எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  சஞ்சய் ஹெக்டே

 

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதி மன்ற வராந்தாவில் பேசிக் கொண்டிருந்த போது பாலி நாரிமன்  "அறுதிப் பெரும்பான்மை பெற்றி ருக்கும் அரசு நீதித் துறையின் ஆதரவைப் பெற்றிருக்கும்" என்று என்னிடம் கூறினார்.  கடந்த கால அனுப வங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறினார். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை அளித்து இந்தியா ஒரு மத்திய அரசை தேர்ந் தெடுத்தது.

நாட்டில் நெருக்கடி காலம் அறிமுகப்படுத்தப்பட்டி ருந்த போது,  உச்ச நீதிமன்றம்  ஜபல்பூர் குற்றவியல் கூடுதல் மாஜிஸ்டிரேட் வழக்கின் தீர்ப்பில், "உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை  நிரந்த மாகவோ அல்லது தற்காலிகமாகவோ அரசி னால் நீக்க இயலும்" என்று கூறப்பட்டிருந்தது. நெருக்கடி நிலை காலத்தில் இந்த உயிர் வாழும் உரிமை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதா என்று நீதியரசர் எச்.ஆர்.கன்னா கேட்டபோது, அட்வகேட் ஜெனரல் நிரேன் டே, " மக்களின் உயிர் சட்டத் திற்குப் புறம்பான வழியில் எடுத்துக் கொள்ளப் பட்டாலும், அது பற்றி நீதிமன்றங்கள் எதுவும் செய்ய முடியாது" என்று பதிலளித்தார். அய்ந்து நீதிபதி அமர்வின் நான்கு நீதிபதிகள் அரசின் அதி காரத்துக்கு அடிபணிந்து ஆதரவாகத் தீர்ப்பளித் தனர். நீதியரசர் கன்னா ஒருவர் மட்டுமே அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தவர்.

அவ்வாறு அரசின் அதிகாரத்துக்கு நீதிபதிகள் அடிபணிந்து போவது என்பது  பற்றிய அவமானத் திற்குத் தொடர்ந்து பதவிக்கு வந்த  ஒவ்வொரு நீதிபதியும் உள்ளாக வேண்டி நேர்ந்தது. அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதியரசர்கள் ஒய்.வி. சந்திரசூடும்,  பி.என். பகவதியும், தங்களது பதவிக் காலம் முடிந்து செல்லும்போது,  அந்தத் தீர்ப்பு அளித்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ஆனால், சல்மான் ருஷ்டி எழுதியது போல, "அவ மானமானதும் மற்ற அனைத்தையும் போன்றதே. அதனுடன் நீண்டதொரு காலம் வாழ்ந்தால், நமது தளவாடப் பொருள்களில் ஒன்றாக அதுவும் ஆகி விடுகிறது." ஒரு எதேச்சதிகார  ஆட்சியின் முன்னி லையில், நீதித்துறை துணிவற்றதாக ஆகிப்போவது ஒன்றும் எதிர்பார்க்க இயலாத ஒன்றல்ல.

பின்வாங்குவதற்கான எடுத்துக்காட்டு

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு பிற்போக்குத் தனமான நீதித் துறையை நாம் பார்த்து வந்திருக் கிறோம். இது நாரிமன் கூறியதை மெய்ப்பிப்பதாக இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய வழக்கை விசாரித்து விரைந்த தீர்ப்பை அளிப்பதற்கு பதிலாக, அதனை மற்றொரு அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பி வைக்க உச்சநீதி மன்ற அமர்வு தீர்மானித்தது. அதனால் அரசின் நடவடிக்கைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு பயனற்றதாகப் போய் விட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முன்னாள் தலைவர் கண்ணைய குமாரும், பத்திரிகையாளர்களும், உச்ச நீதிமன்றத்திற்கு வெகு அருகிலேயே இருக்கும் பாடியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட போதும் கூட, உச்சநீதிமன்றம் தனது கடுங்கோபத்தை மென்று விழுங்கிக் கொண்டது. பிர்லா -சஹாரா டைரி வழக்கினை விசாரணை செய்வதில் ஆகட்டும், ஒரு குற்றவியல் வழக்கில் இருந்து அமித் ஷாவிடுவிக்கப் பட்டதை எதிர்த்து ஹர்ஷ் மந்தரால் தாக்கல் செய்த மனுவை விசாரித்து அனுமதிக்க மறுத்துவிட்டது பற்றியதாக இருக்கட்டும், அரசுக்கு எதிரான வழக்குகளில் நீதித் துறை பின்வாங்குவதற்கு இவை சரியான எடுத்துக் காட்டுகள் ஆகும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ஒன்றை மட்டுமே நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மனித உரிமைகள் மறுபடியும் தாக்குதல்களுக்கு உள்ளாகிப் போனதொரு நேரத்தில்,   தனிப்பட்ட ரகசியம் பேணுவதற்கான தங்களின் உரிமைகளை, ஆதார் புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் பறித்துக் கொண்டது பற்றி தொடரப்பட்ட  வழக்கில்  தங்களின் பக்கத்தில் நீதிமன்றம் உறுதியாக நிற்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கத்தான் செய்தது.

அரசுக்கு எதிரான குடிமக்களின் சவாலுக்கு பதிலளித்த மத்திய அரசு, தனிமனித ரகசியம் பேணும் அடிப்படை உரிமை எதுவும் குடிமக்களுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்தது. 1954 இல் எட்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு,  எம்.பி.சர்மாவின் வழக்கில் வழங்கிய தீர்ப்பு மற்றும்  1962 இல் 6 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புகளின் அடிப் படையில் மத்திய அரசு இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தது. தனிமனித ரகசியம் பேணும் உரிமை என்று எதுவும் அரசமைப்புச் சட்டத்தில் இல்லை  என்று இந்த இரு தீர்ப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாகவே தெரிகிறது. ஆனால், அதற்குப் பிறகு, குறைந்த எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளின் அமர்வுகளில்  நடைபெற்ற வழக்குகள் அனைத் திலும், அது போன்றதொரு உரிமை இருப்பதாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரப் பட்டுள்ளது.

தனிமனித ரகசியம் பேணும் அடிப்படை உரிமை மக்களுக்கு இருக்கிறது என்ற எண்ணத்துடனேயே, இரண்டு தலை முறை இந்தியர்கள் வளர்ந்து வந்துள்ளனர். ஆனால், ஒன்றுக்கொன்று முரண் பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாக, குறைந்தது ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நீதிபதிகளின் பணிச் சுமையையும், அவர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் நீதித்துறை நிர்வாகத்துக்கு ஏற்பட இயன்ற இடையூறு களையும் பார்க்கும்போது, ஒன்பது நீதிபதிகளை இதற்காகத் திரட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அத்தகைய அமர்வு ஒன்றை உருவாக்க இரண்டாண்டு காலம் ஆகியது. இதற் கிடையில் குடிமக்களின் ஒவ்வொரு செயல்பாட்டு அம்சத்தின் மீதும் ஆதாரைக் கட்டாயமாகத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வந்தது.

தனிமனித ரகசியம் பேணும் அடிப்படை உரிமை என்று எதுவும் இல்லை என்னும், 1962 க்குப் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்தும் தவறானவை என்னும் கடினமானதொரு நிலையை மத்திய அரசு மேற்கொண்டது. அரசின் வாதத்தை ஒரு நீதிபதியும் ஏற்றுக் கொள்ளாமல், ஒன்பது பேரும் ஒரு மனதாக அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கினர். தனிமனித ரகசியம் பேணும் உரிமை அரசமைப்புச் சட்டப்படி யான அடிப்படை உரிமையே என்று அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பில், இது பற்றி பல ஆண்டு காலம் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய சட்ட விளக்கத்தையும் அமர்வு அளித்து. எம்.பி.சர்மாவும், கரக்சிங்கும் மேற்கொண்டிருந்த கோட்பாட்டு நிலை சட்டப்படி செல்லாது என்று சந்தேகத்திற்கு இட மின்றி தீர்ப்பளித்துள்ளது. 547 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் ஏறக்குறைய பாதி அளவு நீதியரசர் டி. ஒய். சந்திரசூடால் எழுதப்பட்டிருந்தது. தனிமனித ரகசியம் பேணும் உரிமை மனித கவுரவத்தின் ஒரு கூறாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்தை மற்ற அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். ஜபல்பூர் குற்றவியல் கூடுதல் மாஜிஸ்டிரேட் வழக்கில் தனது தந்தையும் ஒரு பகுதி என்பதால், அந்த 1962 ஆம் ஆண்டு தீர்ப்பை குறிப்பாகவும், வெளிப்படையாகவும்  செல்லாது என்று அவர் தீர்ப்பளித்தார். மேலும்,  ஓரினப் பாலியல் வழக்கங்களைக் குற்றம் என்று உறுதிப் படுத்திய சுரேஷ் கவுசலின் இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 377 பிரிவின் கீழான வழக்கில் நீதிமன்றத்தின் கண்ணோட்டமும் இந்தத் தீர்ப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 377 பிரிவு செல்லாது என்று அறிவிக்கக் கோரியுள்ள வழக்கு ஒன்று  உச்ச நீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வின் விசாரணையில் உள்ளது.

நீதியரசர்கள் என்ன தீர்ப்பளித்தார்கள்?

அரசமைப்புச் சட்டம், அதன் முன்னுரை, அதன் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஆகியவற்றின் பின் நிலவும் நியாயத் தன்மையின் வெளிப்பாட்டைப்  பற்றிய மிக அற்புதமான விளக்கத்தை  நீதியரசர் சலமேஸ்வர் வரைந்துள்ளார். அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகக் கருதப்படும் சட்ட விதிகள் உண்மையிலேயே, குடிமக்களின் சுதந்திரத்தில் தலையிடு வதற்கான அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையே  என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தனிமனித ரகசியம் பேணும் உரிமை ஓர் அடிப்படை உரிமையே என்று தீர்ப்பளித்த பின்னர், அந்த உரிமையில், மற்றவைகளுடன், ஒருவர் வீட்டில் எவரும் நுழையாமல் இருப்பதற்கான சுதந்திரம்,  தனது விருப்பப்படி உணவு உண்பதற்கும், உடை உடுப்பதற்குமான  சுதந்திரம், தான் விரும்பும் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான சுதந்திரம் ஆகியவையும் அடங்கும் என்பதை அவர் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். நீதியரசர் எஸ்.ஏ.பாப்டே தனது தீர்ப்பில், அரசமைப்புச் சட்டத்தினால் அங்கீ கரிக்கப்பட்டுள்ள  பல அடிப்படை உரிமைகளுடன் ஒருங்கிணைந்து இருப்பது தனிமனித ரகசியம் பேணும் உரிமை என்று கூறியுள்ளார். இந்த உரிமை மீறப்பட்டால், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்ப தற்கான அனைத்து சோதனைகளையும் அரசு மேற் கொள்ள வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தனிமனித ரகசியம் பேணும் உரிமையின் தோற்றத்தை, அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை மற்றும்  அடிப்படை உரிமைகள் பகுதி ஆகியவற்றில் தேடிக் காணும் நீதியரசர் ஏ.எம். சாப்ரே தனி மனித ரகசியம் பேணும் உரிமை என்பது மனிதனுடன் பிறந்து மனிதனுடன் இறந்து போவதுதான் என்றும்,  தனிமனித ரகசியம் பேணும் உரிமை மூலம் ஒவ்வொரு குடிமகனின் கவுரமும் பாதுகாக்கப் படுவது உறுதிப்படுத்திக் கொள்ளப்படும்போதுதான் நாடு ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்தும் இருக்கும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமைகள் ஒருங்கிணைந்த முறை யில் அளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்வ தற்கான பலமான வாதத்தை நீதியரசர் எஸ்.கே.கவுல் முன் வைக்கிறார். "டிஜிட்டல் ரேகைகள் மற்றும் விரிவான புள்ளி விவரங்கள் கணினிகள் மூலம் தொகுக்கப்பட்டு, பகுத்தாய்வு செய்யப்படும்போது கிடைக்கும்  பல வடிவங்களிலான, பல மாதிரி களிலான, பல போக்குகளிலான, குறிப்பாக, மனிதர் களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் கொள்ளும் தொடர்புகள் ஆகியவை மதிப்பு மிகுந்த தகவல் களாகும்." என்று கூறியுள்ள அவர்    அண்ணன் தம்பி மீது கொள்வது போல அரசு நம் மீதான கட்டுப்பாடுகளை மேற்கொள் வதற்காக அத்தகைய புள்ளிவிவரங்கள் பயன் படுத்திக் கொள்ளப்படுவது பற்றிய தனது கவலையையும் அவர் வெளியிட்டி ருக்கிறார்.

உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் கிடைக்காத மக்கள் வாழும் முன்னேறி வரும் ஒரு நாட்டில், தனிமனித ரகசியம் பேணும் உரிமை ஓர் அடிப்படை உரிமையாக இருக்க முடியாது என்ற அரசின் வாதத்தை நீதியரசர் ரோஹின்டன் நிராகரித்தார். தனி மனித ரகசியம் பேணும் உரிமை பணக்காரருக்கும், ஏழைக்கும் இருக்கிறது என்று தீர்ப்பளித்த அவர், "தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசுகளின் எண்ணங்கள் எப்படி இருந்தாலும், குடிமக்கள் அனுபவிப்பதற்கான அடிப் படை உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவில் அத் தகைய உரிமைகள் இருப் பது அங்கீகரிக்கப்பட்டுள் ளது என்பது பெரும்பான்மை பலம் பெற்ற ஆட் சிகள் மாறி மாறி வரும் நிலையில், ஒரு அங்கீகாரமாக இருப்பதேயாகும்.

பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றி ருக்கும் ஆட்சிக்கு  நீதித்துறை எப்போதுமே ஆதரவாக இருக்கும் என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க இயலாதது ஆகும். பெரும்பான்மை மக்கள் ஆதரவு பெற்ற அரசின் எதேச்சதிகார செயல்பாடுகளுக்கு நீதிமன்றங்கள்  தடை ஏற்படுத்தும் போது, அரசமைப்புச் சட்டம் விரிவு படுத்தப்பட்டு, பலப்படுத்தப்படுகிறது. நாட் டின் மிகப் பெரிய பாதுகாப்பு என்பதே, ஒவ்வொரு தனி மனிதரின் சுதந்திரங்களையும் பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் நீதியர சர்கள் உயர்ந்து நின்று, மக்களின் சுதந்திரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலையும் தகர்த்தெறிந்துள்ளனர். நீதியரசர்கள் பாலி நாரிமன் மற்றும் ஒய்.வி.சந்திரசூட் ஆகியோரின் கவலைகள் நீங்கி,  நெருக்கடி கால குற்ற உணர்வுகளும் அமைதி பெறட்டும்..

நன்றி: "தி இந்து", 04.09.2017

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner