எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஷெ.ஷெயரஞ்சன்

1.7.2017ஆம் தேதி முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. (GST) எனும் வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. Goods and Service Tax
என்பதன் சுருக்கமே  நிஷிஜி (GST)  என்பது நாம் அறிந்ததே. வரிகளில் நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளன. நேர்முக வரி என்பவை நாட்டின் குடிமக்களின் வருவாய்மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி வகையைச் சார்ந்தவை. ஒரு நபரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்கொண்டு வசூலிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகள் ஆகும். மறைமுக வரிகள் என்பவை தராதரம் பார்ப்பதில்லை. ஒருவன் ஏழையா, பரம ஏழையா, நடுத்தர வர்க்கத்தினனா, பணக்காரனா, பெரும் பொருள் படைத்தவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எவராயிருந்தாலும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து பெற்றால் அரசுக்கு (மாநில/ஒன்றிய) வரி செலுத்த வேண்டும். இத்தகைய வரிகள் மறைமுக வரிகள் ஆகும். ஒருவரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்கொள்ளாமல் விதிக்கப்படும் வரிகள் ஏழைகளையும், பணக்காரர்களையும் ஒருங்கே நடத்தும் தன்மையினால், இவை பிற்போக்கான வரிகள் என அடையாளம் காணப்படுகின்றன. நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைப்பதில் நேர்முக வரிகள் பெரும் பங்காற்றுகின்றன.

மாறாக, மறைமுக வரிகள் ஏழைகளையும், செல்வந்தர்களையும் ஒருங்கே நடத்துவதால் ஏழைகளின் வரி செலுத்தும் திறனையும் மீறி அவர்கள் மீது வரிச்சுமை சுமத்தப்படுவதால் அவை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இந்தியத் திருநாட்டின் அரசுகள் பெறும் வருவாயில் பெரும் பங்கு மறைமுக வரிகள் வாயிலாக பெறப்படுபவையே. நாட்டின் முன்னேற்றத்துக்குச் செலவிட பணம் வேண்டும் என்பதால் அரசு வரி வசூல் செய்கிறதாம். ஏழைகளைக் கசக்கி பிழிந்து பெறப்படும் மறைமுக வரிகளைக்கொண்டு அவர்கள் வறுமையை ஒழிப்பார்களாம்; வாழ்வில் ஒளி ஏற்றுவார்களாம்.

இத்தகைய மறைமுக வரிகளை ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை இதுவரை தனித்தனியாக வசூலித்து வந்தன. ஆகையால், மறைமுக வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டது. இத்தகைய வரி செலுத்தப்பட்டனவா என்பதை நிர்வகிக்க ஒவ்வொரு மாநிலமும் விற்பனை வரித்துறையைக் கொண்டிருந்தன. ஒன்றிய அரசு அதற்கான துறையை ஏற்படுத்தி வைத்திருந்தது. நாடு பல மாநிலங்களாகவும், ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வரிவிதிப்பு முறை, விகிதம், கொள்கை, அமைப்பு ஆகியவற்றை கொண்டிருந்தன. இது உள்நாட்டு சந்தை இயக்கத்தை குறைப்பதாகவும், சுதந்திர சந்தையாக இயங்க முடியவில்லை எனவும் கருதிய ஆட்சியாளர்கள், நாடு முழுவதற்குமான ஒரு மறைமுக வரிவிதிப்பு முறையை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சித்தனர்.

முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த வாஜ்பாய் தலைமையிலான NDA அரசு இதன் விதைகளை விதைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வந்த அய்க்கிய முன்னேற்றக் கூட்டணி (UPA I, II) அரசுகள் இதை முன்னெடுத்துச் சென்றன. அப்போதெல்லாம் கடுமையாக இதை எதிர்த்த பாஜக, தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதை விரைவுபடுத்தி தற்போது அமல்படுத்தியும் உள்ளது. இந்த ஜி.எஸ்.டி-யினால் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இதுகுறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. குழப்பமான இச்சூழலில் வரவேற்பு, எதிர்ப்பு என இரு சாராரின் கருத்துகளையும் நாம் பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி. ஆதரவு கருத்துகள்:

1. விடுதலைக்குப்பின் இந்தியாவில் அறிமுகப்படுத் தப்பட்ட மிகப் புரட்சிகரமான வரி சீரமைப்புதான் ஜி.எஸ்.டி.

2. ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்பது தாரக மந்திரம்.

3. மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத் தடைகளைத் தகர்த்துள்ளது ஜி.எஸ்.டி.

4. 130 கோடி மக்கள் கொண்ட ஒரே சந்தையை ஜி.எஸ்.டி. உருவாக்கியுள்ளது.

5. 17 விதமான ஒன்றிய, மாநில, உள்ளாட்சி வரி களை ஒழித்து ஒரே வரியாக உருவாக்கியுள்ளது ஜி.எஸ்.டி.

6. இந்தியப் பொருளாதாரம் தடையற்ற வர்த்தகத் தால் (ஜி.எஸ்.டி-யின் உதவியால்) 1இல் இருந்து 2 விழுக்காடு கூடுதலாக வளரும்.

7. உற்பத்தித்துறை வளம் பெறும், ஏற்றுமதி பெருகும், வேலைவாய்ப்பு பெருகும், முதலீட்டு சூழல் வளம் பெறும், வரி ஏய்ப்பு குறையும், வரி செலுத்தும் செலவு குறையும்.

8. பொருளாதாரத்தின் திறன் மேம்படும், அமைப்பு சாரா பொருளாதாரம் அமைப்புக்குள் கொண்டு வரப்படும், வரிவருவாய் பெருகுவதால் அரசுகள் கூடுதலாகச் செலவழிக்க முடியும்.

9. வரி மீது வரி செலுத்தும் முறை ஒழியும், ஏற்கெனவே ஒருமுனையில் செலுத்தப்பட்ட வரியை திரும்பப்பெறலாம் Tax Credit.

10. வரி தொடர்பான வழக்குகள் குறையும்.

11. நுகர்வோர் இதுவரை செலுத்திவந்த மறைக்கப்பட்ட வரிகளை இனிமேல் செலுத்தத் தேவையில்லை.

12. தற்போது நான்கு விகிதங்களில் மட்டுமே வரி வசூலிக்கப்படும். பெட்ரோலியப் பொருள்களும், மதுவும் தற்போது ஜி.எஸ்.டி-யில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்படுகிறது.

13. பெரும்பாலான பொருள்கள் 12-18 விழுக்காட்டு வரி என்ற அளவில்தான் வைக்கப்பட்டுள்ளன.

14. உற்பத்தியிலேயோ, நுகர்விலோ வரி விதிக்கப் படாமல் முழு சங்கிலித் தொடராக வரி விதிக்கப்படும்.

15. பல பொருள்களின் மீதான வரி விகிதம் குறையும்.

16. ஜி.எஸ்.டி-யினால் இடையிலுள்ளோர் லாபம் பெற்றுவிடாமல் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

17. மிகச்சிறந்த ஒரு ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த காலமெல்லாம் காத்திருக்காமல், சிறந்த ஒரு ஜி.எஸ்.டி. இப்போது அமல்படுத்தப்படுகிறது.
ஜி.எஸ்.டி. எதிர்ப்பாளர்களின் கருத்துகள்:


பாஜக-வின் தீவிர ஆதரவாளரான .. வெங்கடேஷ் ஜி.எஸ்.டி. குறித்த தனது கருத்துகளை . இணையதளத்தின் நேர்முகத்தில் தெரிவித்திருப்பதாவது:

1. ஜி.எஸ்.டி அமைப்பின் சட்டதிட்டங்களின்படி ஒரு நிறுவனம் ஒரு மாநிலத்தில் மட்டும் தொழில் புரிந்தால் வருடத்துக்கு 37 ரிட்டர்ன்ஸ் சமர்ப்பிக்க வேண்டும். மாநிலத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதன் எண்ணிக்கை அதன் மடங்குகளில் அதிகரிக்கும்.

2. எந்த தவறும் வேண்டுமென்றே செய்யப்பட்ட தாகக் கருதப்படும்.

3. வரித்துறையின் கடுமை இதனால் அதிகரிக்கும்.

4. ஊழியர்கள் சிறு தவறு செய்தாலும் முதலாளிகள் பொறுப்பாவர்.

5. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் முதலாளி அக்னிப் பரிட்சையில் தேற வேண்டும்.

6. இரண்டாண்டுகளுக்கு பெரும் குழப்பமும், சிக்கலும் நேரும்.

7. 'ஒரே நாடு ஒரே வரி' என்பது 'ஒரே உணவகம், மூன்று வரிகள்' என்றாகிவிட்டது.

8. எட்டு விகிதங்களில் வரி வசூலிக்கப்படும் சூழல் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கும்.

9. பல விகிதங்கள் வரி ஏய்ப்புக்கு வழி வகுக்கும்.

10. இதனால் வரி செலுத்துவோர் ஒவ்வொருவரையும் வரித்துறை சந்தேகிக்கும்.

11. ஜி.எஸ்.டி-யின் தற்போதைய நிலை பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைதான்.

12. ஜி.எஸ்.டி. எனும் கருத்தாக்கத்துக்கு நேரெதிராக ஜி.எஸ்.டி. திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

13. ஜி.எஸ்.டி. திட்டமிடப்பட்டபோது எந்த மாநில அரசுக்கும் மறைமுக வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

14. ஜி.எஸ்.டி. அமல்படுத்த திட்டமிட்டபோதுதான் நமது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி மாநிலங் களின் உரிமையை மாற்ற வேண்டிய சிக்கல் புரிந்தது.

15. அது முடியாது என்பதால் ஒரு சமரசம் செய்து ஜி.எஸ்.டி-யை உருவாக்கியுள்ளனர். சமரசம் செய்து கொண்டாலே திட்டம் கோளாறாகிவிடும்.

16. ஜி.எஸ்.டி. என்பது பலவற்றின் கூட்டுக் கலவையாக, இதுதான் இது என்று இனம்புரிந்து அறிய முடியாத ஒன்றாக உருவாகிவிட்டது.

17. சாமானியர்கள் மட்டுமல்ல, தொழில்முறை பட்டயக் கணக்கர்களுக்கே ஜி.எஸ்.டி. என்றால் என்ன என்பது பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது. பட்டயக் கணக்கர் கழகம் தினமும் ஒரு செமினார் நடத்தியும் குழப்பம் அதிகரித்ததே மிச்சம்.

18. நமக்கு கிடைத்திருப்பது ஜி.எஸ்.டி. அல்ல; கள்ள ஜி.எஸ்.டி.

19. ஜி.எஸ்.டி. வரி பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பதில், அதி பயங்கரவாதத்தை விதைத்துள்ளது.

20. நுகர்வோருக்கு நன்மை விளையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

21. இவ்வளவு சிக்கல் நிறைந்த ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதால் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதற்கு பதிலாக லஞ்சமும் ஊழலும் பெருகும்.

22. சந்தை வழிநடத்தும் பொருளாதாரம் என்ப தற்குப் பதிலாக அரசு வழிநடத்தும் முறை உச்சம் பெறும்.

23. வரி குறைந்த பொருள்கள், குறைந்த விலை யில் நுகர்வோருக்கு கிடைக்கும் என நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.

24. சிறு குறு தொழில்கள் பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும்.

25. பெரும் குழப்பம் காரணமாக முதலீடுகளுக்கான சூழல் மோசமாகும்.

26. இதனால் வளர்ச்சி குன்றும்.

இவைதான் இவ்விரு நிலைப்பாடுகளின் சாரம். ஜி.எஸ்.டி. வெல்லுமா அல்லது தோற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கறுப்புப் பண ஒழிப்பு போன்றதாகிவிடாமல் இது இருக்கும் என நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

கட்டுரையாளர் குறிப்பு: ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.அய்.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சென்னை மாற்று வளர்ச்சி மய்யத்தை (அய்டிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இந்திய அரசும், தமிழக அரசும் இவரது ஆய்வுகளை, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner