எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(நமக்கு எதுவும் தெரியாத விஷயங்களில் எல்லாம் நாம் வல்லுநர்கள் என்று நமக்கு நாமே கற்பனை செய்து கொள்கிறோம். இந்தியனாக இருப்பதில் உள்ள வேடிக்கையே இதுதான்.  சொற்களைக் கேட்டோ,  அதன் மக்களைக் கண்டோ, நம்பிக்கை மிகுந்த ஒரு மக்களாட்சி அஞ்சுவதில்லை.)

நாம் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நீங்கள் கூறவேண்டாம், எனக்கே தெரியும். இந்து, பசு, குஜராத், ஹிந்து இந்தியா, ஹிந்துத்துவா என்பது போன்ற சொற்கள் வெடிகுண்டுகளைப் போல் மிகுந்த ஆபத்தை விளைவிக்க இயன்றவை என கருதப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு செய்திப்படம் கடந்த வாரத்தின் மிகப் பெரிய செய்தியாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த செய்திப் படத்தை படத் தயாரிப்பாளரும், பொருளியலாளருமான சுமன் கோஷ் தயாரித்திருந்தார். ஜூன் 14 அன்று வெளிவரவிருந்த இந்தப் படம் தணிக்கைப் பிரச்சினைகளால் அன்று திரையிடப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட சொற்கள் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் திரைப்படத் தணிக்கைக் குழு தெரிவித்தது.

அச்சொற்களை நீக்குவதில்லை என்ற நிலைப்பாட்டை கோஷ் மேற்கொண்டபோது, தான் அந்த படத்தின் இடுபொருளே அல்லாமல் அதன் இயக்குநர் அல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய சென் அறிவார்ந்த முறையில் இந்த விவாதத்தில் ஈடுபடாமல் இருந்துவிட்டார். என்றாலும், திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல், நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த நிலையை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.  அரசின் அமைப்புகளாக இல்லாமல் நாட்டின் அமைப்புகளாக இருக்கும் அமைப்புகளை,  இந்த அரசு ஆளுங்கட்சியின்  நலன்களுக்காக தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

இன்று மிகமிக நன்றாக அனைவராலும் அறியப்பட்டுள்ள சிலவற்றை, சென் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். ஒரு வேளை இந்தியா மக்களாட்சிக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது போலும்!  ஆனால், இதில் விளக்கம் அளிப்பதற்கு என்ன இருக்கிறது? எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், மக்களாட்சி என்பது ஒரு மக்களாட்சிதான்!

ஆனால், மிகப் பல விளக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தலைமை விளக்கமளிப்பவர் பங்கினை யார் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை இப்போதுதான் நாம் அறிகிறோம். ஒவ்வொரு ஆட்சியும், ஒரே மாதிரியான விளையாட்டைத்தான் விளையாடி வருகின்றன. இதனை உரக்கச் சொல்வதற்கு, மற்ற நேரங்களை விட, இது மிக நல்ல நேரமாகும். விளக்கம் அளிப்பதை மறந்துவிட்டு, சுயசோதனையை மேற்கொள்ளுங்கள். இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்குக்கும், நரேந்திர மோடியின் நிர்வாக அணுகுமுறைக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது? இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தைப் போல இல்லாமல், வேறு எவரது குரலாவது மோடி ஆட்சியில் கேட்கப்படுகிறதா?  மற்றவர்களது குரல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? இந்திரா காந்தி வைத்திருந்தது போலத்தான் மோடியும் குட்டித் தேவதைகளை அடிமைகளாக வைத்திருக்கிறார்.

ஒரு புத்திசாலித்தனமான அரசு அதிகாரியுடன் அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது,  அவரிடமிருந்து வெளிப்பட்ட வெறுப்பைக் கண்டு நான் ஏமாற்றமடைந்தேன். அவரும் ஓர் அரசு அதிகாரியின் மகன் என்பதால், அமைச்சருடனான உங்களது அனுபவம், உங்களது தந்தையின் அனுபவங்களிலிருந்து தரத்தில் மாறுபட்டவையாக உள்ளனவா? என்று அவரை நான் கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, எனது தந்தை இந்திரா காந்தியின் கட்டளைகளை நிறைவேற்றினார். நானும் எனது சகாக்களும் மோடியின் கட்டளைகளின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நடைமுறைக்கு எதிராக உங்களால் வெற்றி பெறமுடியாது என்று கூறினார்.  அந்த அளவிலாவது நேர்மையானவராக அவர் இருந்தார்.

அது போன்ற மூச்சு முட்டும் ஒரு சந்தர்ப்பத்தில்,  அனைவரையும் கவர்ந்த அறிவாளியான ஒரு பொது மனிதரைப் பற்றிய ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும்  இந்தப் படம் ஏன் இத்தகைய  பரபரப்பை ஏற்படுத்தியது? மோடியைப் பற்றிய தனது விமர்சரனத்தில், குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி, சென் கடுமையாகக் கண்டித்திருந்தால்தான் என்ன? பொதுமக்களின் ஆட்சிப் பகுதியில் சென்னின் கண்ணோட்டங்கள் நன்றாக அறியப்பட்டவையே ஆகும். அவற்றைத் தெரிவிப்பதற்கு உரிமை படைத்தவர் அவர். சில உணர்ச்சி மயமான சொற்களை அவரது பேச்சில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்பதே தொல்லைகளுக்கு அழைப்பு விடுத்து தேடிக் கொள்வது போன்றதுதான். மாபெரும் பலம் கொண்ட அமர்த்தியா சென்னுடன் நீங்கள் மோதுகிறீர்கள் என்பதையும்,  இந்த மோதல் உலக அளவிலான ஒரு விவாதத்திற்கு வழி வகுத்துவிடும் என்பதையும்தான் நான் இதன் மூலம் கூற வருகிறேன். கொல்கத்தாவின் பொறாமை நிறைந்த திரைப்படத் தணிக்கைக் குழு இந்த பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டால், உலக அளவிலான விமர்சனத்தைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னின் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்று அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சென்றுவிடும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் அதனை அலட்சியப் படுத்திவிட்டு போயிருக்கக் கூடும். இந்த மாதிரி இடத்தில்தான் ஒரு புத்திசாலித்தனமான அரசாங்கம் விவகாரத்தை சிக்கலாக்கிவிடுகிறது. தனது தூய்மையற்ற பணியைச் செய்வதில் அச்சுறுத்தல்களையும், வற்புறுத்தல்களையும் கொண்டு வந்துவிடுவதால்,  பிரச்சினையின் தொடர்பையே அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

நூறுகோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்திய நாடு அதிக அளவில் விவாதம் செய்யும் மக்களைக் கொண்ட நாடாகும். எதனைப் பற்றியும், அனைத்தைப் பற்றியும் தங்களது கருத்தைத் தெரிவிக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் இத்தகைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு குதித்துக் கொண்டு ஓடி வருபவர்கள் இந்த மக்கள். செய்வதற்கு உருப்படியான வேறு வேலை எதுவும் நமக்கில்லை. நமது குரலின் ஒலியைக் கேட்பதிலேயே நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதால், நாம் இவ்வாறு விவாதிக்க முன்வருகிறோம். பெரும்பான்மையான நேரங்களில் இத்தகைய விவாதங்கள் தீங்கு அளிக்காதவையாக அமைந்துவிடுகின்றன என்பதால், பொழுது போக்குவது என்ற பிரிவில் அவை அடங்கிவிடுகிறது. நமக்கு தெரியாத விவகாரங்களைப் பற்றி அறிந்திருப்பதிலும் நாம் வல்லவர்கள் என்றே நம்மைப் பற்றி நாமே கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பதில் உள்ள வேடிக்கையே இதுதான். ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்வதில் உள்ள வேடிக்கையும் இதுதான்.

நம்பிக்கை உள்ள ஒரு ஜனநாயகம் வார்த்தைகளைக் கண்டோ, அதன் மக்களைக் கண்டோ அஞ்சாது. அச்ச உணர்வும், தணிக்கையும் கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் அரசு, அதன் சொந்த பாதுகாப்பு இன்மைகளையும் பெரிதாக எடுத்துக்கொண்டு,  தொலைநோக்குப் பார்வையற்ற கிட்டப் பார்வையைக் கொண்டதாக ஆகிவிடுகிறது.

இப்போது மிகுந்த பேரச்சத்தைத் தரும் சொல்லாக இருப்பது பசு என்பதுதான். இந்த பசு பைத்தியம் எப்போதிலிருந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றதோ,  அப்போதிலிருந்து பசுவைப் பற்றி பேசுவதையே நான் தவிர்த்து வந்துள்ளேன். பசுக்கள் இந்தியாவின் எல்லா இடங்களிலும் இருப்பதால், அதைப் பற்றி பேசாமல் இருப்பது மிகமிகக் கடினமானதாகவே இருக்கிறது. பெருநகரான மும்பையிலும் கூட பசுக்கள் இருக்கின்றன. ஒரு நட்சத்திர ஓட்டலை அடுத்து இருந்த மின்னியல் பொருள்கள் விற்கும் ஒரு கடைக்குள் ஒரு நாள் மாலை நான் நுழைவதற்கு இருந்தபோது, அந்தக் கடையின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்றிருந்த, நன்கு உண்டு கொழுத்திருந்த, ஒரு பசுவை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. முன்பெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நான் செய்தது போல, எனது கைப்பையை அதன் முகத்துக்கு  அருகில் காட்டி, அதனை நான் விலகச் செய்திருக்கலாம்.

ஆனால், இம்முறை அந்தப் பசுவை நான் கவனிக்காதது போலவே பாவனை செய்து கொண்டு அதன் வழியை விட்டு நான் விலகிச் சென்று விட்டேன். மாட்டை விலக்குவதற்கு எனது கைப்பையை நான் பயன்படுத்தியிருந்தால் என் கதி என்ன ஆகி இருக்கும்? எச்சரிக்கையுடன் இருக்கும் பசு பாதுகாவலர்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் சுற்றிக் கொண்டு திரிகிறார்களே!  அப்படி செய்திருந்தால், நான் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கவும் கூடும்!

அன்று இரவு திரைப்படத் தயாரிப்பாளர் மதுர் பந்தர்கரை நான் சந்தித்தேன். பா.ஜ.க. ஆதரவாளர் என்று தன்னைத் தானே அவர் அறிவித்துக் கொண்டவர் என்ற போதிலும்,   அண்மையில் தயாரிக்கப்பட்ட அவரது இந்து சர்க்கார்  என்ற திரைப்படத்துக்கு தணிக்கைக் குழுவின் சான்றைப் பெறுவதில் சில பிரச்சினைகளையும், சிக்கல்களையும் அவர் சந்திக்க நேர்ந்துள்ளது. படத்தில் வரும், பிரதமர், முதல்வர் போன்ற  14 முக்கிய சொற்களை நீக்கிவிடும்படி தணிக்கைக் குழு அவரைக் கேட்டுள்ளது. வசனம் எழுதிய கிஷோர் குமார் பெயரை நீக்கிவிடும்படியும் அவருக்கு சொல்லப்பட்டது. அவரை குமார் என்று அழையுங்கள் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் சரியான பக்கத்தில் இருப்பவரான பந்தர்கர் இந்த சிக்கலில் இருந்து காயம் படாமல் வெளியே வந்துவிடுவார் என்பது உறுதி. அவரது திரைப்படம் நெருக்கடி நிலை காலத்தைப் பற்றியது; மிகச் சரியான நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. ஆனால், அவரும் கூட தணிக்கைக் குழு பிரச்சினைகளை எதிர் கொண்டு கையாள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, கலவரக் கும்பலால் தேசவிரோதி என்று அடையாளம் காணப்படுபவரின் கதி என்னவாகும் என்பது பற்றி ஒருவரால் கற்பனைதான் செய்து பார்க்க முடியும்.

என்னைப் பொருத்தவரை, எனது உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் ஒரு பெரிய மாற்றத்தை நான் ஏற்படுத்திக் கொண்டு விட்டேன். சமையல் எண்ணெயாக சுத்தமான பசு நெய்யைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். ஒப்பனையைக் கலைப்பதற்காகப் பயன்படுத்தும் ஈரப் பொருளாகவும் அதனை நான் பயன்படுத்துகிறேன். எனது தோல் ஒளி வீசுகிறது. வீட்டு உணவு மணமும், சுவையும் மிகுந்ததாக ஆகிவிட்டது. பசு நெய்யில் முக்கி இரண்டு முறை வறுத்தெடுத்த முட்டைகளை நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? சில மாதங்கள் கழித்து என்னிடம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நானே ஒரு பசு மாதிரி தோற்றமளிக்கவும் கூடும். குறைந்த அளவு எனது தோல் பார்ப்பதற்கு வியப்பளிப்பதாக இருக்கும். பசு சாணப் பொருள்களை நானும் விரைவில் பயன்படுத்தத் தொடங்கிவிடுவேன்.

ஆனால், பசு மூத்திரத்தைக் குடிப்பது என்ற இடத்தில் எனது எல்லைக் கோட்டை நான் வரைந்து கொண்டேன். எவ்வளவு கவர்ச்சியாக அது புட்டிகளில் அடைக்கப்பட்டு, விளம்பரப் படுத்தப்பட்டாலும் கூட அதனை நான் பயன்படுத்த மாட்டேன்.  தொல்லை தரும் பசு என்ற சொல்லை, இந்த இடத்தில் எத்தனை முறை  எவ்வளவு துணிவுடனும், வெளிப்படையாகவும் நான் பேசிவிட்டேன் பார்த்தீர்களா! யாருக்குத் தெரியும். எதிர்காலத்தில் அடையாளக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூட எனக்கு உத்தரவிடப்படலாம்!

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 15-07-2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner