எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்திய துணைக்  கண்டத்தில் சதுர்வர்ண கோட் பாடுகளால் மிகக் கேவலமாக பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா, இதனால் தான் 20.9.1982 இல் பண்டிட் சங்கர்லால் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கேரளாவை பைத்தியக் காரர்களின் புகலிடம் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த மலபாரி மனநோயாளிகளும், அவர்களுடைய புகலிடங்களும் தங்களைப் புரிந்து கொண்டு சரிசெய்து கொள்ளாத வரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழ்கின்றவர்களால் ஏளனமாகப் பார்க்கப் படுவார்கள் என்பதைத்தவிர வேறெதையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை. இத்தகைய மிருகத்தனமான, ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்களை அவர்கள் மீது திணித்தி ருப்பது மிக அவமானம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கும் சக்தியை ஒடுக்க கடுமையான வரிகள்

கீழ்மட்டத்தில் உள்ளவர்களில் மிக பலவீ னமானவர் இத்தகைய சமூக நடைமுறை களினால் மனிதாபிமானமற்ற முறையில் ஓர வஞ்சனையுடன் நடத்தப்பட்டனர்.

ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் மீது சுமார் 160 வரிகள் விதிக்கப்பட்டன. குடை வைத்துக் கொள்ள வரி, மீசை வைத்துக் கொள்ள வரி, வெள்ளுடை அணிய வரி, பட்டப் பெயர்கள் வைத்துக் கொள்ள வரி, திருமண வரி போன்ற பல வரிகள் அவற்றுள் அடங்கும். அந்த வரிகள் அவ்வப்போது உயர்த்தவும்பட்டன.

தங்க நகை அணியும் பெண்களுக்கு ‘மேனிப்பொன்னு' என்ற வரி விதிக்கப் பட்டது. அந்தப் பெண்களுக்கு பித்தளை மற்றும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிழிந்தெடுக்கப்படுகின்ற அளவு சுமை ஈழவ மக்கள் மற்றும் அவர்களினும் தாழ்ந்தவர்களின் முதுகில் வைக்கப்பட்டது. அடிமைபோல் உழைத்து வாழ்கின்ற மக்களை ஏழ்மைக்குள்ளாக்கி கொடுமைக்குள்ளாக்கி இத்தனை வரிகளை விதித்த கேரளத்தின் சர்வாதிகார சக்திகளின் கொடுமை உலகின் எந்த நாட்டிலும் நெருக்கடி காலங்களில் கூட நடந்ததில்லை. (கே.ராஜய்யன் - நாடார் சரித்திர ரகஸ்யங்கள்)

அடிமை முறை என்பது உலகின் எந்த மூலையிலும் இருந்ததைவிட கேரளாவில் மிகக் கேவலமாக இருந்தது என்கிறார் "கேரளாவில் அடிமைத்தனம்" என்ற நூலை எழுதிய ஆடூர் கே.கே.ராமசந்திரன். அடிமைகள் நிலத்துடன் இணைக்கப் பட்டனர். மிருகங்களைப் போல் விற்கப்பட் டனர். அடிமைகளுக்கு ‘அடிமைப்பணம்' என்ற வரியும் விதிக்கப்பட்டது.

1800 ஆம் ஆண்டு மலபார் பகுதியில் சுற்றுப்பயணம் செய்த புகழ்பெற்ற வரலாற் றாசிரியர் டாக்டர். பிரான்சிஸ் பச்சானன் "ஹைதர் அலியின் படை யெடுப்புக்கு முன் நம்பூதிரி நில உடைமை யாளர்கள் தங்கள் அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்தனர். நம்பூதிரிகளுக்கு உரிமையான அல்லது அனுப வத்தில் இருந்த நிலங் களுக்கு வரிகள் விதிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். "ஈழவர்கள், மற்ற ஒடுக்கப்பட்ட வர்களை சுமார் 150 ஆண்டுகளாக நசுக்கிய வரிகள் தான் அவர் களை கட்டுப்பாட்டிற் குள் வைக்கின்ற வலிமைமிக்க ஆயுதமாக விளங்கியது" என்று திரு.எஸ்.என். சதாசிவம் தனது நூலில் (A Social History Of India)
குறிப்பிட் டுள்ளார்.

அனிஷம் திருநாள் அவர்களால் "திருப்படி தானம்" அளிக்கப்பட்ட பின்னர் இந்தக் கொடுமைகள் மேலும் ஆற்றல் மிக்கவையாக்கப்பட்டு பன்மடங்கு பெருகின. நிலங்களைக் குத்தகைக்கு விடும் அதிகாரம் முழுவதுமாக "திருப்படி தானம்" மூலம் பத்மநாபசாமி ஆலயத்திற்கு கிடைத்தது. தலைவரி என்ற ஆள் வரி ஒன்றை மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பார்ப்பன அமைச்சர் ராயப்பன் என்பவன் கண்டுபிடித்து மக்கள் மீது திணித்தார்.

முலை வரி

எல்லா வரிகளையும் விட மிகக் கொடுமை யான வரி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்ட முலைவரி ஆகும். இது அவர்களை இழிவுபடுத்தி சுயமரியாதையை இழக்க வைத்து, எப்போதும் அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கத்துடன் விதிக்கப் பட்ட வரி. ஒடுக்கப்பட்ட வகுப்பினரான ஈழவர், நாடார், புலையர் மற்ற வகுப்புகளைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பை ஆடையினால் மறைக்கக் கூடாது என்றும், அப்படி ஆடை அணிந்து மார்பை மறைக்க விரும்புபவர்கள் அதிகபட்ச வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது. ஆனால் உயர்ஜாதி பெண்களுக்கு இந்த வரி விதிக்கப்பட வில்லை. அவர்கள் வரியில்லாமல் மேலாடை அணிய அனு மதிக்கப்பட்டனர்.

வரிவசூலிக்க வன்முறைகளைப் பயன் படுத்தினர். வரிக்கு மேல் லஞ்சமும் கேட் டனர். வரிசெலுத்தியதற்கான ரசீதையும் அளிக்க மறுத்தனர். தாழ்த்தப்பட்ட வர்க்கங் களைச் சேர்ந்தவர்களை கொள்ளையடிக்கும் நிலமாக விளங்கிய கேரளா உண்மையி லேயே ஒரு நரகமாகத் திகழ்ந்தது. முலை வரி வசூலிக்க அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மார்பை மறைத்திருக்கின்ற பெண்களிடம் வரிகட்ட வற்புறுத்தினர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் மன உளைச் சலுடன் இந்த அவமானத்தையும் தொல்லை களையும் அனுபவித்தனர். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்களா கவோ மதிப்பவர்களாகவோ அதிகாரிகள் இல்லை.

வீராங்கனை நங்கேலி

1803 ஆம் ஆண்டு ஒரு வரி வசூலிப்பவரும் அவரது உதவியாளரும் செருத்தாலா கிராமத்திற்குச் சென்று ஒரு ஈழவப் பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டினர், நஸ்கெலி என்ற பெண் அவளது மார்பை மறைத்து ஆடை அணிந்திருந்தத னால் அவளை வரிகட்ட வற்புறுத்தினர். தனது கணவன் சிறுகண்டன் மீது பக்தியும் பாசமும் கொண்டிருந்த நங்கேலி எந்த சட்டத்தைப் பற்றியும் கவலைப்படாது மேலாடை அணிந்திருந்தாள். மேலும் அவள் குடும்பம் வரிகட்ட வசதியற்ற ஏழைக் குடும்பமாகவும் இருந்தது. வரி வசூலிப்பவர்களின் அச் சுறுத்தல்களால் ஆத்திரமடைந்த நங்கேலி அருகிலிருந்த அரிவாளை எடுத்துத் தன் இரு மார்பகங் களையும் அறுத்து குருதி கொட்ட கொட்ட ஒரு வாழையிலையில் வைத்து "எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அரசனிடம் இந்த வரியை" என்று அதிகாரிகளின் முன் வைத்தாள் நங்கேலி,

எதிர்பாராத இந்த நிகழ்வினால் அச்ச மடைந்த அதிகாரிகள் அங்கிருந்து அலறி ஓடினர். அதிக இரத்தத்தை இழந்ததனாலும் அரிவாளால் மார்புகள் வெட்டப்பட்ட வேதனையாலும் துடிதுடித்து இறந்தாள் நங்கேலி. செய்தியறிந்து ஓடி வந்த அவளது கணவன் தன் காதல் மனைவியின் மரணத் தைத்தாங்கிக் கொள்ள முடியாமல் எரிந்த அவள் சிதையில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

இந்த  செய்தி திருவிதாங்கூர் மன் னருக்கு அதிர்ச்சியை அளித்தது. மக்களு டைய எதிர்ப்பு உணர்வுகள் அதிகமானதை அறிந்த மன்னர் உடனடியாக அந்த வரியைத் திரும்ப பெற்றார்.

நங்கேலி வாழ்ந்த அந்த கிராமம் மக்களால் "முலைச்சிப்பரம்பு" என்று அழைக்கப்பட்டது. ஆனால் தங்களுடைய  கொடுமைக்குச் சாட்சியமாக "முலைச்சிப் பரம்பு" என்ற பெயர் இருப்பதை விரும்பாத ஆதிக்க சக்திகள் அந்த கிராமத்திற்கு "மனோரமா" என்ற பெயரை வைத்து நங்கேலியின் தியாகத்தை முற்றிலுமாக மறைத்து அழிக்க முயன்றனர். ஆதிக்க சக்திகள், தங்கள் கொடுஞ்செயல்களுக்கான ஆதாரங்கள் தடயங்கள் எங்கெல்லாம் உள் ளதோ, அங்கெல்லாம் சென்று அவற்றை மிகக் கவனமாக அழிப்பதை வழக்க மாகக் கொண்டிருந்தனர்.

ஆனால் நங்கேலியின் தியாக மரணம் வீணாக வில்லை. அது கனல் விட்டு எரியத் துவங்கியது. ஈழவ மக்கள் பொறுமையை இழந்தனர். அவர்கள் இந்தக் கொடுமை யின் அடிவேரை அறுக்க விரும்பினர். 200 ஈழவ இளை ஞர்கள் ஒரு குழுவாகச் செயல் பட்டு வைக்கம் கோவிலுக்குள் நுழைவதென முடிவு செய் தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் பிரவேசத்தைத் தடுத்த உயர்சாதியினருக்கு எதிராக ஒடுக்கப்பட்ட முதல் ஆலயப் பிரவேச முயற்சி இது. இது நடந்தது நங்கேலி இறந்த 1803ஆம் ஆண்டு ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி ஆதிக்க சக்தியினருக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. பலநூறு ஆண்டுகளாகத் தங்களின் எல்லையற்ற கொடுமைகளைத் தாங்கி, குனிந்து பணிந்து வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு எதிராக இப்படிக் கிளர்ந்தெழுவார்கள் என்பதை ஆதிக்கவாதியினர் எதிர்பார்க்க வில்லை. அவர்கள் திருவாங்கூர் மன்னர் பலராம வர்மாவிடம் முறையிட்டனர். அவரும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றார். ராணுவம் அனுப்பப்பட்டது. ஈழவர் இளைஞர்களின் வைக்கம் ஆலயப் பிர வேசப் போராட்டம் மன்னரின் பலம் பொருந்திய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. நிராயுதபாணி களாகப் போராடிய ஈழவ இளைஞர்கள் மன்னரின் படையால் படு கொலை செய்யப்பட்டனர். இரத்தமும் சதை யுமாக அவர்களது உடல்கள் "தளவாய்குளம்" என்ற குளத்தில் வீசியெறியப்பட்டன.

கோவிலுக்குள் நுழைய முயன்ற ஈழவ இளைஞர்களின் முயற்சியை ஆதிக்க சக்திகள் தங்கள் சதுர்வர்ணத் திமிரின் மூலம் எதிர்கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்ப டுவது தொடர்ந்தது. பிராமணரல்லாதார் மீது மனிதாபிமானமற்ற முறையில் ஒன்றன்பின் ஒன்றாக அடக்குமுறை நடவடிக்கைகள் குவிந்தன; முடிவின்றி தொடர்ந்தன. இந்தக் கொடுமைகள் கேரளாவில் இருந்த ஒடுக்கப் பட்ட மக்களை மற்ற மதங்களை நோக்கி விரட்டின. அவர்கள் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை நாடத் துவங்கினர். கூட்டம் கூட்டமாக அவர்கள் மதம் மாறினர். இது ஒன்றுதான் நம்பூதிரிகளின் கொடுமைகளில் இருந்து விடுபட அவர்களுக்கு சரியான வழி யாகவும், ஒரே ஒரு வழியாகவும் இருந்தது.

- ஜெ.பார்த்தசாரதி
‘பிற்படுத்தப்பட்டோரின் குரல்’ ஜூலை 2017

********************************************

200 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி தன் இரு மார்பகங்களையும் அரிவாளால் வெட்டியெடுத்து, குருதி வடிய ஒரு வாழையிலையில் வைத்து மன்னனுக்கு அனுப்பி வைத்தாள். மனுதர்மவாதிகளின் பிடியில் நசுக்கப்பட்ட மக்களின் நேற்றைய வரலாறு இது! தலித்துகளுக்கு சோப்பு அனுப்பும் யோகி! மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மோடி! எங்கும் எதிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்! நாடு எதை நோக்கிச் செல்கிறது? அச்சம் எழுகிறது! சாணக்கியர்களின் சதி வலையில் சிக்கப் போகிறதா இந்நாடு? சமூக நீதியில் ஆர்வமுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அதற்கு ஒரு தூண்டுகோலாக 200 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் நிகழ்ந்த அவலங்களில் சிலவற்றை வெளியிட்டிருக்கிறோம். இந்த இதழில் திரு.வேயுறுதோளிபங்கனின் Apartheid in priesthood & the role of the Apex Court! ஆங்கிலத் தொடர் கட்டுரையில் அளிக்கப்பட்டிருந்த ஆதாரங்களைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner