எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவிஞர் கலி.பூங்குன்றன்


காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் (டிஜிபி) திருமதி.திலகவதி அவர்களைக் கவுரவ ஆசிரியராகக் கொண்டு நடத்தப்படும் ‘அம்ருதா' எனும் மாத இதழில் மாலன் என்பவர் ‘‘பெரியார் இல்லாத தமிழகம்'' எனும் தலைப்பில் ஏழு பக்கத்திற்குக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பெரியார் இல்லாத தமிழகம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் எதையும் சாதித்துவிடவில்லை என்று மனம் போன போக்கில் கிறுக்கியுள்ளார்.

மாலன் வகையறாக்களும், தமிழ்த் தேசியவாதிகளும், ஆர்.எஸ்.எஸ். மதவெறி ஆசாமிகளும் அவதூறுகளையும், பொய் மூட்டைகளையும் தந்தை பெரியார்மீதும், திராவிட இயக்கத்தின்மீதும் அள்ளிக் கொட்டுகிறார்கள். இந்த நிலையில், புழுதிவாரி தூற்றுவோரின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், புதிய தலைமுறையினர் உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கட்டுரை.

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...

இலட்சியம் எது? அதனை அடைவதற்கான மார்க்கம் எது? என்பதைப் புரிந்துகொள்ளாமல், வழிமுறைகளை பெரியாரின் கொள்கையாகப் பார்ப்பது அடிப்படைப் பார்வையில் பழுதானதாகும்.

மாறுதலுக்கு உட்படாதது இலட்சியம், மாறுதலுக்கு உட்பட்டது அணுகுமுறைகள் - இதில்  தெளிவு இல்லாததால்தான் பெரியார், தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார் என்கிறார்.

பெரியார் சாதனைகள் ஏதும் நடந்துவிடவில்லை என்கிறாரே - அக்ரகாரத்தில் இப்பொழுதெல்லாம் மொட்டைப் பாப்பாத்தி என்று ஒன்று உண்டா?

சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையராக இருந்த இராதாகிருஷ்ணன் அய்.பி.எஸ். அவர்கள் அமெரிக்காவில் நிகழும், தன் மகளின் திருமணத்திற்கு அன்னை மணியம்மையார் அவர்களுக்கு அழைப் பிதழ் கொடுக்க நேரில் வந்தபோது இதே கருத்தைச் சொன்னது - இப்பொழுது நினைவிற்கு வருகிறது!

சனாதனம் பேசினாலும் எந்தப் பார்ப்பானும் அவிட்டுத் திரியோடு வெளியில் வருவது கிடையாதே!

இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் தமிழ்நாட்டில் அறுந்து விழுந்ததற்கு யார் காரணம்? பார்ப்பனர்களேகூட அய்யர், அய்யங்கார் பட்டம் போட வெட்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டதே - திருவாளர் மாலன் உள்பட! ஆனால், இதே பார்ப் பனர்கள் வெளிமாநிலங்களில் ஜாதிப் பட்டத்துடன்தான் திரிகின்றனர்.

1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் ஜாதியைத் துறக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த மாநாட்டிலேயே ஜாதியைத் துறந்தார்களே! தன் பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் பட்டத்தை 1927 ஆம் ஆண்டிலேயே தூக்கி எறிந்தாரே!

மற்ற மற்ற மாநிலங்களில் இடதுசாரிகள்கூட ஜாதிப் பட்டத்தைத் துறக்கத் தயாராக இல்லையே!

தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாட்டில் சட்டப்படி செல்லுபடியாகும் நிலை ஏற்பட்டதே! சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் சட்ட சம்மதம் பெற்றுவிட்டதே!

சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும் தந்தை பெரியார் வலியுறுத்தியவையெல்லாம் பிற்காலத்தில் அரசின் சட்டங்களானது சாதாரணமா?

பெரியார் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று சொல்வதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அவாளுக்கு; அப்படி என்றால், பார்ப்பனர்களுக்கு அது நல்லதுதானே! இன்னும் பெரியார் என்றால் அக்கினிக் குண்டத்தில் விழுந்ததுபோல ஏன் துடிக்கவேண்டும்?

பிரபல பொருளாதார மேதையும், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்த அசோக்மேத்தா சொல்லுகிறார்:

1977 செப்டம்பரில் தமிழகத்துக்கு வந்த பிரபல சோச லிஸ்டும், பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்:

‘‘தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன் றைக்கு 50 ஆண்டுகளுக்குமுன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறை கூவல் விடுத்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காணமுடிகிறது.

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற் படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப்பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது! என்று அசோக் மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘, 16.9.1977)

‘‘இந்தியாவின் இரண்டாயிரம் வருடத்தில் மகத் தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந் திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியை செய்தவர் என்பது அமெரிக்காவில் உள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தும் ஆகும்.''
பேராசிரியர் ஜான் ரைலி,
‘ஆனந்தவிகடன்', 16.7.1972

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழ் 2000 ஆம் ஆண் டின் தொடக்கத்தில் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்தவர்கள் என ஒரு நூலை தொகுத்திருந்தது. அதில் தென் இந்தியாவில் ராஜாஜி மற்றும் பெரியார் மட்டுமே இடம்பெற்றனர்.

அதில் அரசியல் குறித்து ராஜாஜியைப்பற்றி சில பகுதிகள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால், பெரியார் குறித்து எழுதும்போது பெரியார் சமூகத்தின் அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் விதமாக தன்னுடைய செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, எழுத்துச் சீர்திருத்தம் என பல கோணங்களில் அவர் செயல்பட்டு வந்தார். தன்னுடைய வாழ்நாளிலேயே, தான் எடுத்துச்சென்ற போராட்டங்களுக்குத் தீர்வைக் கண்டவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி.

பெண்கள் குறித்து அவர் ‘‘பெண்கள் தலை முடியை ஆண்களைப் போல சிறியதாக வெட்டிக் கொள்ளவேண்டும். இதன்மூலமாக காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் நுழைந்து சாதனை புரிய முடியும் என்று 1930-களில் கூறியிருந்தார்.

சுதந்திர இந்தியாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தில்தான் பெண்கள் அதிகமாக உள்ளனர். இதற்குக் காரணம் பெரியார் கொண்டு வந்த பெண்ணுரிமை முழக்கம் என்று குறிப் பிட்டுள்ளது.

Makers of the Millennium

The enormous privileges given to Brahmins by the Vedas were sacrosanct only as long as they went unchallenged. The challenge rose in Tamil country like a whirlwind, spearheaded by an iconoclast who questioned the Vedas and the gods as well. He took apparently extremist positions on some issues, but the fundamental nature of the social revolution he wrought was clear even to its victims. The political perspectives of Tamil Nadu, and with it much of India, were altered with a seeming finality by

Ramaswamy Naicker, 1879-1973

தந்தை பெரியார் வாழ்ந்தபோதே, அய்க்கிய நாடு களின் பண்பாட்டு மன்றமான அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றம், இந்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் தலைமையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்ட விருது - அதன் விளக்கக் குறிப்பில்

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners


ஹிழிணிஷிசிளி 27.6.1970

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘புத்துலக தொலைநோக்காளர்'', ‘‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்'', ‘‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை'', ‘‘அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி'' என்று தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டியது அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றம்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்ற நிலையில், தந்தை பெரியாருக்கு அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் (10.10.1968) எழுதிய கடிதத்தில்...

‘‘தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில். ஆகவே, சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை'' என்று எழுதினாரே!

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி, தன் தெய்வத்தின் குரல் 3 ஆம் பகுதியில் (பக்கம் 36) பின்வருமாறு எழுதியுள்ளாரே - யாரை மனதில் வைத்துக்கொண்டு?

‘‘ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால், இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக்கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life--இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆட்சேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போகவேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.''

பெரியாரும், விடுதலையும் என்  அன்பார்ந்த எதிரிகள் என்று சொன்ன ராஜாஜி (11.8.1964) தந்தை பெரியாரைப்பற்றி என்ன சொல்லுகிறார்?

‘‘முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் 1924 ஜூன், அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ.இராம சாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18 ஆம் தேதியன்று வருகிறது என்ப தற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவ தாஸ்காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை. ‘‘சென்னைக்கு நான் 18 ஆம் தேதி போயாகவேண்டும். அன்றுதான் இராமசாமி நாயக்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரசு நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக(Head and Active Master)அவர் இருந்து வருகிறார்'' என்று ராஜாஜி ரயிலிலிருந்து 16.10.1924 ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

(நூல்: தமிழ்நாட்டில் காந்தி - நூற்றாண்டு வெளியீடு - ஆசிரியர் அ.இராமசாமி, பக்கம் 391-392)

இவர்கள் எல்லாம் அவ்வளவுப் பெரியவர்களா? இவர்கள் பாராட்டுவதால் பெரியாருக்கு என்ன பெருமை வந்து சேரப் போகிறது என்று சொல்லுவார்களோ!

கடைசியாக ராஜாஜியும், தந்தை பெரியாரும் சொல்லுவதை எடுத்துக்காட்டி முடிப்போம்!

இதோ ராஜாஜி:

‘‘தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

(18.9.1953 அன்று திருவொற்றியூரில் முதலமைச்சர் ராஜாஜி பேசியது)

‘‘இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்டு கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள்தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான்! இது தந்தை பெரியாரின் கருத்தும் - கணிப்புமாகும்.''

(‘விடுதலை', 22.5.1967)

தந்தை பெரியாரும் சரி, ராஜாஜியும் சரி - நடப் பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று கூறி விட்டனர். மாலன்கள், ராஜாஜியின் பக்கத்திலும், நாமோ தந்தை பெரியாரின் பக்கத்திலும் நிற்கிறோம் என்பதுதான் உண்மை. மாலன் போன்றவர்களின் எழுத்துகள் இதனை நிரூபித்துள்ளன.

அவர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். காரணம், அறிவு நாணயமற்ற தன்மையே! ஒப்புக்கொண்டால் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதாரின் இருமுனைகள் அப்பட்டமாகத் தெரிந்துவிடுமே!(Polarisation)அது அவர்களுக்கு அனுகூலமாக இருக்காதே!

நாம் அப்படியல்ல - யதார்த்தத்தை ஒப்புக்கொள்பவர்கள். ‘நீட்' தேர்வு ஆதரவு - எதிர்ப்பு என்பதுகூட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே!

இப்பொழுது நாடாளுமன்றம் வரை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் இடியோசை கேட்கிறதே!

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரசு) இதோ பேசுகிறார் கேண்மின்!

‘‘அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்த பார்ப்பனர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

அம்பேத்கரும், நாங்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள்! ஆரியக் கூட்டமோ ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கு வந்தது. எங்களுக்குத்தான் இந்த மண்ணின் உரிமை உள்ளது. ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியர்களின் கொடுமைகளைச் சகித்து வந்தோம்!'' என்று முழங்கினாரே! (25.11.2015)

ஆம் தந்தை பெரியார் இந்திய நாடாளுமன்றத்தில் ஆவேசமாக நுழைந்துவிட்டாரே!

இந்துத்துவாவாதிகள் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தினால்தான் தாங்கள் காலடி எடுத்து வைக்க முடியும் தமிழ் மண்ணில் என்ற நிலையில், இத்தகையவர்கள் ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மலிவான கூலிக்கு விலை போகும் சக்திகளும் துணை போகின்றன. ஆனால், அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.

தந்தை பெரியார் உலகத் தலைவராகப் பரிணமித்து வருகிறார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார்  தந்தை பெரியாரைப்பற்றி புரட்சிக்கவிஞர்.

இதோ அது நம் கண்முன்! எடுத்துக்காட்டாக -

ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் ‘‘சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு'' நடைபெறுகிறது.

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஏற்பாட்டில், ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையும், தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து இம்மாநாட்டினை நடத்த, உலகின் பல நாடுகளிலிருந்தும், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மனிதநேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அமைப்பின் சார்பாகவும் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கருஞ்சட்டைத் தோழர்கள் தங்கள் சொந்த செலவில் கலந்துகொள்கின்றனர்.

இம்மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். அம்மாநாட்டில் தந்தை பெரியார் எழுதிய கடவுளும் மனிதனும், பெரியார் ஈ.வெ.ராமசாமி - வாழ்க்கைச் சுருக்கம் ஆகிய நூல்கள் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் உள்பட அய்ந்து நூல்கள் வெளியிடப்படுகின்றன.

எனவே, தந்தை பெரியாரின் இயக்கம் என்கிற எரிமலையை அணைத்து அழிக்க நினைப்பவர் எவரும் எளிதில் நெருங்க முடியாத நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை - மோசடி, திரிபு பிரச்சாரத்தால், அவரின் சாதனைகளை, அதன் விளைவுகளை மறைக்கவோ, தகர்க்கவோ முயல்கின்றவர் மூக்குடைப்பட்டுத் தோற்பர்!

(நிறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner