கமானது என்றோ எவரும் கூறவில்லை. அவை இதற்கு முன்பும், இடதுசாரி, வலதுசாரி, மத்திய கட்சிகளின் ஆட்சிகளிலும் நடந்தே உள்ளன. ஆனால், 2017 இலும் இவ்வாறு மக்கள் வெட்டிக் கொல்லப்படுவது பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அதுவே ஒரு காரணமாக ஆகுமா?

கலவரக் கும்பலை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது இன்னொரு மாதிரியான வாதமாகும். ஆனால், கும்பல் கலவரம் ஏற்படுவதற்குக் காரணமான சூழ்நிலையை உருவாக்குபவர்களைப் பற்றி நாம் மறந்து விடக்கூடாது. குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடித்து, விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது மிகவும் முக்கியமானது என்பதுடன், ஒட்டு மொத்த சமூகத்தையும், நாம்  - அவர்கள் என்று பிளவு படுத்தும்  நஞ்சை மக்கள் மனதில் இடைவிடாமல்  பாய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் கூட இன்றியமையாதது ஆகும்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் பசுவைக் கொல்பவர் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படுவர் என்று அம்மாநில முதல்வர் ராமன்சிங் கூறியதாக செய்திகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்தன. இன்னமும், பசு பாதுகாவலர் சதீஷ் குமார் அவரது கணினி தளத்தில், அனைத்து பசுக்களையும் பாதுகாக்க நானும் எனது குழுவினரும் உறுதி செய்து கொண்டிருக்கிறோம். பசுவைக் கொல்பவர்கள் அனைவரையும் கொல்வதன் மூலம்தான் இதனைச் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஜூனைடி கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சி மிகுந்த மனவருத்தத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அரசு தனது கடமையைச் செய்யும் என்று உறுதி கூறுகிறேன் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இறுதியில்  அரியானா முதல்வர் ஜூனைடியின் இழப்புக்கான இழப்பீட்டினை அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட மற்றவர்களும் அது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, தாங்கள் வாயால் கூறுவதையே செயலால் பின்பற்றுவோம் என்பதை தெளிவாக்க வேண்டும் என்று நாங்கள் இப்போது எதிர் பார்க்கிறோம்.

மனிதரை வெட்டிக் கொல்வது என்பது சட்டத்தின் ஆட்சி சீரழிந்து போனதை பிரதிபலிக்கிறது. நாட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் கும்பல் கலவரம், உடனடியாக கட்டுப்படுத்தப்படாமல் போனால், நாட்டின் பிற பகுதிகளிலும் அத்தகைய வன்முறைக் கலவரங்கள் உருவாவதற்குக் காரணமாகிறது. காட்டுத் தீயைப் போலவே இத்தகைய வன்முறைக் கலவரங்களும் பரவுகின்றன. பல்வேறுபட்ட ஆட்சிகளின் கீழ், பல்வேறு இடங்களில் அவை நிகழ்ந்து  உள்ளதை இதற்கு முன் நாம் பார்த்துள்ளோம். நடந்ததெல்லாம் போதும் என்று கருதி, எந்த அரசியல் கட்சி அல்லது மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இத்தகைய கொடுஞ்செயல்களை செய்பவர்களை மட்டுமல்லாமல்,  அத்தகைய செயல்கள் நிகழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குபவர்களையும், இத்தகைய செயல்கள்  வழக்கமானவை என்பதால் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை என்று அவற்றை அலட் சியப்படுத்தி ஒதுக்குபவர்களையும் அழைத்து அவர் களை மனம் மாறச் செய்வதற்கான நேரம் இதுவே.

நன்றி:  தி டெக்கான் கிரானிகிள் 29-06-2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner