எழுத்துரு அளவு Larger Font Smaller Font


(மதவாத வெறியர்களின் தொடர் படுகொலைக்கு பலியான  கருநாடக மாநில முற்போக்கு பகுத்தறிவுப் பத்திரிகையாளர்)

- வீ.குமரேசன்

கடந்த செவ்வாய் (5.9.2017) அன்று பெங்களூருவில் லங்கேஷ் பத்திரிகா வார ஏட்டின் ஆசிரியர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  சமூக நல்லிணக்க மன்றத்தினை (சிஷீனீனீuஸீணீறீ பிணீக்ஷீனீஷீஸீஹ் திஷீக்ஷீuனீ) நடத்தி சமுதாயப் பணியினை ஆற்றிவந்த கவுரி லங்கேஷ், முற்போக்கு எழுத்தாளர் மறைந்த பி.லங்கேஷ் அவர்களின் மகளாவார்.  சமூகத்தில் நிலவிவரும் அடக்குமுறை, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடி வந்த குடும்பத்தில் பிறந்தவர்.  கவுரி லங்கேஷ் அவர்களும் ஒரு சமூகப் போராளியாகவே வாழ்ந்தவர்.

மராட்டிய மாநிலத்தில் பகுத்தறிவாளரும், மூடநம் பிக்கை தடுப்புச் சட்ட வரைவாளருமான நரேந்திர தபோல்கார் (2013), பொதுவுடமைச் சிந்தனையாளர்-பகுத்தறிவாளர் தோழர் கோவிந்த் பன்சாரே (2015), கர்நாடக மாநிலக் கல்வியாளரும், கல்வெட்டு ஆய் வறிஞருமான எம்.எம்.கல்புர்கி  (2015) ஆகியோர் படு கொலை செய்யப்பட்ட முறையிலேயே கவுரி லங் கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மூன்று போராளிகளின் கொலை பற்றிய விசாரணை அசாதாரணமாக நீடித்த நிலையில் அந்தக் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதற்குள் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  முந்தைய கொலைகள் பற்றிய காரணங்களை அறிந்துகொள்வதில் அபரிமிதமான தாமதம், கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்காத நிலையாலேயே கவுரி லங்கேஷ் கொலைக்கு ஆளாக நேர்ந்ததோ எனும் அய்யப்பாடு பரவலாக உள்ளது.  இந்த நான்கு போராளிகளும் கொலை செய்யப்பட்ட முறையில் ஒரே வித அணுகுமுறை பொது அய்யப்பாட்டை உறுதி செய்வதாக உள்ளது.

முற்போக்குக் கருத்துகளைக் கொண்ட எழுத்தாளர் களுக்கு, பத்திரிகையாளர்னளுக்கு, வன்முறை தவிர்த்த களப் போராளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை நீடித்து வருவதை போராளி கவுரியின் படுகொலை நிரூபித்து விட்டது.

பத்திரிகைப் போராளி கவுரி லங்கேஷின் பொது வாழ்க்கைப் பயணத்தின் உயிரோட்டம் மனிதநேய உணர்வே. மனிதர்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்ற பொழுது, அறியாமையில் உழன்று அல்லல்படுகின்ற பொழுது ஆதரவுக் கரம் கொடுக்கும், குரலுக்குச் சொந்தகாரராக கவுரி லங்கேஷ் விளங்கி வந்துள்ளார்.  மதவாத சக்திகளை, காவிக் கும்பலின் அராஜகச் செயல்களைத் துணிச்சலாகச் சாடி வந்திருக்கிறார்.  மூடநம்பிக்கை, பழக்க வழக்கங்களை ஒழித்திட தீவிர பிரச்சாரத்தில் இருந்து வந்தார். எடுத்துக்காட்டாக எச்சில் இலை மீது தாழ்த்தப்பட்ட மக்கள் உருண்டு தமது வேண்டுதலைக் கோரும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக் கொண்டு காட்டு மிராண்டி போல தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்ற கருநாடக மாநிலக் கோயில்களில் தொடரும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க சட்டம் இயற்றிட தொடர்ந்து எழுதிவந்தார்.  அதற்காகக் களம் இறங்கி போராடியும் வந்தார்.

கவுரி லங்கேஷின் எழுத்து, களப்பணி கருநாடக மாநில மக்கள் சார்ந்தது மட்டுமல்ல; அதனையும் தாண்டி மனித நேயம் சார்ந்ததாக தொடர்ந்துள்ளது.  கடந்த காலத்தில் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் கருநாடக வாழ் தமிழர்கள், கன்னட வெறியர்களால் தாக்குதலுக்கு ஆளானபொழுது கண்டனக் குரல் கவுரி லங்கேஷிடமிருந்து கிளம்பியது.

கவுரி லங்கேஷின் மனிதநேயம் மாநிலம் சார்ந்து மட்டுமல்ல; நாடு தழுவிய நிலையில் மட்டுமல்ல; உலக மானுடம் பற்றி இருந்தது.  இந்நாட்டிலுள்ள மத வெறி சக்திகளுக்கு எதிராக நின்றது மட்டுமல்லாமல் மியான் மரில் பவுத்த மத வெறியினை எதிர்த்தும் குரல் கொடுத்து,  மியான்மர் நாட்டு முசுலீம் ரோஹிங்கியா இன மக்களின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து,  ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த கவுரி லங்கேஷ் இந்நாட்டு மதவெறி அடக்கு முறைக்கு பலியாகிவிட்டார்.

மியான்மர் நாட்டு ரோஹிங்கியா இன மக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்துள்ள நிலையில் அவர்களை உடனே மியான்மருக்கு அனுப்பக் கூடாது என்று தனது ஏட்டிற்கான தலையங்கத்தினை எழுதி முடித்துவிட்டு பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கிளம்பி இரவு 7.30 மணிக்கு தமது இல்லம் வந்து சேர்ந்து, தான் ஓட்டி வந்த காரை விட்டு இறங்கி வாயில் கதவை திறந்திட முனைந்த பொழுது அடக்கு முறை வெறியாளனின் முதல் துப்பாக்கிக் குண்டிலேயே சாய்ந்தார்.  கீழே விழும் கவுரி லங்கேஷ் உயிர் பிழைத் திடக் கூடாது என மீண்டும் மூன்று துப்பாக்கித் தோட் டாக்கள் அவரது உடலில் பாய்ந்தன.  அந்த இடத்தி லேயே அவரது உயிர் பறிக்கப்பட்டது.

கவுரி லங்கேஷ்  குடும்பப் பின்னணியும் முற் போக்குக் கொள்கை சார்ந்ததாக இருந்து வந்துள்ளது.  அவரது தந்தை லங்கேஷ் தனது பெயரிலேயே - வரலாற்று காலத்துக்கு முன்பான அடக்கு முறைக்குப் பலியான, ஆதிக்கப் போக்கிற்கு பலியான இராவணப் பெயரிலேயே, பொது வாழ்க்கையில் தாம் நடத்திய பத்திரிகைக்கு லங்கேஷ் பத்திரிகா என்றுதான் பெயர் வைத்திருந்தார்.  தனது மகனுக்கு, (கவுரி லங்கேஷ் சகோதரர்) - இராவணனின் மகன் இந்திரஜித் பெயரையே வைத்தார்.  மூடநம்பிக்கை ஒழிப்பு வெறும் பிரச்சாரத்தில் மட்டும் என்றில்லாமல் சொந்த குடும்ப வாழ்க்கையிலும் மூடநம்பிக்கையினை கடைப்பிடிக் காமல், மூட பழக்கவழக்கங்களுக்கு எதிர்ப்பாளராக வாழ்ந்து வரும் குடும்பம்.

மிகவும் பிரபலமான பல முற்போக்காளர்கள், தாம் உயிரோடு இருக்கும் பொழுது தனிப்பட்ட முறையில் முற்போக்காளர்களாக இருந்துள்ளனர்.  குடும்பச் சூழலை, குடும்பத்தினரை முற்போக்குத் தன்மைக்கு ஏற்றவாறு பக்குவப்படுத்தாதோர்தான் மிகப்பலர்.  இதற்கு முற்றிலும் மாறாக படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷின் இறுதி நிகழ்ச்சி - அந்த துயரம் சார்ந்த சூழலிலும், மூடநம்பிக்கைச் சடங்குகளைத் தவிர்த்து அவர் ஒரு பகுத்தறிவாளர் என உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையில் நடந்தது; கவுரி லங்கேஷின் முற்போக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது.

பகுத்தறிவு, பொதுவுடைமை, சமத்துவம் நிறைந்த சமுதாயம்தான் மனிதரை நேயத்துடன் வாழச் செய் திடும் என்பதில் அசையாத நம்பிக்கை, செயல்பாடு கொண்டு கவுரி லங்கேஷ் வாழ்ந்துள்ளார்.  எழுத்தும், களப்பணியும் ஒருவருக்கு சேர்ந்து கைக்கூடுவது காணுவதற்கு அரியது.  ஒரு பத்திரிகையாளர் களப் போராளியாகவும் இருப்பது அதனிலும் அரியது.  சிந்தனைக் கூர்மை, செயலாக்கிடும் முனைப்பு உள்ள வர்களுக்குத்தான் அது சாத்தியப்படும்.  ஒரு பத்திரி கையாளர், களச்செயல்பாட்டாளராகவும் செழித்திட முடியும் என்பதற்கு ஒரு வழிகாட்டுதலாக, விளங்கி விட்டார் கவுரி லங்கேஷ்.  மதவெறிச் சக்திகளின் சகிப் புத் தன்மையற்ற போக்கிற்கு களப்பலி ஆகிவிட்டார்.  மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் கருத்துகளை கருத்துகளால் நேர் கொள்ளும் போக்கினைத் தவிர்க்கும் வகையில் வன்முறை, கொலை நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன, மத்தியில் ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களும் இத்தகைய போக்கினை கடுமையாகக் கண் டிக்கும் நிலையில் இல்லை; இது வன்முறையாளர் களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்க் கொண்டிருக் கிறது.  மக்களாட்சியில் அரசியலமைப்பின் உயிரோட் டம் மாறுபட்ட கருத்து வெளிப்பாடுதான். சுதந்திர பேச்சுரிமையில் தான் அடங்கியுள்ளது.  அத்தகைய உரிமைகளை மதிக்கின்ற மனப்பான்மை சமுதாயத்தில் நிலவிட வேண்டும்.  குறைந்த பட்சம் மாற்றுக் கருத் தினை மட்டுப்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும், மதிக்கின்ற மனப்பான்மை யினை போற்றுகின்ற வகையிலும் பொது மக்களது குரல் ஓங்கிடவேண்டும்.

வன்முறையில் இறங்கி, உயிரைப் பறித்து விட்டு விசாரணை நீதிமன்ற நடவடிக்கையினைத் தாமதப் படுத்தி வன்முறையினை வளர்த்துவிடலாம் என நினைப்பவர்கள், அதற்கு ஆதரவாக சிந்தனைகள், செயலாக்கிட நினைக்கும் அமைப்புகளை இனம் கண்டு புறக்கணிக்கும் போக்கினை பெருக்குவதே மானுட நேயம் பரவிட தன்னுயிர் ஈந்த கவுரி லங்கேஷ்க்கு உண்மையாகச் செலுத்தப்படும் மரியாதை ஆகும்.

"கோழையே !

உன்னிடம் தோட்டாக்கள்

என்னிடம் அழியாத வார்த்தைகள்

எதற்கும் அஞ்சமாட்டேன்

நான் கவுரி லங்கேஷ்!"

துணிச்சலின் மறுபெயராக ஒளி வீசிய கவுரி லங்கேஷ் உடலால் மறைந்து விட்டார்.

அவரது உயிர் துறப்பின் காரணங்கள் உயிர்ப்புடன் வாழும்.  உண்மைக்கு என்றும் அழிவில்லை; உலகம் உண்மையினை உய்த்துணரும் நாள் விரைவில் வந்திட உறுதி கொள்வோம். உரியன செய்வோம். வாழ்க கவுரி லங்கேஷ்!

(திராவிடர் கழகத்தின் சார்பாக, இன்று (10.9.2017) சென்னை - பெரியார் திடலில் பகுத்தறிவாளர் - பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்க்கு படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner