எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  கவுதம் பாடியா

நேற்றைய தொடர்ச்சி...

இந்த வழியில் பேச்சு சுதந்திரத்துக்கு மாபெரும் கேட்டினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் வடிவ மைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அறிவிப்பின் மூலம் ஒரு நூலைத் தடை செய்வதற்காக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தின் மூலம், அதிகப்படியான கட்டுப்பாடுகளையும், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் கூட, இந்த சட்டம் வாய்ப்பு அளிக்கிறது. செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் நிர்பந்தங்கள் காரணமாக, ஒரு நூலைத் தடை செய்து ஆணை பிறப்பித்துவிட்டு, பிறகு சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று தட்டிக் கழிப்பதற்கான எளிய வழியை  அரசுக்கு இந்த சட்டம் ஏற்படுத்தித் தருகிறது. மேலும் இது போன்ற வழக்குகள் செலவு மிகுந்தவையாகவும், நீண்ட காலம் நடைபெறுபவையாகவும் இருப்பவையே ஆகும். தடையினால் ஏற்படும் பொருளாதாரச் சுமை எழுத்தாளர் அல்லது வெளியீட்டாளர் மீது சுமத்தப்படுவதை இந்த 95 ஆவது சட்டப் பிரிவு உறுதிப்படுத்திக் கொள்கிறது. தடை பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் காலத்தில் அந்த நூல் விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்படாமல் இருப்பதையும் இந்த விதி உறுதிப்படுத்திக் கொள்கிறது. பெரும்பாலான இத்தகைய வழக்குகள் அவ்வளவு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விரைந்த  தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. "கடவுள் மனிதரில் இருந்து ஆற்றல் மிகு பெருவணிகரும் தொழிலதிபரும் என்ற நிலைக்கு" என்ற நூலைப் பொருத்தவரை, அதன் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளரின் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, கார்கர்டுமா சிவில் நீதிமன்ற நீதிபதி, அந்த நூலின் மீது தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையில் தான் இந்த நூலை மேலோட்டமாகப் படித்துப் பார்த்ததாகவும், பாபா ராம்தேவின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நூலின் சில குறிப்பிட்ட பகுதியைத் தான் படித்துப் பார்த்ததாகவும், இந்நூல் பாபாராம்தேவை மிகவும் இழிவு படுத்துவதாக இருப்பதாகவும் நீதிபதி தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 95 ஆவது பிரிவின் பணியை இந்த நீதிமன்ற தடை ஆணையே செயல் படுத்தி இருக்கிறது. ஒரு விசாரணை கூட நடத்தப்படாமல், ஒரு நூல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை இந்த நூலின் மீதான தடை நடைமுறையில் இருக்கும். இத்தகைய தடை எழுத்தாளர்களின் உரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்ததே ஆகும்.

வழக்கின் முதல் நிலையே

நூலாக்கத் தடை என்பது சரியா?

பேச்சு சுதந்திரம் மற்றும் மானஇழப்பீட்டு சட்டம் ஆகியவற்றின் நிலை நாட்டப்பட்ட கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இந்த கார்கர்டுமா சிவில் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்திய மான இழப்பீட்டு சட்டத்தின் அடிப்படையாக விளங்கும் இங்கிலாந்து நாட்டின் பொது சட்டத்தில், புத்தகங்கள் மீதான நீதிமன்றத் தடை பேச்சு சுதந்திரத்தின் மீது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பதால், இத்தகைய தடை ஆணைகள் எப்போதுமே பிறப்பிக்கப்படக் கூடாது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முதன்மை விசாரணையில் இரு கட்சியினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நூலைத் தடை செய்வதற்கு எதிரான வாதத்தை எழுத்தாளரோ, வெளியீட்டாளரோ முன்வைக்க முடியவில்லை என்ற நிலையில் மட்டுமே அந்த நூலின் மீது தடை விதிக்கப்படலாம். இத்தகைய மானஇழப்பீட்டு வழக்குகளுக்கான சரியான தீர்வு, முதல் விசாரணையின் போதே நூலை வெளியிடுவதன் மீது தடை விதிக்காமல் இருப்பதுதான்; ஒரு முழு அளவிலான முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் மானஇழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது இறுதியில் மெய்ப்பிக்கப்பட்டால், வாதிக்கு பணஇழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையான பொது சட்ட விதி, அரசமைப்பு சட்டத்தின் 19 (1) (ணீ) பிரிவின்படி கூடுதல் வலியுறுத்தலைப் பெறுகிறது என்றும்,  பேச்சு சுதந்திரத்துக்கும், ஒரு தனி மனிதரின் மதிப்பிற்கும் இடையேயான சமன்பாட்டை இத்தகைய தடை ஆணைகளால் நிலை நிறுத்த முடியாது என்றும் டில்லி உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டில் வலியுறுத்தியுள்ளது.  ஊகம் என்பது எப்போதுமே பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் பக்கம்தான் இருக்க வேண்டும் என்ற  நமது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைளை உயர்நீதிமன்றம் மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எழுத்தாளர் அல்லது வெளியீட்டாளரின் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே பாபாராம் தேவ் பற்றிய நூலின் மீது கார்கர்டுமா சிவில் நீதிமன்ற நீதிபதி தடை விதித்து இருப்பது பெரும் இழப்புக் கேடேயாகும்.

மாறுபட்ட நோயின் அடையாளங்கள்

"ஆதிவாசி நடனமாடமாட்டார்" என்ற நூலின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை,  பேச்சு சுதந்திரத்தைப் பறிக்கும் நமது குற்றவியல் சட்ட விதிகளில் உள்ள குறைகளை, தவறுகளை எதிரொலிப்பதாகவே உள்ளது.  "கடவுள் மனிதரில் இருந்து ஆற்றல் மிகு பெருவணிகரும் தொழிலதிபரும் என்ற நிலைக்கு" என்ற நூலின் மீது பிறப்பிக்கப் பட்டுள்ள இடைக்காலத் தடை ஒரு மாறுபட்ட நோயின் அடையாளமாகத் தோன்றுவதே ஆகும். சட்டம் கூட பேச்சு சுதந்திரத்தைப் பாது காக்கும் நிலையில் இருக்கும்போது, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அளிக்கப் பட்டுள்ள நீதிபதிகள் ஒரு மக்களாட்சி நாட்டில் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைத் தாங்களே உணர்ந்து அதற்கேற்ப செயல்படாமல் இருப்பது எந்த வகையில் நியாயமானது?

முதல் பிரச்சினை சட்ட சீர்திருத்தம் பற்றிய பிரச்சினையாகும்.  இந்திய குற்றவியல் நடை முறைச் சட்ட 95 மற்றும் 96 பிரிவுகளை நீக்குவதன் மூலம், நூல்களைத் தடை செய்யும் அதிகாரத்தை அரசின் கைகளில் இருந்து எடுத்துவிடுவதே அதற்கான சரியான தீர்வாக இருக்கும். ஒரு நூலைத் தடை செய்ய வேண்டும் என்று அரசு விரும்பினால், அது நீதிமன்றத்தை அணுகி,  தடை செய்யப் படுவதற்காக அந்த நூல் எந்த சட்ட விதிகளை மீறியுள்ளது என்பதை எழுத்து மூலமாகவும், வழக்குரைஞர் மூலமாகவும், தெளிவான பொருத்தமான சாட்சியங்களுடன், எடுத்துக் காட்டி மெய்ப்பிக்க வேண்டும்.

இரண்டாவது பிரச்சினை சட்டக் கலாச்சாரம் பற்றிய பிரச்சினையாகும். அதனால் அது நமது பொது கலாச்சாரத்தின் ஒரு பிரச்சினையே ஆகும். நமது மக்களாட்சியின், நமது அரசமைப்பு சட்டத்தின்  சமரசம் செய்து கொள்ள இயலாத, அடிப்படையான, மூலக் கூறான மதிப்பீடாக பேச்சு சுதந்திரத்தை, எந்த விதத் தயக்கமும் இன்றி தொடர்ந்து பாதுகாத்து வருவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

நன்றி: "தி ஹிந்து", 17-08-2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner