எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மஞ்சை வசந்தன்

பித்தலாட்டத்திலே பிழைப்பு நடத்தி, பின் பித்தலாட்டத்திலே ஆதிக்கம் செலுத்தி, அதன்பின் பித்தலாட்டத்திலே ஆட்சியும் நடத்துகிறவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் என்பதால், மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் நினைவிடத்தில் அவர் சிலைமுன், பகவத் கீதையை வைத்துவிட்டு, அப்துல் கலாம் பகவத் கீதையை விரும்பிப் படித்தார் என்பதால் வைத்தோம் என்று பித்தலாட்டம் பேசுகின்றனர். அப்துல்கலாம் விரும்பிப் படித்தது கீதை மட்டுமா?

எல்லா நூல்களையும்விட, அவர் மிகவும் விரும்பி, மதித்து ஏற்றிப் போற்றிய நூல் "திருக்குறள்". அவர் பைபிள், ஆதிகிரந்தம், புத்த தம்மம் என்று பல மத நூல்களையும் விரும்பிப் படித்துள்ளார். அத்தனை நூல்களையும் அங்கு வைக்க முடியுமா? அப்படியிருக்க பகவத்கீதையை மட்டும் அங்கு வைப்பது அடாவடிச் செயல் அல்லவா?

மதச்சார்பற்ற ஒரு மாபெரும் தலைவர் சிலை முன் மதச் சார்பிலா திருக்குறளை வைப்பதுதானே நேர்மை, பொருத்தம், சிறப்பு. ஆனால், அதைச் செய்யாமல் பகவத் கீதையை வைப்பது, தங்கள் கொள்கையை அவர் மீது திணிக்கும் அநியாயம் அல்லவா?

உலகமே ஏற்றுப் போற்றும் திருக்குறளைவிட பகவத்கீதை சிறந்ததா?

ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று தங்கள் பாசிச, சனாதனத் திணிப்பு முயற்சிகளின் ஒரு நடவடிக்கையே அப்துல் கலாமிடம் பகவத் கீதையைத் திணித்திருப்பது.

உண்மையும் உள்நோக்கமும் அப்படியிருக்க, உத்தமர்களைப் போல பி.ஜே.பி. கட்சியினர் பேட்டி கொடுப்பது பித்தலாட்டத்திலும் பெரிய பித்தலாட்டம்! அதைவிட பெரிய பித்தலாட்டம் பகவத்கீதை இந்துக்கள் அனைவருக்கும் புனித நூல் என்பது!

பகவத் கீதை இந்துக்களின் புனித நூலா?

இந்து மதம் என்பதே இல்லாத மதம். எது இந்து மதம் என்று கேட்டால் நேர்மையாய், தெளிவாய், உண்மையாய் அவர்களால் பதில் சொல்ல முடியுமா?

இந்தியாவில் பல்வேறு கடவுள்சார் நம்பிக்கைகள் இருந்தன.

சிவனை வணங்குபவர்கள், விஷ்ணுவை வணங்குகிறவர்கள், காளியை வணங்குகிறவர்கள, வீரனை வணங்குகிறவர்கள் இப்படி ஏராளம்.

இதில் சிவனை வணங்குகிறவர்களும், விஷ்ணுவை வணங்குகிறவர்களும், எதிர் எதிராய் ஒருவரையொருவர் வெறுத்து, இழிவுபடுத்தி மோதிக்கொண்டார்கள்.

சிவசத்தமே காதில் விழக்கூடாது என்று காதில் மணி கட்டிக்கொண்ட வைணவர் உண்டு.

வைணவர்களிலே வடகலை, தென்கலை என்று இரு பிரிவு. "சீ"நாமமா, "ஹி"நாமமா என்று போட்டியிட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாதிட்டவர்கள்.

இவர்கள் எல்லோரையும் சேர்த்து இந்து என்று கூறிக்கொள்வதும், இந்து மதம் என்று சொல்லிக்கொள்வதும் மோசடியல்லவா?
இதோ அவர்களின் நடமாடிய தெய்வம்(!) செத்துப்போன சங்கராச்சாரியே கூறுவதைப் பாருங்கள்.

இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126)

வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். (தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267) என்கிறார்.

ஆக, வெள்ளைக்காரன் தன் வசதிக்கு சூட்டிய பெயர்தான் இந்துமம் என்பது. மற்றபடி இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. அதைத் தோற்றுவித்தவர் என்ற எவரும் இல்லை. அதற்கென்று ஒரு கொள்கையோ, ஒரு புனித நூலோ இல்லை.

புலால் உண்பவனும் உண்டு, புலால் உண்ணாதவனும் உண்டு; பூணூல் போட்டவனும் உண்டு. பூணூல் போடாதவனும் உண்டு; தீட்டு உள்ளவன் உண்டு, தீட்டு இல்லாதவன் உண்டு. பட்டை போடுபவன் உண்டு, நாமம் போடுபவனும் உண்டு. அப்படியிருக்க இவர்கள் எல்லாம் எப்படி இந்து?

முரண்பட்ட கொள்கை:

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்பவரும் இந்து! ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு என்று சொல்பவரும் இந்து!
இதில் எது இந்து மதத்தின் கொள்கை? வைணவர்களுக்கென்று தனி புனித நூல்கள் உண்டு.

சைவர்களுக்கென்று தனி புனித நூல்கள் உண்டு.

வைணவர்களுக்கு திருப்பாவை என்றால், சைவர்களுக்கு திருவெம்பாவை.

சைவர்களுக்கு சைவத் திருமுறைகள் உண்டு; வைணவர்களுக்கு நாலாயிரம் திவ்யப்பிரபந்தம்.

சைவர்கள் சிவன் உயர்வு என்பர், திருமால் சிவனின் பாதத்தை பார்க்கக்கூட முடியாமல் தோல்வி கண்டவர் என்பர்.

வைணவர்கள் திருமாலே உயர்ந்தவர். சிவன் அவருக்கு இணையில்லை என்பர். அப்படிச் சொல்லுகின்ற நூல்தான் பகவத் கீதை.

"ஜனங்கள் தமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து, தம்முடைய ஸ்வபாவத்திற்கு கட்டுப்பட்டு அந்த அந்தத் தேவதைகளுக்காக ஏற்பட்ட விரதங்களுடன் இதர தேவதைகளை (சிவன், காளி, விநாயகர், முருகன் போன்றவை) சரணடைகிறார்கள். அவர்கள் சிரத்தையுடன் அத்தேவதைகளுக்குப் பூஜை செய்தாலும், நானே அமைத்துத் தந்த பலனையே அந்தத் தேவதைகள் மூலம் அவர்கள் பெறுகிறார்கள். ஆனால், அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்தப் பலன் அழியக் கூடியது."  (பகவத் கீதை, அத்தியாயம்-7, சுலோகம் 20, 22, 23)

இப்படி சிவன் முதலிய கடவுளை வணங்குகிறவர்கள் சிற்றறிவுடையவர்கள் என்று கேவலமாய்ப் பேசும் பகவத் கீதை எப்படி இந்துக்களின் புனித நூலாகும்? அது வைணவ நூல்தானே?

பகவத் கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. அதில் ஆறு அத்தியாயங்களில் கிருஷ்ணன் பெருமையே பேசப்படுகிறது.

அப்படியிருக்க, அது வைணவ நூலேயன்றி இந்துக்கள் அனைவருக்குமான புனித நூலாக எப்படி ஆகும்?

பகவத் கீதை ஒரு புனித நூலா?

நான்கு வருணத்தை நானே படைத்தேன் என்று கிருஷ்ணன் கூறுவதாய் சொல்லும் பகவத்கீதை எப்படி எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நூலாகும்? கீழ் ஜாதியினர் அதை எப்படி ஏற்பர்?

பகவத் கீதை இந்துக்களின் புனித நூல் அல்ல என்பது மட்டுமல்ல, அது ஒரு புனித நூலும் அல்ல.

அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அந்த அளவிற்கு மோசமானவை; அநீதியானவை; இழிவானவை.
எடுத்துக்காட்டாகச் சில:

"பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள்" ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்.

"புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும் பக்தர்களான ராஜரிஷிகளும்" உயர்ந்த பிறவிகள்.

பகவத்கீதை, ஒன்பதாவது அத்தியாயம் சுலோகம் 32, 33-இல் கிருஷ்ணனே இவ்வாறு கூறுகிறான். பெண்களையும், பெரும்பான்மை மக்களையும் இழிவு செய்யும் இந்த நூல் எப்படிப் புனித நூலாகும்?

மேலும், "எவனொருவன் மிக்க கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே (கிருஷ்ணனையே) வழிபடுவானேயானால் அவனை நல்லவன் என்றே அறிய வேண்டும்."

"பிரம்மலோகம் வரையில் உள்ள லோகங்களெல்லாம் அழிவுள்ளவையாகையால் அவைகளுக்குச் செல்பவர்கள் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும். ஆனால், வைகுந்தம் அடைபவர்கள் மறுபிறவி எடுத்துத் துன்பப்பட மாட்டார்கள்" என்று இந்த சுலோகத்திற்கு விளக்கம் அளிக்க வந்த ராமானுஜர் கூறுகிறார்.

"எப்பொழுதும் என்னைப் பற்றி (கிருஷ்ணனைப்பற்றி) பாடிக்கொண்டும், கடினமான விரதங்கள் இருந்தும், என்னைப் பக்தியுடன் நமஸ்கரித்துக் கொண்டும், எப்போதும் யோகத்தை மேற்கொண்டும் உபாஸனை செய்பவர்கள் மகாத்மாக்கள்" என்று ஒன்பதாவது அத்தியாயம், சுலோகம் 14-இல் கிருஷ்ணன் கூறுகிறான்.

"எனக்கு வெகு இஷ்டமானதைச் செய்தவன் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவன்.அவனைக் காட்டிலும் சிறந்தவன் இவ்வுலகில் வேறொருவனும் இருக்க மாட்டான்."

(அத்தியாயம் 8, சுலோகம் -69)

"எல்லா தருமங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக! நான் உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவிக்கிறேன்."

(அத்தியாயம் 18, சுலோகம் - 66)
இப்படி வைணவக் கடவுளை மட்டும் உயர்த்தி, மற்றக் கடவுள்களை இழிவுபடுத்தும் பகவத் கீதை எப்படி இந்துக்களின் பொது நூலாகவும், புனித நூலாகவும் இருக்க முடியும்?

இந்த பகவத் கீதையின் வண்டவாளத்தை வண்டி வண்டியாக அறிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கத்தை விரிவாகப் படிக்கவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner